எனவே, மனைக்கும் எயிற்கும், நடுவணதோரிடம் என்று கொள்ளப்படும். நச். இது நிறுத்த முறையானே இரவுக் குறியிடம் உணர்த்துகின்றது. (இ-ள்) : அகமனைப் புகாஅக்காலை ஆன இரவுக்குறியே-உண்மனையிற் சென்று கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்து உண்டான இரவுக் குறியே. ஏகாரம்-பிரிநிலை. இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே-இல்வரைப்பினுள்ளதாகியும் மனையோர் கூறிய கிளவி கேட்கும் பிறமனையிடத்ததாம் என்றவாறு. அல்லகுறிப்பிட்டதனை ஒருவாற்றான் உணர்த்திய காலத்து அவன் அதுகேட்டு ஆற்றுவனென்பது கருதி ‘மனையோர் கிளவி கேட்கும் வழியது’ என்றார்.1 ஏகாரம் ஈற்றசை. என்றது, இரவுக் குறி. அம் முயற்சிக் காலத்து அச்ச நிகழ்தலின் அகமனைக்கும் புறமதிற்கும் நடுவே புணர்ச்சி நிகழுமென்றதாம். அகமனையிற் புகாக்காலை யெனவே இரவுக்குறி அங்ஙனஞ் சிலநாள் நிகழ்ந்த பின்னர் அச்சமின்றி உண்மனையிற் சென்று கூடவும் பெறுமென்பதுங் கூறியதாம்,2 (உ-ம்) : “அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்” (அகம்-198)
அட்டில், கொட்டகாரம், பண்டசாலை, பள்ளியிடம் முதலியன அடங்கிய பேரெல்லைப் பகுதி. மனையகம்-தோட்டம் முதலிய இன்றி வீட்டினை மட்டும் குறிக்கும் இடம். 1. மனையோர் கிளவி கேட்கும் வழியது எனக் கூறியதன் நோக்கம் வீட்டிலுள்ளார் பேசும் பேச்சுக் கேட்கும் படியான அணிமையிடம் என்பதையுணர்த்தல் வேண்டும் என்பது மட்டுமன்றி அல்ல குறிப்பட்டதனைத் தலைவி தோழியிடம் கூறும்போது அக் கூற்றைத் தலைவன் கேட்கும்படியான அணிமையிடமாதல் வேண்டும் என்பதை அறிவிப்பதேயாம். 2. சிவ. விளக்கம் பார்க்க. |