நாம மாலை, புகழ்ச்சி மாலை, வஞ்சி மாலை
   
48. 1பாதம் பலமயங் கும்வஞ்சி யாடவ ரைப்பரவி
2ஓது மதுநாம மாலை யுரைத்தவச் செய்யுளினால்
மாதரை யேத்திற் புகழ்ச்சிநன் மாலைமற் றெப்பொருளும்
நீதியி னாற்சொல்லி 3னப்பெய ரால்வஞ்சி நேர்ந்தனவே.

     (உரை I).
எ - ன். எல்லாவடியும் மயங்கிய வஞ்சிப்பாவால்
ஆடவரைப் புகழ்ந்து பாடுதல் நாம மாலையாம்; பெண்களைப்
புகழ்ந்து பாடிற் புகழ்ச்சி மாலையாம் என்றவாறு; மற்றெல்லாப்
பொருளானும் வஞ்சிப்பாவிற் (பாடின்) வஞ்சி மாலையாம் எ - று.

     அவை வரலாற்றுவஞ்சி அமர்க்களவஞ்சி என்பன போல்வன.

“அராகம் வெள்ளை யகவல் முதலின்
ஆசிரியம் வஞ்சி மெல்லியர்ப் புகழினும்
வரைத லிலவென வுரைசெய்வர் புலவர்”

என்பது முள்ளியார் கவித்தொகை.

     (உரை II). எ - து.........வஞ்சிப்பா அறுபதினாலே மடந்தைப்
பருவத்துப் பொதுமகளிரைப் புகழ்ந்து பாடுவது புகழ்ச்சி
மாலையென்று வழங்கப்படும்; வஞ்சிப்பாவினாலே நீதிப் பொருள்
அனைத்தும் சொல்லுவது வஞ்சிமாலை எனப்படும் எ - று.

     இந்த வஞ்சிப்பாவினாலே நாமமாலை பதினாறு வயசின்
இளைஞராய்ச் சவுரியவான்களாய்ச் சமர்முகத்திலே சாமர்த்திய
முதன்மை யுடையவர்களுக்குப் பாடலாம். மற்றவர்களுக்குப்
பாடலாகாது.

     (கு - ரை). ஒருவனுடைய வனப்பு, ஆற்றல், கல்வி, மரபு,
குணம், குடி முதலியவற்றை வஞ்சியால் வழுத்துவது வரலாற்று
வஞ்சியாம், அமர்க்கள வஞ்சி என்பது செருக்கள வஞ்சி எனவும்
வழங்கும் செருவில் மாண்டாருடலையும், கரியுடல், பரியுடலையும்
காகம், கழுகு, நாய், நரி, பேய் முதலியவை தின்று களத்தாடும்
சிறப்பைச் செப்பல் இதுவாம்.


     (பி - ம்.) 1 ‘பாதம் மயங்கும்வஞ் சிப்பாட்டி லாட
வரைப்பரவி. 2 ‘ஓதில’ 3 ‘னப்போது நால் வஞ்சி’   (23)