இன்னவரும் செய்யுட் செயத் தக்கார் என்பது
   
100. +இறப்பு நிகழ்வெதி ரானமுக் காலத்தில் எப்பொருளும்
திறத்துணர்ந் தோர்சாவு வாழ்வு முரைக்குஞ்செந்                                   நாப்புலவர்
அறத்துறை நீங்கா வருளினர் நான்கு வருணத்தினும்
பிறப்பிழிந் தோரென்னி னும்மவர் பாடிற் பெருநலனே.

     (உரை I).
எ - ன், கழிவு எதிர்வு நிகழ்ச்சியென்னும் மூன்று
காலத்துப் பொருளும் தோன்ற உணர்ந்தோர், சாவு வாழ்வுரைக்கும்
செந்நாப்புலவர், அறத்தினை நீங்காதவர், அருளினை யுடையோர்,
நான்கு வருணத்திற் பிறப்பிற்றாழ்ந்தோர் எனினும் அவர் பாடின்
நன்மையாம் எ - று. (32)