(து - ம்,) என்பது, பொருளீட்டுமாறு தலைவியைப் பிரிந்து செல்கின்ற தலைமகன் சுரத்தினிடைத் தன் காதலியைக் கருதிக் கவன்ற நெஞ்சைநோக்கி யாம் காட்டின்கண் வந்து வருந்துகின்றோம்: இவ்விடத்துப் பொருள் நசைக்காகச் செல்வோமெனினும் அன்றி மீள்வோமெனினும் என்னாலோரிடையூறும் இல்லையாதலின் நீ இவ்விரண்டனுளொன்றை ஆராய்ந்து எனக்குச் சொல்லென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| ஒன்றுதெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன்கால் |
| 1 சிறியிலை வேம்பின் பெரிய கொன்று |
| கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பின் |
| களிறுநின்று இறந்த நீரல் ஈரத்துப் |
5 | பால்வீ தோல்முலை அகடுநிலஞ் சேர்த்திப் |
| பசியட முடங்கிய பைங்கண் செந்நாய் |
| மாயா வேட்டம் போகிய கணவன் |
| பொய்யா மரபின் பிணவுநினைந்து இரங்கும் |
| விருந்தின்வெங் காட்டு வருந்துதும் யாமே |
10 | ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் |
| மீள்வாம் எனினும் நீதுணிந் ததுவே. |
(சொ - ள்.) நெஞ்சே புன் கால் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று கடாஅம் செருக்கிய கடுஞ் சினம் முன்பின் களிறு - என் நெஞ்சமே! புல்லிய காம்பையுடைய சிறிய இலையையுடைய வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை முறித்துத் தள்ளி மதத்தாற் செருக்குண்ட கடிய சினமும் வலிமையுமுடைய களிற்றியானை; நின்று இறந்த நீர் அல் ஈரத்துப் பால்வீ தோல்முலை அகடு நிலம் சேர்த்தி - நின்று கழித்தகன்ற நன்னீரல்லாத இழிந்த நீரினாலாகிய ஈரத்துப் பால் வற்றிய தோலாகிய முலையையுடைய வயிற்றை (நிலத்தின்கண்) பொருத்தி; பசி அட முடங்கிய பைங்கண் செந்நாய் - பசி வருத்துதலானே வருந்தி முடங்கிக் கிடந்த பசிய கண்ணையுடைய செந்நாய்ப் பிணவினது; மாயா வேட்டம்போகிய கணவன் பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் - கெடாத வேட்டைமேற் சென்ற கணவனாகிய செந்நாயேற்றை தான் உண்மையாகத் தன்பிணவை முன்பு புணர்ந்த தன்மையைக் கருதி வருந்தாநிற்கும்; விருந்தின் வெம் காட்டு யாம் வருந்துதும் - இதுகாறும் புக்கறியாத புதுவதாகிய கொடிய காட்டின்கண்ணே வந்து புகுந்து யாம் வருந்துகின்றோம்; ஆள் வினைக்கு அகல்வாம் எனினும் மீள்வாம் எனினும் நீ துணிந்தது ஒன்று தெரிந்து உரைத்திசின் - பொருள்செய் முயற்சி தலைக்கீடாகச் செல்வோமென்றாலும், அங்ஙனம் செய்யாது மீண்டு ஊர்புகுவோ மென்றாலும் யான் தடுப்பதொன்றுமில்லையாதலின் அவ்விரண்டனுள் நீ துணிந்தவொன்றனை ஆராய்ந்துரைப்பாயாக !; எ - று.
(வி - ம்.) முன்பு - வலிமை. விருந்து - புதுமை. நீரல்லாநீர் - மூத்திரம்.
உள்ளுறை :- நீரில்லாத ஈரத்துப் பிணவு பசியால் வருந்த வேட்டை மேற்சென்ற அதன் கணவனாகிய செந்நாயேற்றைர் தான் சென்றவிடத்துத் தன் பிணவைக் கருதி வருந்து மென்றது படுக்கை கொள்ளாது வேற்றிடத்தும்போய்க் காமவெப்பந்தாங்காது நம் காதலி தளிர்மேலே கிடந்து காமத்தால் வருந்தப் பொருள்வயிற் போந்த நாம் ஈண்டு அவளைக் கருதிப் புலம்பா நின்றே மென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல்: பயன் - இடைச்சுரத்தழுங்கல்.
(பெரு - ரை.) நீ துணிந்ததாகிய ஒன்று என இயைக்க. பெரிய: பலவறிசொல். பொய்யா மரபின் பிணவு என்றதற்குக் காதற்கேண்மையிலே பொய்த்தல் இல்லாத முறையினையுடைய பிணவு எனல் நன்றாம். மீள்வதே நன்றென்பது என்துணிவு என்பான் யாம் வெங்காட்டு வருந்துதும் என்றான். நீ துணிந்ததொன்றனையும் மீண்டும் ஆராய்ந்து துணிந்து கூறுதி, என்று வற்புறுப்பான் நீ துணிந்தது ஒன்று தெரிந்து உரை என்றான். பிணவின் துயர்நிலையை நினைந்து இரங்கும் எனல் சீரிது. 'பாலவி தோல்முலை' என்றும் பாடம்.
(103)
(பாடம்) 1. | சிறியிலைவேலம். |