தமிழ்நெறி விளக்கம் 4
வழுத்தூர் காக்கும் புணையின்
விழுத்துணை சான்ற மிகுபெருங் கிளையே”         (6) (களவியற். 25, மேற்.)

    என்பது பாங்கனை நினைத்து ஆற்றிப் பெயர்ந்தது.(15)

2. பாங்கற்கூட்டம்

16.வினாதலும் விடுத்தலுங் கழறலு மறுத்தலும்
  நோதலும் யாண்டென வின்னுழி யென்றலும்
  மாதரைக் காண்டலு மன்னிய வகுத்தலும்
  கிழவோற் கிசைத்தலு மாற்றான் கிளத்தலும்
5.பழவரை விடுத்தலும் பாங்கற் கூட்டம்.

     (எ-து.)பாங்கற்கூட்டம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.)    பாங்கன்    தலைமகற்குற்ற    வினாதலும்,   தலைமகன்
இன்னதென்றலும்,  பாங்கன்  கழறலும்,  தலைமகன்  கழற்றெதிர்  மறுத்தலும்,
பாங்கன் நோதலும், எவ்விடத் தெவ்வுருவென்றலும், தலைமகன் இன்னவிடத்து
இன்னவுரு   வென்றலும்,   பாங்கன்   அவ்விடத்து  அவ்வுருக்  காண்டலும்,
தலைமகனைப் பெருமை கூறலும், பெயர்ந்து வந்து தலைமகற்கு  உரைத்தலும்,
தலைமகன்  தலைமகளைக்  கண்டு  அணைதலும்,  உறவினாற்றான்  கூறலும்,
விடுத்தலும் பாங்கற் கூட்டமா மென்றவாறு.

1.“முன்னினை முடிப்பதொன் றுளதுகொன் 1மூவகை
நுண்ணிய பனுவலி னுழைந்துகொல்
என்னைகொல் வாடிய தண்ணனின் னெழிலே”(7)

    என்பது வினாதல்.

2.‘சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை
கான யானை யணங்கி யாஅங்
கிளையண் முளைவா ளெயிற்றள்
வளையுடைக் கையளெம் மணங்கியோளே”(குறுந்-119)

    என்பது பாங்கற்குத் தலைமகன் கூறியது.

3.“பொருந்தா தம்ம புனையிழை யரிவை
முருந்தேர் முறுவ னோக்கின்
வருந்தின னென்பது பெருந்தகை பெரிதே” (8) (களவியற்.. 26. மேற்)
     என்பது பாங்கன் கழறியது.


1. மூவகைப்பனுவல் - இயல் இசை நாடகமாகிய முத்தமிழ்நூல்கள்.

2. பெருந்தகை பெரிதே வருந்தினனென்பது பொருந்தாதெனக் கூட்டுக.