[பாவண்ணம் இதுவெனல்] 526. | அவற்றுள்; பாஅ வண்ணஞ் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும். |
இது, நிறுத்தமுறையானே பாஅவண்ண முணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : பாஅவண்ணமென்பது, 1நூற்பாவண்ணம் என்றவாறு. எற்றுக்கு? ‘நூற்பாற்பயிலும்’ என்றமையின், இது சொற்சீரடித்தாகி வருமென்பது. இதனுட் ‘பயிலும்’ எனவே, அந்நூற்பாவினுளல்லது அகவலுள் இத்துணைப் பயிலாதென்பது; இது, “வடவேங்கடந் தென்குமரி.” (பாயிரம்) எனவும், “எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப.” (தொ. எழு. 1) எனவும், “அவற்றுள், அஇஉ எஒ வென்னு மப்பா லைந்தும்.” (தொ. எழு. 3) எனவும் பயின்றுவரும். “பெரியகட் பெறினே.” (புறம். 235) என்பது, சொற்சீராகி அகவலுட் பயிலாது வந்தது. சொற்சீரடியென்னாது ‘சொற்சீர்’ என்றான், அடியொடு தொடராதுஞ் சொற்சீர் வருமாதலினென்பது. அவை, 2“நன்றுபெரி தாகும்.” (தொ. சொல். 343) என்றாற்போல வேறாகி நிற்பன. கலியுள்ளும் பரிபாடலுள்ளுஞ் சொற்சீர் வருமென மேற்கூறினானாகலின் 3அவற்றுள்ளுஞ் சந்த வேற்றுமைப்பட்டன பாஅவண்ணமேயாமென்பது. (214)
1. நூல்--இலக்கண நூல். 2. இது அடியோடு தொடராது தனி வந்தது. 3. அவற்றுள்ளும்--கலி பரிபாடலுள்ளும். |