தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 381 |
“கருங்கால் வேங்கை வீயுறு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே” (குறுந். 47) இந் நெடுவெண்ணிலவினார் பாட்டு, தோழி தலைவனிரவு வருதல் ஒல்லாதெனச் சொல்லி, குறிப்பால் வரைவுகடாவும் கருத்தொடு முடிவுகொள் ளியல்பிற்றாதல் காண்க. இச் சூத்திரத்திற்கு, “பொருள்முடிக்க வேண்டப் படும் பிறிதொரு சொல் எஞ்சி வருவது சொல்லெச்சம்” - எனவும், “பிறிதொரு சொல் வேண்டாமல் தானே நின்று சொற்பொருளன்றிப் பிறிதொரு பொருள் சுட்டுவது குறிப்பெச்சம்” எனவும் இருவகைத்தாம் எனப்பொருள் கூறுவர் பழைய உரைகாரர், அவ்வெச்சங்கள் சொல்லளவில் அமைவன, சொற்படல எச்சவியலில் விளக்கப்பட்டுள்ளன. இங்குச் சொற்றொடர்ச் செய்யுளில் கூறப்படும் இவ்வெச்சங்கள் குறித்தபொருளை முடிய நாட்டும் யாப்பின் வழித்தாய செய்யுளுறுப்பாய் ஓர் கூற்றின் பாற்படும். (கூற்றெனினும் கிளவியெனினும் ஒக்கும்). இவை சொல்லெச்சங் குறியாமல், கிளவிச்சொற்களின் உள்ளுறையாம் பொருளெச்சத்தையே குறித்து வரும். சொல்லும் அதன் குறிப்புமாய் நிற்கும் சொல்லெச்சங்கள் சொல்லளவில் அமைந்து, “பிரிநிலை” முதல் பத்து வகைப்படும் என முன் எச்சவியலிற் கூறப்பட்டன. செய்யுளுறுப்பாம் உள்ளுறைச் சொற்றொடர்ப் பொருளெச்சங்கள், சொல்லோடு முடிவுகொ ளியற்கைய (1) குறிப்பொடு முடிவுகொளியற்கைய (2) என்றிருவகைத்தாம். சொல்லெச்சங்களை ‘அவைதாம் தத்தம் குறிப்பின் எச்சம் சுட்டும்’ என முன் எச்சவியலிற் கூறியதன் பிறகு, இங்குச் சொற்றொடர்ப் பொருளெச்சங்களைச் “சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொளியற்கைய” எனவும், “எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப் பொருட்புறத்ததுவே” எனவும் செய்யுளியலில் தொல்காப்பியரே வேறு கூறுதலால், இவ்வீரெச்ச வகைகளும் வெவ்வேறினமென்பதே அவர் கருத்தென்று தெற்றென விளங்கும். இவற்றுள் சொல்லளவிற்றாய முன்னவை பத்தும் சொல்லதிகார எச்சவியலில் “பிரிநிலை, வினையே” என்னும் 34 ஆவது சூத்திர முதல் “சொல்லெனெச்சம்” என்னும் 45 ஆவது சூத்திர மீறாகப் பல சூத்திரங்களால் தெளிக்கப் பெற்றிருப்பதாலும், அவற்றிற் சொற்குறிப்பெச்சம் |