அர் ஆர் அர்கள் ஆர்கள் கள் மார் என்று சொல்லப்பட்ட எழுவாய் வேற்றுமைப் பிரத்தியமேழும் வரும்; 1 வருமிடத்து ஒருவனைக் கருதின சொல்லின் பின்னும் ஒருத்தியைக் கருதின சொல்லின் பின்னும் ஒன்றைக் கருதின சொல்லின் பின்னும் சு என்னும் பிரத்தியமொன்றே வரும்; பலவைக் கருதின சொல்லின் பின்பு சு கள் என்னும் பிரத்தியமிரண்டும் வரும்; எல்லா இடத்தும் சு என்னும் பிரத்தியமழிந்தே வரும்.
எல்லாவிடத்தும் அழியுமாயின் வருதற்குக் காரணமென்னெனின், வடமொழியுடையான் வாரியென்னுஞ் சொல்லை வைத்து முதல் வேற்றுமை ஏக வசனத்தைப் பொருள் விளக்குதற் பொருட்டு எவ்வண்ணம் இட்டழித்தான், இவனும் அது போல ஆக்கி அழித்தாலல்லாது பதமாகாதென்று இட்டழித்தான் என்க. ஒருவனைச் சிறப்பித்த சொல்லின் பின்பும் ஒருத்தியைச் சிறப்பித்த சொல்லின் பின்பும் ஒன்றைச் சிறப்பித்த சொல்லின் பின்பும் அர் ஆர் அர்கள் ஆர்கள் கள் மார் என்னும் ஆறு பிரத்தியமும் வரும். இவை எல்லாவிடத்துமாவனவல்ல. பலரைக் கருதின சொல்லின் பின்பு ஆறுபிரத்தியமுமாம் (எ-று.)
சாத்தன் - கொற்றன் என ஒருவனைக் கருதின சொல்லின் பின்பும், சாத்தி-கொற்றி என ஒருத்தியைக் கருதின சொல்லின் பின்பும், யானை-குதிரை என ஒன்றைக் கருதின சொல்லின் பின்பும், சு -என்னும் எழுவாய் வேற்றுமைப் பிரத்தியம் நிறுத்துக. நிறுத்தவே, சொல்லின் பொருண்மாத்திரத்தை விளக்கிற்றாம். சொல்லாவது, சாத்தனென்றுச்சரிக்கப்படாநின்ற சொல். அதன் பொருளாவது, கரசரணாதியவயவங்களை உடையதொரு பிண்டமாய் 'சாத்தனாவான் எவன்?' என்று வினாவினார்க்கு 'இவன்' என நின்னாற்சொல்லப்படுகின்றான் யாவன், அவன் எனக் கொள்க. 'எங்குமழியுமேறிய சு' என்பதனால், அச்சொற்களின் பின்பு நின்ற சுவ்வை உலோபித்துச் சாத்தன், கொற்றனென்று உச்சரித்துக் கொள்க.
1. "பெயர்க்கு ரூப பேதங் காட்டும் வேற்றுமையுருபு வடமொழிக் கல்லது தமிழ் மொழிக்கு இல்லாமை கண்டு, 'எழுவாய் விபத்தி திரிபில் பெயரே' என்றாம்" என்பது பிரயோக விவேகம். (சூ. 8 விசேட உரை.) இதனால், தமிழில் முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பது அந்நூலின் கருத்தாதல் அறிக.