“மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியிற் றோன்று நாடன்.” (அகம்-82) என்றவழிப் பண்டு ஒருகாலுங் கண்டறியாதபடி ஆடிற்று மயிலென்றமையிற் பிறபொருட்கட்டோன்றிய புதுமையாயிற்று. “நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.” (குறு-3) என்பது பெருமை வியப்பு; என்னை? கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைத்தாற்போல வழிமுறை முறையாற் பெருகற்பாலதாகிய நட்பு, மற்றவனைக் கண்ணுற்ற ஞான்றே நிலத்தின தகலம்போலவும், விசும்பி னோக்கம்போலவுங், கடலி னாழம்போலவும் ஒருகாலே பெருகிற்றென்றமையின்; இது தன்கட்டோன்றிய 1பெருமை வியப்பு; இது தலைமகன் கருத்தினுள் நட்பிற்குக் கொள்ளுங்காற் பிறன்கட்டோன்றிய பெருமை வியப்பாமென்பது கொள்க. “மைம்மல ரோதி மணிநகைப் பேதைதன் கொம்மை வரிமுலை யேந்தினு--மம்ம கடையிற் சிறந்த கருநெடுங்கட் பேதை 2யிடையிற் சிறியதொன் றில்.” என்பது, பிறன்கட்டோன்றிய சிறுமை வியப்பு. தன்கட்டோன்றிய சிறுமை வந்துழிக் காண்க. “எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும.” (புறம்-5) என்பது, நரிவெரூஉத்தலையார் தம்முடம்புபெற்று வியந்து கூறிய பாட்டாகலின், 3இது தன்கட்டோன்றிய ஆக்கம்பற்றி வியப்புப் பிறந்ததாயிற்று.
1. தலைவி தலைவனொடுபட்ட தன் நட்பின் பெருமையைக் குறித்து வியந்தமையின் தன்கட்டோன்றிய பெருமை வியப்பாயிற்று. தலைவன் தன்னிடத்து வைத்த நட்பின் பெருமையைத் தலைவி வியந்ததாகக் கொள்ளுங்கால் பிறன்கட்டோன்றிய பெருமை வியப்பாமென்றபடி. 2. இது பேதையினது இடையின் சிறுமையை வியத்தலின் சிறுமைபற்றிய வியப்பாயிற்று. 3. இது தன்கட்டோன்றிய ஆக்கம் என்றது நரிவெரூஉத் தலையார் சேரமான் ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை |