(உ-ம்) “எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே”1 (ஐங்குறு-175) இது அவட் பெற்று மலியுந் தலைவன் கூற்று. இனி, உள்ளப் புணர்ச்சியானின்றி யியற்கையிடையீடுபட்டுழி, பின் தலைமகள் குறியிடங் கூறியவழி யதனைப் பாங்கற் குரைத்தற்குச் செய்யுள்: “அணங்குடைப் பனித்துறைத் தொண்டி அன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழைப் பொங்கரி பரந்த உண்கண் அங்கலிழ் மேனி அசையியல் எமக்கே” 2 (ஐங்குறு-174) எனவுஞ் சிறுபான்மை வரும். “காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ஒவ்வேம் என்று” 3 (குறள்-1114) இது தலைவியைப் பகற்குறிக்கண்பெற்று மலிதல். “மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன்”4 (குறள்- 1116) இஃது இரவுக்குறிக்கண் தலைவன் அவட்பெற்று மலிந்தது.
1. கருத்து: பக்கம் 109-ல் காண்க. 2. கருத்து: பக்கம் 121-ல் காண்க. 3. கருத்து: குவளை மலரானது இவள் கண்ணைக் காணின் ஒவ்வேம் என்று தான் கவிழ்ந்து நிலத்தைப் பார்க்கும். 4. கருத்து: மீனானது மதியையும் மடந்தை முகத்தையும் பார்த்து உண்மையறியாமல் தானிருந்த விடத்திலேயே கலங்கிக் கிடந்தது. |