(து - ம்,) என்பது, தலைவன் களவொழுக்கத்து நீட்டித்தலாலே, அதுபொறாத தோழி களவில் அருகிவருதலை யொழித்து வரைந்து கொள்ளுமாறு குறிப்பாற் கூறுகின்றாள்; பசப்பூரப்பெற்றுத் தலைவி வருந்த அவளை நீ யாதனாலோ கைவிட்டொழித்தனை, அதற்கு யான் நோகின்றேனென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
| மலையயற் கலித்த மையார் ஏனல் |
| துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
| அணையக் கண்ட அங்குடிக் குறவர் |
| கணையர் கிணையர் கைபுனை கவணர் |
5 | விளியர் புறக்குடி யார்க்கும் நாட |
| பழகிய பகையும் பிரிவின் னாதே |
| முகையேர் இலங்கெயிற்று இன்நகை மடந்தை |
| சுடர்புரை திருநுதல் பசப்பத் |
| தொடர்பியாங்கு விட்டனை நோகோ யானே. |
(சொ - ள்.) மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் துணையின் தீர்ந்த கடுங்கண் யானை அணையக் கண்ட - மலைப்பக்கத்து முளைத்துத் தழைத்த கரிய நிறமுடைய தினைப்புனத்தைத் தின்னக் கருதித் தன் பிடியை விட்டு நீங்கிய கொடிய களிற்று யானை வந்து புகுந்ததை நோக்கிய; அம் குடிக் குறவர் கணையர் கிணையர் கைபுனை கவணர் விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட - அழகிய குடியிலுள்ள குறவர் கணையுடையவரும் கிணைப்பறையுடையவரும் கை விரலிலே கோத்த கவணுடையவரும் கூவிப் பேரிரைச்சலிடுபவருமாகிக் குடியிருப்பின் புறமெல்லாம் சென்று ஆரவாரித்துச் சூழும் மலைநாடனே! பழகிய பகையும் பிரிவு இன்னாது - பழகியிருந்த பகைவராயினாரும் அருகிலிருந்து பிரிவரென்றால் அப்பிரிவுதான் முன்பு பழகினார்க்கு இன்னாமையைத் தருவதொன்றாகுமன்றோ!; முகை ஏர் இலங்கு எயிற்று இன்நகை மடந்தை சுடர்புரை திருநுதல் பசப்ப - அங்ஙனமாக நின்னை யின்றியமையாத முல்லை யரும்பு போன்ற இலங்கிய எயிற்றையும் இனிய நகையையுமுடைய மடந்தையினது சுடர்போன்ற ஒளியையுடைய அழகிய நெற்றியிலே பசலையூருமாறு; தொடர்பு யாங்கு விட்டனை யான் நோகு - நீ அவளது தொடர்ச்சியை எவ்வண்ணம் கைவிட்டனை ? இதனைக் கருதியே யான் வருந்தாநின்றேன் காண்; (எ - று.)
(வி - ம்.)கலித்தல் - முளைத்தல், தழைத்தல், செழித்தலுமாம். உயிரொன்றுளமுமொன்றாயிருந்த நும்மில் நீயிர் பிரிவுறி னிவளிறந்து பட்டொழியு மன்றோவென்றறிவுறுத்துவாள் பகையும் பிரியினின்னாது காண்மினென்றாள்.
உள்ளுறை :- ஏனல் தலைவியாகவும், யானை தலைவனாகவுங் கொண்டு தினைப்புனத்துப் புகுந்து உண்ண வந்த யானையைக் கண்ட குறவர் அதனை யொறுக்கும்படி படையினராய் ஆர்த்தல்போல நீ களவொழுக்கத்துத் தலைவியை முயங்க வருவதைக் குறவர் அறிந்தால் நின்னை ஏதஞ்செய்யுமாறு படையினராய்ச் சூழ்ந்துகொள்ளுவராதலின் வரைந்தெய்துக வென்றதாம்: திருநுதல் பசப்ப என்றது பசலை பாய்தல். பழகிய பகையும் பிரிவின்னாதென்றது எம்மெய்யாயினுமொப்புமை கோடல்.
ஏனை மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.
(பெரு - ரை.) இது காப்பு மிகுதியும் அலரும் நலந்தொலைவும் கூறி வரைவுகடாயபடியாம்.
(108)