பக்கம் எண் :

408தொல்காப்பியம்-உரைவளம்

இளம்.

என்றது, மேற் றலைவற்குந் தலைவிக்குந் தோழிக்குமுரிய கிளவியெல்லாங் கூறி இனிச் செவிலிக்குரிய கிளவி யுணர்த்துதல் நுதலிற்று.

களவலராதல் முதலாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று கிளவியும் அத்தன்மைய பிற கிளவியும் களவுகாலத்துச் செவிலியின் மேலன என்றவாறு, இவற்றுள் தோழியை வினாதலென வேறொரு கிளவியாக ஓதினாராயினும், அதன் முன்பு நிகழும் கிளவியெல்லாம் அவளை வினாதற்குக் காரணமாதலின் அவை யீண்டுப் பதின்மூன்றென வெண்ணப்பட்டன வென்க.

(இ-ள்) : களவலராயினும் என்பது-தலைவன் ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனாகி அலர் தூற்றப்பட்டவிடத்துத் தோழியை வினாவும் என்றவாறு:

(உ-ம்)

“பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொல்இப் பேதை ஊர்க்கே
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கட் டெய்வங் குடவரை எழுதிய
நல்லியற் பாவை அன்னஎன்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே”1      (குறுந்-89)

காம மேற்படுப்பினும் என்பது-தலைவி மாட்டுளதாகிய வேட்கை அளவிறப்பினும் தோழியை வினாவும் என்றவாறு.


1. கருத்து: பொறையனது கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் தெய்வமானது தன்போற் செய்து வைத்த பாவைபோல்வாளாகிய என் மகள் பாடிக் கொண்டே தினையைக் குற்றினால் அவள் ஒருவனைப் பற்றிப் புகழ்ந்த நிலையில் பாடிய வள்ளைப் பாட்டைக் கேட்டு இவ்வூர் மாக்கள் பேசவும் பேசுவர். அவர்கட்கு வரும் அழிவு யாது? தோழியிடம் செவிலி வினவியது.