பக்கம் எண் :

34தொல்காப்பியம்-உரைவளம்

நச்.

இஃது எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று. ‘முன்னைய நான்கும்’ (52) என்றதனாற் கூறிய ஐயந்தலைவன் கண்ணதே எனவுந் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கூறலின்.

(இ-ள்) : சிறந்துழி1 ஐயம் சிறந்தது என்ப-அங்ஙனம் எதிர்ப்பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவார் ஆசிரியர். இழிந்துழி இழிபே சுட்டலான-அத் தலைவனின் இழிந்த தலைவிக் கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆதலான் என்றவாறு.

தலைவற்குத் தெய்வமோ அல்லளோவென நிகழ்ந்த ஐயம், நூன் முதலியவற்றால் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறிவுடையனாதலும், தலைவிக்கு முருகனோ இயக்கனோ, மகனோவென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனம் கூறினார். தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக் குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் ‘சிறந்துழி’ என்றார்.

(உ-ம்)

“அணங்கு கொலாய்மயில் கொல்லோ கணங்குழை
மாதர் கொன்மாலு மென் னெஞ்சு”2      (குறள்-1081)

எனவரும்

க. வா. சச்சிதானந்தம்

“ஒத்த கிழவனும் கிழத்தியும் பாலது ஆணையின் எதிர்ப்பட்டுக் காணும் போது அவர்க்குத் தோன்றும் ஐயம் சிறந்ததாகவே அமையும். இழிந்ததாக அமையாது; அமையின் காமக்


1. தலைவன் தலைவி ஆகிய இருவரில் தலைவன் சிறந்தவன் எனக் கொண்டு சிறந்துழி என்பதற்குத் தலைவன் கண் என்றும் இழிந்துழி என்பதற்குத் தலைவிக் கண் என்றும் உரைத்தார்.

2. கருத்து இங்கே தோன்றுபவள் அணங்கோ மயிலோ அல்லது பெருமை மிக்க காதணியணிந்துள்ள மண் மகளோ அறியாது மயங்கும் என் நெஞ்சம். தலைவன் முதற் காட்சிக் கண் ஐயப்பட்டது இது.