செய்யுள் மொழியின் முறைமை
   
81. தானைத் தலைவரை யேவல்பெற் றாரைத்                                தனிவெண்குடைக்
கோனை யடுத்த பகைவரைக் கூறுலுங் கோற்றொழிலால்
ஏனைக் குறுநில மன்னவர் தங்களை மன்னரென்ன
மானப் புகழ்தலுஞ் செய்யுண் மொழியின் மரபென்பரே.

     (உரை I). எ - ன், ஒருசார் அரசர்க்கோதிய இலக்கணம்
உணர்த்........று.

     (இ - ள்). தானைத் தலைவரை, ஏவல் பெற்றாரை, தமது
நாயகமாகியவரை அடுத்தவரது பகைவரைக் கோன்றொழிலாற்
கூறலும், ஒழிந்த குறுநில மன்னரை முடியுடை மன்னவர் போல
உரைத்தலும் செய்யுண் மொழியின் முறைமை எ - று.

“அரச னருள்பெறி னெல்லார்க்கு முரித்தே
காணிகை தவிர்தலும் விரித்துரை வேண்டலும்
ஓங்கிய சிந்தையொடு தெய்வம் பணிதலும்
அறுபது முதலா வைம்பதிற் றிரட்டி
அனைவர்க்கு முரித்தே யாயுங் காலே”

என்பது
பொய்கையார் கலாவியல்.

     (உரை II). எ - து, தானைத்தலைவர் முதலாகிய பேர்களைக்
1குற்றளவுப் பாட்டினால் பாடலாம். குறுநில மன்னரை முடி புனைந்த
மன்னர்க்குச் சமமாகப் பாடலாம் எ - று.

     (கு - ரை.) தானைத்தலைவரை - சேனாபதிகளை. ஏவல்
பெற்றாரை - அரசன் ஏவும் காரியங்களைச் செய்யும்
உத்தியோகஸ்தரை ; 35 ; 40, உரை.


     (பி - ம்.) 1 ‘குற்றளவும்’ (13)