வரலாறு- (க) “வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப வொடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறங்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி யகலிரு விசும்பி னானும் பகல்விளங் கலையாற் பல்கதிர் விரித்தே.” (புறம். 8) 1என்னும் பாட்டினுட் “கடந்தடு தானைச் சேர லாதனை” என்னுந்துணை உவமத்திற்கு வந்த அடையினைப் பொருட்கு மறுத்துக்கொள்ள வைத்தானென்பது. என்னை? “வெஞ்சுடர் வழி” என்னுந்துணை உவமத்திற்குரிய அடையினைப் பொருட்கு மறுத்துக்கொள்ள வைத்தானென்பது. “இனிப் பொழுதென வரைதி” என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவமத்திற்கு மறுத்துக்கொள்ள வைத்தானென்பது. என்னை? வெஞ்சுடர்வழித் தோன்றிய அரசனைத் தண்சுடரோடு பழிப்பான் பொருளேஉவமஞ்செய்தானென்பது. [என்னும் பாட்டினுட் “கடந்தடு தானைச் சேர லாதனை” என்னுந் துணை உவமத்திற்கு வந்த அடையினைப் பொருட்கு மறுத்துக்கொள்ள வைத்தானென்பது, இனிப் “பொழுதென வரைதி” என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவமத்திற்கு மறுத்துக்கொள்ள வைத்தானென்பது. என்னை? வெஞ்சுடர்வழித் தோன்றிய அரசனைத் தண்சுடரோடு 2பழிப்பான் பொருளே உவமஞ் செய்தமையானென்பது.]
1. ‘என்னும் பாட்டினுள்’ என்றுதொடங்கு மிவ்வாக்கியம் பின் பகரக் கோட்டிலடைத்த வாக்கியம்போலிருப்பிற் பொருத்தமாகும். என்னை? ‘வெஞ்சுடர்வழி’ என்பது பாட்டிலுள்ள அடிகளுளொன்றாகக் காணப்படாமையானும், ஏனைய வாக்கியம் முன்வந்தமையானும் ‘என்னை? வெஞ்சுடர்வழி’ எனப் பின் வரும் வாக்கியமே இங்குஞ் சேர்த்துப் பிழையாக எழுதப்பட்டிருத்தல்வேண்டுமென ஊகிக்கப்படுதலானுமென்பது. இப்பாட்டினுள் உவமம்--அரசன், உவமேயம்--சந்திரன் எனக் கொள்க. 2. பழிப்பான் -- ‘உவமிப்பான்’ என்றிருத்தல்வேண்டும். அங்ஙனமே டாக்டர் உ. வே. சாமிநாதையரும் புறநானூற்றில் இப்பாட்டி னடிக்குறிப்பிற் கூறியுள்ளார்.ஆண்டுக் காண்க. |