திணை : நெய்தல்.

     துறை : இது, காப்பு மிகுதிக்கண் இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, காவல் மிகுதியாலே தலைவனைக் கூடப் பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி "நீ வருந்தாதேகொள், நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவாரெனக் கூறுவாள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்ததும், அதனாலே தலைவி படுந்துன்பமும் சிறைப்புறத்திருந்த தலைவன் கேட்டு வரைவொடு புகுமாறு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு “காப்பின் மிகுதி கையற வரினும்” (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.

    
பெய்யாது வைகிய கோதைபோல 
    
மெய்சா யினையவர் செய்குறி பிழைப்ப 
    
உள்ளி நொதும லேர்புரை தெள்ளிதின் 
    
வாரா ரென்னும் புலவி யுட்கொளல் 
5
ஒழிக மாளநின் நெஞ்சத் தானே 
    
புணரி பொருத பூமண லடைகரை 
    
யாழி மருங்கின் அலவன் ஓம்பி 
    
வலவன் வள்பாய்ந் தூர 
    
நிலவுவிரிந் தன்றாற் கான லானே. 

     (சொ - ள்.) அவர் செய்குறி பிழைப்ப - அவர் செய்த குறி இடையீடுபட்டுத் தவறுதலாலே; பெய்யாது வைகிய கோதை போல மெய் சாயினை - சூடாது கிடந்த பூமாலை போல நின் மெய் வாடினையாகி; நொதுமல் ஏர்பு உரை உள்ளி - அயலில் எழுதலையுடைய பழிச் சொல்லைக் கருதி; தெள்ளிதின் வாரார் என்னும் புலவி உள் கொள்ளல் - இனித் திண்ணமாக அவர் நம் பால் வருவாரல்லர் என்னும் புலவியை உட்கொள்ளாது; நின் நெஞ்சத்து ஒழிக - நின் நெஞ்சத்து அதனை ஒழிப்பாயாக! புணரி பொருத பூ மணல் அடைகரை - அலைவந்து மோதிய இளமணல் அடுத்த கடற்கரையின் கண்ணே; ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர - தாம் ஊர்ந்து வருகின்ற தேரின் ஆழியிடத்துப் படாதவாறு ஞெண்டுகளை விலக்கிப் பாகன் வாரைப் பிடித்து ஆராய்ந்து செலுத்துமாறு, கானலான் நிலவு விரிந்தன்று - கானலிடத்து நிலவு விரிந்தது காண்! எ - று.

     (வி - ம்.) சாயினை - இளைத்தனை. மாள : முன்னிலையசை. வள்பு - வார். மாவின் வலப்புறத்தே தன் பொறைகொளவிருத்தலின் வலவனெனப்பட்டான்.

    நொதுமல் ஏர்பு உரை - அலாறிவுறுத்தல். மெய்சாயினையென்றது உடம்புநனி சுருங்கல். வாராரென்னும் புலவியுட்கொளலென்றது பொய்யாக் கோடல். அவர் செய்குறி பிழைப்பவென்றது அக்குறியையறிந்து உடனே புறம்போகாதவாறு அன்னை துயிலாமை முதலிய காப்புமிகுதி யறிவுறுத்தல். அலவனுக்கு ஊறுபடாதவாறு தேர் செலுத்தப்படு மென்றது நீ பழிச்சொல்லால் வருந்தாதபடி வரைந்து இல்லற நிகழ்த்தற் கொருப்படுவா னென்றவாறு. இவற்றைக் கேட்ட தலைமகன் வரையக் கருதுமென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) நொதுமலர் நேர்புரை என்றும் பாடம். இதற்கு அயலோர் வாய் நேர்ந்து கூறும் பழிச்சொல் என்க. கானலான்: வேற்றுமை மயக்கம், நிலவு விரிந்தன்று என்றது இரவுக் குறிக்கண் நீ தேரூர்ந்து வந்தாயாயினும்யாங்கள் தாய் முதலியோர் அறியாவண்ணம் குறியிடம் சேர்தற்கும் நிலவு வெளிப்படுதலாகிய இடையூறுளதாதல் அறிக எனத் தலைவனுக்குக் காப்பு மிகுதியும் இடையூறும் கூறியவாறாதல் உணர்க. வரைவு முடுக்குதல் பயன் என்க.

(11)