(து - ம்,) என்பது, தலைவன் பிரிதலால் மெலிவுற்ற தலைவி தோழியை நோக்கி எம் காதலர் பின்சென்று வழிபட்டொழிந்த என் நெஞ்சம் நல்வினையின் பாலதாயிற்று; ஊரார் பழி தூற்றும்படி யானொருத்தியே இங்கு நோயுடையேனா யிராநின்றேன்; இதனை நினைக்குந்தோறும் நகைதோன்றுதலானே யானே என்னை நகை செய்து கொள்ளா நிற்பேனென அவலித்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியுமாகலின்" (தொல். கற். 6) எனவரும் நூற்பாவின்கண் 'பல்வேறு நிலையினும்' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| உள்ளுதொறு நகுவேன் தோழி வள்ளுகிர்ப் |
| பிடிபிளந் திட்ட நாரில்வெண் கோட்டுக் |
| கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைச் |
| செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம் |
5 | கல்லிழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் |
| புல்லிலை ஓமைய புலிவழங்கு அத்தஞ் |
| சென்ற காதலர் வழிவழிப் பட்ட |
| நெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டொழிந்து |
| ஆனாக் கௌவை மலைந்த |
10 | யானே தோழி நோய்ப்பா லேனே. |
(சொ - ள்.) தோழி வள் உகிர் பிடி பிளந்திட்ட நார்இல் வெண் கோட்டு கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை - தோழீ! பெரிய உகிரையுடைய பிடியானை தின்னுதற் பொருட்டு மேலுள்ள தோலைப் பறித்துக் கொண்டதனால் நாரில்லாத வெளிய கிளைகளையும் பற்றுக்குறடு போன்ற காய்களையுமுடைய வெளிய பூங்கொத்துக்களையுடைய வெட்பாலையினுடைய; செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம் கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் - ஓடுகின்ற காற்று அசைத்தலினால் இலை யுதிர்ந்த கிளையிலுள்ள நெற்றுக்கள் மலையினின்று விழும் அருவியைப் போல ஒல்லென்னும்படி ஒலியாநிற்கும்; புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் சென்ற காதலர் வழி - புல்லிய இலையையுடைய ஓமையையுடைய புலி இயங்குகின்ற சுரத்து நெறியிலே சென்ற என் காதலர்பால்; வழிப்பட்ட நெஞ்சு நல்வினைப் பாற்று - அவரை வழிபட்டுப் பின்னே சென்றொழிந்த என்னெஞ்சம் முன்பு செய்த நல்வினையின் பயனை இப்பொழுது துய்ப்பதாயிராநின்றது; ஈண்டு ஒழிந்து ஆனாக் கௌவை மலைந்த யானே தோழி நோய்ப்பாலேன் - அந்த நெஞ்சுபோல நல்வினை செய்திலாதேனாகலின் இங்கே தங்கி ஊரார் தூற்றும் அடங்காத பழிச்சொல்லைச் சூடப்பெற்ற யானே தோழீ ! தீவினையின் பாலேனாகி அதன் பயனை நுகராநின்றேன்; உள்ளுதொறும் நகுவேன் - இங்ஙனம் இருவினைப் பயனையும் நுகருமாறு பெற்றதனை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே யானே என்னை நகுவது செய்யா நிற்பேன்காண்!; எ - று.
(வி - ம்.) வள்ளுகிர் - பெரிய நகம். கொடிறு - குறடு என்று வழங்குவது; இங்குப் பற்றுக்குறடென்றது ஈயம்பூசுங் குறட்டினை. அவலத்தால் மீட்டும் விளி தோன்றியது. நோய்ப்பாலேனென்றது துன்பத்துப் புலம்பல்.
வழிபட்டதென்றது அவரருளிப்பாடிட்டுக்கொள்ள வேண்டியென்றவாறு. ஆனாத கௌவையினாலும் இறந்துபடாமையின் பெருந்தகைமை யழியவும் உயிர்வாழ்தல் மருந்துபோலுமென உள்ளுதொறும் நகுவே னென்றாள்.
உள்ளுறை :- பிடி தலைவனாகவும், பாலை தலைவியாகவும், புலி அன்னை முதலாயினோராகவும், அத்தம் தோழியாகவுங்கொண்டு பிடி தோலைப் பொளித்துக்கொண்டது போலத் தலைவியினலத்தைத் தலைவன் பெற்றுண்டு போகலும் அந்தப் பாலையின் இலை தீர்ந்த நெற்று ஒலிப்பது போல நெஞ்சழிந்த தலைவி புலம்ப அருகிருந்த தோழி புலி வழங்குதல் போல அன்னை முதலானோர் இடையே இயங்கப் பெறுதலாலே, தலைவியைத் தேற்றவுமியலா திருந்தனளெனக் கொள்க. மெய்ப்பாடு - அழுகை பற்றிய நகை; பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) இதனை உரையாசிரியர் களவொழுக்கத்தினிடையே வரைதற்குப் பொருளீட்டப் பிரிந்த தலைவனைக் கருதி மெலிந்த தலைவி கூற்றாகக் கருதுகின்றார். இப்பிரிவு கற்புக் காலத்தது என்று கோடலே சிறப்பாகும். அலர் களவு கற்பு என்னும் இரண்டிற்கும் பொதுவாகும் என்க.
(107)