தன்றெனவுங் கூறியவாறு. இங்ஙனம் அடங்குமென்பது நாடக நூலுள்ளுஞ் சொல்லுபவோவெனின், சொல்லுபவாகலினன்றே 1அதன்வழி நூல்செய்த ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வும் பொருளும் ஒன்றாக வடக்கிச் சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென மூன்றாக்கி வேறு வேறு இலக்கணங்2கூறி அவற்றை, “எண்ணிய மூன்று மொருங்கு பெறுமென நுண்ணிதி னுணர்ந்தோர் நுவன்றன ரென்ப” என்றோதினாராயிற்றென்பது. (2) [எண்வகை மெய்ப்பாடு இவை எனல்] 251. | நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப. |
இது, 3பிறர்வேண்டுமாற்றானன்றி இந்நூலுள் 4இவ்வாறுவேண்டப்படும் மெய்ப்பாடென்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : இச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. நகையென்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப. அழுகையென்பது அவலம்; அஃது இருவகைப்படும்; 5தானே அவலித்தலும், பிறரவலங்கண்டு அவலித்தலுமென; இவற்றுள் ஒன்று கருணையெனவும் ஒன்று அவலமெனவும் பட்டுச் சுவை ஒன்பதாகலுமுடைய வென்பது. இளிவரலென்பது இழிபு. மருட்கையென்பது வியப்பு; அற்புதமெனினும் அமையும். அச்சமென்பது பயம். பெருமிதமென்பது வீரம். வெகுளியென்பது உருத்திரம். உவகையென்பது காம முதலிய மகிழ்ச்சி. இவை அவ்வெட்டுமாவன. இவற்றைச் சுவையெனவுங் குறிப்பெனவும் வழங்கினும் அமையும்.
1. அதன்வழி -- நாடகநூலின்வழி. 2. கூறி ஓதினாரென இயைக்க. 3. பிறர் -- நாடகநூலார் 4. இவ்வாறு -- (சூத்திரத்துட் கூறும்) இத்தன்மையாக. 5. தானே அவலித்தல் அவலம். ஏனையது கருணை. |