தானப் பொருத்தம்
   
6. குறிலைந்துந் 1தந்நெடில் கூட்டிஐ ஒளஎஒக்
                                கொண்டடைவே
முறைமையிற் பாலன் குமர னரசன்மூப் பேமரணம்
இறையவன் றன்பெயர் தான்பால னாமென எண்ணிவந்த
நெறிமையின் மூப்பும் மரணமும் பாடிடல் 2நீக்குவரே.

     (உரை I)
. எ - ன், தானம் ஐந்தும் ஆமாறு உணர்த்......று

     (பி - ம்.) 1 ‘நன்னெடில் கூடி’ 2 ‘நீக்கினரே
  

     (இ - ள்.)இவை கொள்ளுமிடத்துப் பாட்டுடைத் தலைமகன்
இயற்பெயர் முதலெழுத்தைப் பாலனாகக் கொண்டு, முறையே
எண்ணி மூப்பும் மரணமுமாம் வருக்க எழுத்துக்கள் மங்கலச்சொல்
முதலெழுத்தின்கண் வரின் அவை அப்பெயர்க்கண்
நன்மையாகாவென நீக்குவர் எ - று.

“தன்பெயரெழுத்துப் பால னாக
வந்த மூப்பும் மரணமும் வரைப”,
- மாமூலம்.

“நட்புதா சீனம் பகையென் றுள்ளம்
ஒப்புடைக் குறிக ளொருமூன் றாகும்.”

“பாலன் குமார னிராசத மென்னும்
மூவகைத் தானமும் நட்பென மொழிப.”

“விருத்த முதாசீன மரணம் பகையென
எடுத்துப் பகர வேண்டு மென்ப.”


     (உரை II).
பாலன் ............ மரணம் என ஐந்து வகைப்பட்ட
தானம் உண்டு. அவை கொள்ளுமிடத்து முதற்சீர் முதலெழுத்திற்
கூடிவரும் உயிரெழுத்து அகரமும் ஆகாரமும் பாலன்; இகரமும்
ஈகாரமும் குமரன்; உகரமும் ஊகாரமும் அரசன்; எகரமும் ஏகாரமும்
ஐகாரமும் மூப்பு; ஒகரமும் ஓகாரமும் ஒளகாரமும் மரணம். இது
பார்க்கும் வகை: பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்துயிரும்
பிரபந்த முதற்சீர் முதலெழுத்துயிரும் ஓர் உயிரெழுத்தாகில் அது
பாலன்; தலைவன் பெயர் முதலெழுத்துக்கு இரண்டாவது உயிராகில்
குமரன்; மூன்றாவது உயிராகில் அரசன்; நாலாம் உயிராகில் மூப்பு;
ஐந்தாம் உயிராகில் மரணம்.

“மூப்பும் மரணமும் மொழிந்த காலை
நிலையிற் குலைதல் செல்வம் நீங்குதல்
கொலையிற் பிணியிற் கூட்டுத லாகும்”

என்பது இந்திரகாளியார் என்னும் ஆசிரியராற் கூறப்பட்டது.


     (கு-ரை.)
இறையவன்-பாட்டுடைத்தலைவன். உதாரணம்:
குலோத்துங்கன் என்ற பெயருக்கு முதல் தானம் உ, ஊ; இரண்டாம்
தானம்எ, ஏ, ஐ; மூன்றாம் தானம், ஒ, ஓ, ஒள; நான்காம் தானம் அ,
ஆ; ஐந்தாம் தானம் இ, ஈ, ஆகும். இவற்றுள் முதல் மூன்று
தானங்களின் எழுத்துக்கள் நூலின் முதற்சீர் முதலெழுத்தாகக்
கொள்ளத்தக்கவையாகும். (6)