(து - ம்,) என்பது, பரத்தையானவள் தன்னைத் தலைவன் பிரிந்து செவ்வணி கண்டு மனைவயிற்புக்கானென்பதையறிந்து, தன்பால் அவன் செய்ததனைத் தலைவி கேட்டு வெறுப்படையவேண்டி, அத் தலைவிக்குப் பாங்காயுள்ள தோழி முதலானோர் கேட்குமாறு தன் தோழியாகிய விறலியை நோக்கி ஊரன் என்னைப் பற்றி வளையைப் பறித்தலாலே நான் உன் மனைவிக்கு இதனைச் சொல்லுவேன் என்றலும் அவன் நடுங்கிய நிலைமையை நினைக்குந்தோறும் நகுகிற்பேனென இகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல்-கற்- 10) என்னும் நூற்பாவின்கண் இவற்றோடு பிறவும்' என்பதனால் அமைத்துக்கொள்க.
| உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்ளுகிர் |
| மாரிக் கொக்கின் கூரலகு அன்ன |
| குண்டுநீ ராம்பல் தண்துறை யூரன் |
| தேங்கம ழைம்பால் பற்றி யென்வயின் |
5 | வான்கோல் எல்வளை வௌவிய பூசல் |
| சினவிய முகத்துச் சினவாது சென்றுநின் |
| மனையோட்கு உரைப்பல் என்றலின் முனையூர்ப் |
| பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும் |
| தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் |
10 | புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின் |
| மண்ணார் கண்ணின் அதிரும் |
| நன்னர் ஆளன் நடுங்கஞர் நிலையே. |
(சொ - ள்.) தோழி வள் உகிர் மாரிக் கொக்கின் கூர் அலகு அன்ன குண்டு நீர் ஆம்பல் - தோழீ ! பெரிய உகிரையுடைய கார்காலத்து உலாவுங் கொக்கினது கூரிய மூக்குப்போன்ற ஆழ்ந்த நீரின் முளைத்த ஆம்பற் பூவையுடைய; தண்துறை ஊரன் தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின் வான் கோல் எல்வளை வௌவிய பூசல் - தண்ணிய துறையையுடைய ஊரன் நெய்ம் மணங் கமழ்கின்ற என் கூந்தலைப் பற்றி யீர்த்து வைத்து என் கையிலுள்ள வெளிய கோற்றொழிலமைந்த ஒளியையுடைய வளையைக் கழற்றிக் கோடலினாகிய பூசலாலே; சினவிய முகத்து சினவாது சென்று நின் மனையோட்கு உரைப்பல் என்றலின், சினமுற்ற முகத்தோடு அவனை நோக்கி 'இனி, யான் இங்ஙனம் சினவாது சென்று நின் மனைக் கிழத்திபால் இங்கு நிகழ்ந்ததனைக் கூறாநிற்பேன்' என்றவுடன்: முனை ஊர்ப் பல் நெடுஆ நிரை வில்லின் ஒய்யும் தேர் வண் மலையன் முந்தை - ஊர்முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக் கொண்டு வருகின்ற இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மையுடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு; புலம் பிரிபேர் இசை வயிரியர் நலம் புரி முழவின் மண் ஆர் கண்ணின் அதிரும் - வேற்று நாட்டிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வதுபோலும் அதிர்ச்சியோடு; நன்னராளன் நடுங்கு அஞர் நிலை உள்ளுதொறும் நகுவேன் - நன்மையை மேற்கொள்ளும் அவன் தான் நடுங்கிய வருத்தத்தையுற்ற நிலையை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலாலே யான் நகாநிற்பேன்காண் !; எ - று.
(வி - ம்.) வள்ளுகிர் - நீண்ட நகமுமாம். குண்டு - ஆழம். தேன் - நெய். ஒய்யும் - செலுத்துகின்ற.இதனை மனைவி கேட்பின் 'அவன் யார்மாட்டும் வரம்பின்றி யொழுகுபவன்' என்று வெறுப்புத்தோன்றும்; வெறுத்தவழி அவனை மீட்டும்தான் அடையலாமென்று கருதி யிங்ஙனம் கூறினாள். சினங்கொண்டு கூறின் உரை புலப்படாவாதலால் சினவாது சொல்வேனென்றாள். தனது அன்பு தலைப்பிரியாக் கொள்கை தோன்ற நன்னர் ஆளன் என்றாள். மெய்ப்பாடு - எள்ளல் பொருளாகப் பிறன்கட்டோன்றிய இளிவரல். பயன் - பரத்தை தலைவனைத் தான் அடையச் சூழ்ந்துரைத்தல்.
(பெரு - ரை.) இந் நிகழ்ச்சியைத் தலைவி அறியின் பெரிதும் ஏதமாம் என்று அங்ஙனம் அதிர்ந்து நடுங்கினன் என்பது கருத்து. இச்செய்தியைத் தலைவியின் பாங்காயினார் கேட்டுத் தலைவிபாற் கூறிய வழி அவள் தலைவனோடு பெரிதும் ஊடுவள். அவ்வழி அவன் தன்மனை தேடி வலிய வருவன் என்பது பரத்தை எண்ணம் என்க. புலம்புரி என்றும் பாடம்.
(100)