பொருளதிகாரத்துள்ளும் இதுகாறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவனவே கூறிவந்தான், 1அப்பொருள்பற்றிச் செய்யுள் 2கூறுமாகலின் இவ்வதிகாரத்துட் செய்யுளிலக்கண மெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது இவ்வோத்தென்பது. எனவே, முற்கூறிய எழுவகையோத்தும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவென்பதூஉம், 3இது செய்யுட்கே உரித்தென்பதூஉம் பெற்றாம். மற்றிதனை யாப்பதிகாரமென வேறோ ரதிகாரமாக்கி 4உரைப்பாருமுளர். அங்ஙனங் கூறின் வழக்கதி காரமெனவும் வேறு வேண்டுமென மறுக்க. அல்லதூஉம், எழுத்துஞ் சொல்லும் பொருளுமென மூன்றற்கும் முன்றதிகாரமாக்கி அதிகாரமொன்றற்கு ஒன்பது ஓத்தாகத் 5தந்திரஞ் செய்ததனோடு மாறுகோளாம் இதனை வேறோரதிகாரமென் பார்க்கென்பது. மற்று, 6ஓத்து நுதலியதெல்லாம் நுதலுவதன்றே ஓத்தினுள் வைத்த சூத்திரம்; அதனான், இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இவ்வோத்தினு ளுணர்த்தப்படுகின்ற செய்யுட்குறுப்பாவன இவையெனவே, அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல், நுதலிற்று. 1. அப்பொருள் என்றது தான் சொல்லுமாறு அதிகரித்து எடுத்துக்கொண்ட அப் பொருளை. எழுத்தினுஞ் சொல்லினும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன கூறினான்; பொருளினும் அவ்வாறே பெரும்பாலும் வழக்கிற்கும் சிறுபான்மை செய்யுட்கும் வேண்டுவன கூறி வந்தான். இனிச் செய்யுள் கூறுவதற்கியைபென்னையெனின்? தான் சொல்லுமாறு எடுத்துக்கொண்ட அப் பொருள்பற்றிச் செய்யுள் கூறலின் அதுவும் இயைபுடைத் தாயிற்று என்றபடி. 2. கூறும்--கூறுவான். என்றது ஆசிரியனை. ஆகலின் இவ்வோத்துத் தொகுத்துக் கூறுகின்றது எனவியைக்க. 3. இது--இவ்வோத்து. 4. உரைப்பாரு முளர் என்றது களவியலுரையாசிரியரை. என்னை? முதலாஞ் சூத்திர உரையுள் எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டு என்று அவரே கூறலின். 5. தந்திரம்--நூல். 6. ஓத்ததிகாரம் எனவும் பாடம். |