திணை : நெய்தல்.

    துறை : இது, பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

    (து - ம்,) என்பது, வினைமுற்றி மீளுந்தலைவன் விரைவிலே தனது தேரைச் செலுத்தவேண்டி முன்பு ஊரினின்று போதரும் பொழுது தலைவி வருந்திய நிலையைக் குறித்துக்காட்டுவான் பாகனை நோக்கிப் பாக! யான் காதலிபாற் சென்று என் கருத்தினைச் சொன்ன பொழுது, விடை கூறவியலாது முறியைத் திமிர்ந்துதிர்த்த கையொடு துன்புற்று அவள் நின்ற நிலையை நீ அறிதலும் அறிந்திருப்பாயோ வெனக் கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல் 
    
எறிதிரை கொழீஇய எக்கர் வெறிகொள 
    
ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது 
    
அசைஇயுள் ஒழிந்த வசைதீர் குறுமகட்கு 
5
உயவினென் சென்றியான்1உள்நோய் உரைப்ப 
    
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறுமலர் 
    
ஞாழல் அஞ்சினைத் தாழிணர் கொழுதி 
    
முறிதிமிர்ந்து உதிர்த்த கையள் 
    
அறிவஞர் உறுவி ஆய்மட நிலையே. 

    (சொ - ள்.) பாக பெருங் கடல் ஏறி திரை கொழீஇய எக்கர் வெறிகொள - பாகனே ! பெரிய கடலின் மோதுகின்ற திரையாலே கொழிக்கப்பட்ட மணன் மேட்டில் நறுமணம் வீசாநிற்ப; ஆடுவரி அலவன் ஓடு வயின் ஆற்றாது அசைஇ உள் ஒழிந்த வசைதீர் குறுமகட்கு - விளையாடுகின்ற புள்ளிகளையுடைய ஞெண்டைப் பிடிக்குமாறு சென்றவழி அஞ்ஞெண்டு ஓடுமிடத்தே பின் தொடர்ந்து செல்ல ஆற்றாது களைப்புற்று அதன்மீது சென்ற விருப்பம் நீங்கியிருந்த குற்றமற்ற இளமையுடையாளிடத்து; உயவினென் யான் சென்று உள் நோய் உரைப்ப - இப்பொழுது வருந்துகின்றேனாகிய யான் சென்று என் உள்ளத்தின்கண்ணே யுள்ள வினைவயிற் செல்ல வேண்டிய கவற்சியைக் கூறிய அளவிலே; மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் - மறுமொழி கூறுதற்கு நாவெழாமையால் ஆற்றாளாய்; ஞாழல் அம்சினை தாழ் இணர் கொழுதி முறிதிமிர்ந்து உதிர்த்த கையள் - நறிய மலரையுடைய ஞாழலினது தாழ்ந்த அழகிய கிளையிலுள்ள பூங்கொத்தைச் கொய்து அதனோடு இளந்தளிரையும் சேரப் பிசைந்து உதிர்த்த கையையுடையளாகி; அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலை - அறிவு மயக்கமுற்றவளின் அழகிய மடப்பத்தினிலையை நீ; அறிதலும் அறிதியோ - அறிந்திருத்தலையும் உடையையோ? உடையையாயின் அதற்கேற்றபடி கடவுவாயாக!; எ - று.

    (வி - ம்.) உயவு - வருத்தம். அறிதலும் அறிதியோ வென்றது காரியவாசகம். வரி - புள்ளி. கொழுதல் - கொய்தல். திமிர்தல் - பிசைதல். அஞருறுவி - மயக்க முற்றவள்.

    அலவன் பின்னுஞ் செல்லலாற்றாநடைய ளென்றதனால், மென்மைத் தன்மையளெனவும் அத்தகையாளிதுகாறும் ஆற்றியிருத்தல் அரியளெனவுங் கூறினான். வசைதீர் குறுமகளென்றதனாலே அவள் குற்றமில்லாளன்றே. அத்தகையாள் பிரிவு நோயென்னுங் குற்றத்தாலிறந்து படுமோ வென்றிரங்கினானாம். விரைந்து தேர்கடாவிச் சென்று காண வேண்டுவான் யானும் உயவினேனென்றான். கொழுதித் திமிர்ந்துதிர்த்தது - செய்வதறியாது மயங்கினார் செய்யுஞ் செய்கை. இது - காதல் கைம்மிகல். மெய்ப்பாடு - உவகைக்கலுழ்ச்சி. பயன் - பாகன் தேர்கடாவல்.

    (பெரு - ரை.) எக்கர் வெறிகொள அசைஇ ஒழிந்த குறுமகள் என வெறிகோடற்குக் குறுமகள் அசைஇயதனை ஏதுவாகக் கொள்க. உள் - உள்ளம்; ஊக்கம். உயவினென்: வினையாலணையும் பெயர்.

(106)
  
 (பாடம்) 1. 
உண்ணோய்.