3. நீண்ட தாளினையுடைய இலவ மரத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த பஞ்சினையுடைய அழகினை உடைத்தாகிய பசிய காயினது முதுகு விரிந்து பஞ்சி தோன்றினா லொத்த வரியை முதுகிலேயுடைய அணிலோடே எலியுந் திரியாதபடி யாற்றினது அறலை யொக்கும் முதுகினையும் கொழுவிய மடலினையுமுடைய நெடிய மேட்டுநிலத்தில் நின்ற ஈந்தினது வேலின் முனையையொத்த கூர்மையினையுடைய முனையினையுடைய இலையாலே வேய்ந்த எய்ப்பன்றி முதுகுபோலும் புறத்தினையுடைய குடிலில். (பெரும்பாண். 83-8) 4. பிள்ளையைப் பெற்ற எயிற்றி மான்றோலாகிய படுக்கையிலே அப்பிள்ளையோடே முடங்கிக் கிடக்க ஒழிந்தோர் போய், பூண் தலையிலே யழுத்தின நன்றாகிய திரட்சியையும் வலியை யுடைத்தாகிய வயிரத்தினையு முடைய சீரிய கோல் செருகின உளிபோலும் வாயினையுடைய பாரைகளாலே கட்டிகள் கீழ்மேலாகக் குத்துகையினாலே, கருநிலமாகிய கரம்பை நிலத்தி லுண்டாகிய புழுதியை யளைந்து நுண்ணிய புல்லரிசியை வாரியெடுத்துக் கொண்ட வெள்ளிய பல்லையுடைய எயின் குடியிற் பிறந்த மகளிர் பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத்திடத்துத் தோண்டின நிலவுரலிலே அப் புல்லரிசியைச் சொரிந்து குறிய வயிரமாகிய உலக்கையாலே குற்றி. (பெரும்பாண். 89-7) 310-ம் சூத்திரம் 1. வரிபொருந்திய மலர்போலும் அழகிய கண்ணையுடைய அழகினையுடைய மாமை நிறத்தைக்கொண்ட பரதவப் பெண்ணின் அழகிய முகத்தையும் சந்திரனையும் ஒன்றாகக் கருதி சுழற்சியுற்று பூமியிலும் ஆகாயத்திலுஞ் செல்லாமல் ஐயத்தின்கணின்றது (இராகு என்னும்) பாம்பு. இது ஐயவுவமைப் பாற்படும். (பொய்கையார்) 2. நீர்த்துளி பொருந்தித் தண்ணிய சுனையில் வைகிய நீல மலர் அன்புடைய பெண்களது கண்போல மலர்ந்தன. அன்பு பெற்ற பெண்களது திருமுகத்தின் பொலிவிலே அவர்கள் கண்ணும் வண்டையுடைய நீலமலர்போல மலரும். 311-ம் சூத்திரம் 1. இழுக்கப்பட்டு நிலத்தே செறியுங் கரிய பிடியினது பெருமையையுடைய கைபோல(த் தாமும் அடியோடு தொடர்பு பட்டு) முறையாற் பருத்து பெருமையையுடைய மலையிலே ஒழுங்குபட வளர்ந்த வாழையெனத் திரண்டு ஒரு குறங்குடனே ஒரு குறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினையும் வாழைப் பூ வெனப் பொலிந்த பனிச்சையினையும் (பனிச்சை-முன்னுச்சி மயிர்). |