என்புழி மற்றுஞ் சிலரால் இயற்றப்படுந் தன்மை இன்றித் தாங்களே கருத்தாத் தன்மை எய்தினமையால், இவையிற்றிற் கருத்தா தலைமைக் கருத்தாவாயிற்று.
ஊரினின்றும் போனான் தேவதத்தன்.
மலையினின்றிழிந்தார் முனிவர்.
என்புழி, ஊரும் மலையும் துளக்கம் இல்லா அவதியாதலால், அசலம் என்னும் அவதியாயிற்று.
குதிரையினின்று விழுந்தான் சாத்தன்.
யானையினின்று இறங்கினான் கொற்றன்.
என்புழிக் குதிரையும் யானையும் துளக்கமுடைய அவதியாதலால், சலம் என்னும் அவதியாயிற்று.
கோடாலியான் மரத்தை வெட்டினான் கொற்றன்.
என்புழி, மரம் வெட்டுதற்குக் கரணமாய் நின்ற கோடாலி கருத்தாவாய் நின்ற கொற்றனுக்கு அவயவம் அன்றாதலால், புறக்கரணமாயிற்று; 'வாளினாலே வெட்டினான்; கத்தியால் அறுத்தான்' என்பனவும் அது.
கண்ணினாற்கண்டான்.
என்புழிக் காண்பதற்குக் கரணமாய் நின்ற கண், கருத்தாவிற்கு உறுப்பாதலால், அகக் கரணமாயிற்று; 'செவியினாற்கேட்டான், நெஞ்சினால் நினைந்தான்' என்பனவும் அது.
அருந்தவர்க்கு ஊண் கொடுத்தான்.
என்புழி, அருந்தவர் ஆர்வத்தோடு கொண்டமையானும், கருத்தா ஆர்வத்தோடு கொடுத்தமையானும் ஆர்வக் கோளியாயிற்று; 'விருந்தினர்க்கு இடங் கொடுத்தான்' என்பதும் அது.
தேவர்க்குப் பூவிட்டான்.
என்புழி, தேவர் தமக்குப் பூவேண்டும் என்றிரந்திலாமையானும், இல்வாழ்வானுக்கு இயல்பாதலானுங் கிடப்புக் கோளியாயிற்று; 'செய்க்கு நீர் பாய்ச்சினான்; ஆவுக்கு நீர் கொடுத்தான்' என்பனவும் அது.
அந்தணர்க்குப் பொன் கொடுத்தான் அரசன்.
என்புழி, அந்தணர் வேண்டும் என்று இரந்து பெறுதலின் இரப்புக் கோளியாயிற்று; 'இரவலர்க்குப் பிச்சை இட்டான்' என்பதும் அது.