(து - ம்,) என்பது, தலைமகன் இடையீடின்றிக் கொடிய காட்டு நெறியாக இரவுக்குறி வந்தொழுகக் கண்டஞ்சிய தலைமகள் இங்ஙனமன்றி வரைந்தெய்தின், இவ்வச்சம் இல்லையாகுமெனக் கருதி அதனைத் தோழி கேட்டுத் தலைமகனுக் கறிவுறுத்தும்வண்ணம் தலைவனது மார்பை விரும்பியுறையும் யானேயல்லது அவன் வருகின்ற கொடிய நெறியைக் கருதுவார் பிறர் யாவருளரென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, 'பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்' (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.
| பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை |
| தேங்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே |
| துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக் |
| குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த |
5 | தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது |
| பைந்தாள் செந்தினைப் படுகிளி ஓப்பும் |
| ஆர்கலி வெற்பன் மார்புநயந்து உறையும் |
| யானே அன்றியும் உளர்கொல் பானாள் |
| பாம்புடை விடர ஓங்குமலை மிளிர |
10 | உருமுச் சிவந்துஎறியும் பொழுதொடு | பெருநீர் போக்கற விலங்கிய சாரல் | | நோக்கருஞ் சிறுநெறி நினையு மோரே. | |
(சொ - ள்.) பூ பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரின் - அழகிய வரியையும் அகன்ற வாயையுமுடைய புலியேற்றை இடமகன்ற மலையின் கண்ணே களிற்றியானையோடு போர் செய்கையில்; உறுகண் அஞ்சா குறக்குறுமாக்கள் துறுகல் மீமிசை புகற்சியின் எறிந்த தொண்டகச் சிறுபறைப் பாணி - அவற்றாலுண்டாகும் துன்பத்துக் கஞ்சாத குறவரின் இளமைந்தர்கள் ஆண்டுள்ள பெரும் பாறையினுச்சியிலே மனச்செருக்கோடு ஏறித் தமது கையிலுள்ள சிறிய தொண்டகப் பறையை ஒலிப்பிக்கும் ஓசையானது; அயலது பைந்தாள் செந்தினைப் படுகிளி ஓப்பும் ஆர்கலி வெற்பன் - பக்கத்திலுள்ள பசிய அடித்தண்டினையுடைய செவ்விய தினைக் கதிர்களைக் கொய்ய வந்திறங்குகின்ற கிளிகளை அச்சுறுத்தி யோட்டாநிற்கும் நிரம்பிய ஒலியையுடைய மலைநாடனது; மார்பு நயந்து உறையும் யானே அன்றியும் - மார்பை விரும்பித் தனித்துறைகின்ற யான் ஒருத்தியே யல்லாமல்; பால் நாள் பாம்பு உடை விடர ஓங்குமலை மிளிரச் சிவந்து உருமு எறியும் பொழுதொடு - இரவு நடுயாமத்திலே பாம்பு உறையும் பிளப்புக்களையுடைய உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழும்படியாகச் சினந்து இடிமுழங்கி மோதுகின்ற இருட்பொழுதையும்; போக்கு அற பெருநீர் விலங்கிய சாரல் நோக்கு அருஞ் சிறுநெறி - நடந்து செல்லக் கூடாதவாறு பெரு வெள்ளங் குறுக்கிட்டு ஓடுகின்ற சாரலின்கண்ணே நோக்குதற்கரிய சிறிய நெறியையும்; நினையுமோர் உளர் கொல் - கருதுகின்றவர் பிறர் யாவரேனும் உளரோ?; உளராயின் நம் காதலரை இரவுக் குறிமறுத்து வரைவிடைப் படுத்தாநிற்பர்; எ - று.
(வி - ம்.) தேம் - இடம், கமழ்தல் - விளங்குதல். புகற்சி - மனச்செருக்கு. தொண்டகம் - குறிஞ்சி நிலத்துக்குரிய சிறிய பறை. ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி வரைதல் வேட்கைப் பொருளது (இறை. 30) என்றமையானும் "போக்கும் வரைவு மனைவிகட்டோன்றும்" (தொல். பொ. 225) என்றமையானும் வரைதல் வேட்கைக்கிளவி முற்றும் தலைவி கூற்றாதலின், ஈண்டுத் தலைவி கூற்றென்க. கேட்போர் - தோழி. எனவே யான்படுங் கவலையை நீ யறியாது. அவனைக் களவொழுக்கத்து இரவுக்குறி வருமாறு செய்கின்றனை, வராதபடி தடுத்தாயல்லை யெனத் தோழியைச் சுட்டி யுரைத்ததாயிற்று. நயந்துறையும் யானென்றது அவன் பாலுள்ள அன்பின் மிகுதி காட்டியதாம். இஃது, அழிவில் கூட்டத்து அவன் புணர்வுமறுத்தல்.
உள்ளுறை:- புலி யானையொடு போர் செய்யக் கண்ட குறக்குறுமாக்கள் துறுகல்லேறி முழக்குந் தொண்டகப் பறையினொலியானது தினைக்கொல்லையிலே பயில்கின்ற கிள்ளையை வெருட்டாநிற்கும் என்றது (இங்ஙனம் வரையாது வந்தொழுகுங்காலை வேற்று வரைவு நேரினும் நேரும், நேர்ந்தவழி) வேற்றுவரைவுக்குப் புகுந்தானொடு எமர் அளவளாவி யுடன்படக் கண்ட ஆயத்தார் கூடி மகிழ்ந்து என்பால் வந்து கூறும் மாராயவுரையானது என்னுடம்பின்கணுள்ள உயிரைப் போக்காநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - அச்சம். பயன் - வரைவுடம்படுத்தல்.
(பெரு - ரை.) தேங்கமழ் சிலம்பின் என்பதற்குத் தேன்மணங் கமழும் மலையின் கண்ணே ! என்றல் தெளிபொருளாகப் பொருந்திக் கிடப்பவும் தேங்கமழ் சிலம்பின் என்பதற்கு உரையாசிரியர் இடமகன்ற மலையின்கண்ணே என்று இடர்ப்பட்டுப் பொருள் கூறியதனால் சிறப்பு ஒன்றுமின்மை யுணர்க.
இனி, பைந்தாள் செந்தினை என்புழி முரண் தோற்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. இனி ஏற்றையும் களிறும் போர் செய்வதனைக் கண்ட குறுமாக்கள் எறிந்த பறைப்பாணி தினையிற்படியும் கிளியை ஓட்டும் என்றது, நம் பெருமானும் யாமும் ஒழுகும் களவொழுக்கம் புலப்பட்டுழி இவ்வூர்ப் பெண்டிர் தூற்றும் அலரானே என்னாவி அகலும் என்னும் உள்ளுறை யுடைத்தெனலே போதியதாம் என்க.
(104)