(து - ம்,) என்பது, உடன்போயினாள் மகளெனக்கேட்ட நற்றாய் இளமையின்கண் அறிவுமுதிர்ந்தமை நோக்கி வியந்தனளாயினும், இதுகாறும் பிரிந்தறியாதாள் பிரிதற்காற்றாளாய் முன்பு உணவுண்ணவும் வெறுக்குஞ் சிறுவிளையாட்டினையுடையாள் அறிவும் ஆசாரமும் எப்படியறிந்தனள் ? தந்தை சோற்றைக் கருதாளாய் மறுத்துண்ணுஞ் சிறுவன்மையளாயினளேயென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "தன்னும் அவனும் அவளும் சுட்டி" (தொல். அகத். 36) எனவரும் நூற்பாவின்கண் 'நன்மை' என்றதனால் நன்மை குறித்து நற்றாய் புலம்பினள் என்க.
துறை : (2) மகள் நிலையுரைத்ததூ உமாம்.
(து - ம்.) என்பது, வரைந்த பின் இல்வாழ்க்கையின் மணமனைச் சென்றுவந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்துகின்றாள், முன்பு உணவுண்ணமறுத்த சிறுவிளையாட்டினையுடையாள் அறிவும் ஒழுக்கமும் எப்படி யறிந்தனள்? தந்தை சோற்றைக்கருதாது மறுத்துண்ணும் வன்மையளாயினளே யென வியந்து கூறாநிற்பது. இஃது உரிப்பொருளால் மருதமாயிற்று.
(வி - ம்.) இதுவுமது.
| பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் |
| விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் |
| புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் |
| உண்ணென்று ஒக்குபு 1புடைப்பத் தெண்ணீர் |
5 | முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று |
| அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் |
| பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி |
| ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி |
| அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் |
10 | கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் |
| கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் |
| ஒழுகுநீர் நுணங்கறல் போலப் |
| பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே. |
(சொ - ள்.) பிரசம் கலந்த சுவை வெண் தீம் பால் விரி கதிர்ப் பொன் கலத்து ஒருகை ஏந்தி - தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பாலுணவை விரிந்த ஒளியையுடைய பொன்னாலாகிய கலத்திலிட்டு அதனை ஒரு கையிலேந்தி நின்று; புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் ஓக்குபு உண் என்று புடைப்ப - புடைப்பாகச் சுற்றிய பூவொத்த மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை ஓச்சி நீ உண்ணுவாய் என்று எறிதலும்; தெள் நீர் முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்பத் தத்துற்று - தெளிந்த ஒளியையுடைய முத்துக்களை உள்ளே பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து; அரி நரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரி மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி - மெல்லியவாய நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமையடைந்த செவிலியர் பின்தொடர்ந்து பற்ற முடியாமல் மெலிந்தொழியுமாறு தான் முன்றிலின்கணுள்ள பந்தரின் கீழோடி 'நீ உண்ணுவாய்' என்றதன் விடையாக; ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி-யான் உண்ணேன் காண்!" என்று மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டினையுடைய என் மகள்; அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் - நல்ல அறிவும் ஆசாரமும் எப்படி உணர்ந்தனளோ? கொண்டகொழுநன் குடி வறன் உற்றென கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் - தன்கை பற்றிய கொழுநன் குடி வறுமையுற்றதாகத் தன்னை ஈன்றுதவிய தந்தையினது செல்வமிக்க உணவை நினைகிலளாகி; ஒழுகு நீர் நுணங்கு அறல்போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையள் - ஓடுகின்ற நீரிலே இடையீடுற்றுக் கிடக்கும் நுண்ணிய மணல் போல ஒரு பொழுதின்றி யொருபொழுதுண்ணும் சிறிய வன்மையுடையளாயினாளே, இஃதென்ன வியப்பு; எ - று.
(வி - ம்.) அரி - பருக்கைக்கல். அரிநரை - மெல்லியநரை. பரிதல் - ஓடுதல்.
பாலுணவையும் வெறுப்பவள் பொழுது மறுத்துண்பாளாயது அதனினும் கேள்வனின்பஞ் சிறந்தது போலுமென் றிரங்கினாள். விளையாட்டி யாண்டுணர்ந்தனனென்றது நம் ஏவலை மறுத்து விளையாடுபவள் காதலன் ஏவலும் அவனுக்கேற்றபடி நடத்தலுமாகியவற்றுக்கேற்ற அறிவும் ஆசாரமும் எவ்வாறு பெற்றனளென்று வியந்ததாம். மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல். இஃது உரிப் பொருளாற் பாலை.
(2) உரைமேற்கூறியதே யொக்கும். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.
(பெரு - ரை.) பிரசம் - தேன். தேன் கலந்த சுவைமிக்க வெளிய இனிய பால் எனலே சாலும். தேன் கலந்தா லொத்த எனல் வேண்டா கூறலாம். புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் என்பதற்குப் புடைத்துழிப் புடைக்கப்படுவோரைச் சுற்றிக்கொள்ளும் இயல்புடைய பூவைத் தலையிலே யுடைய பசிய சிறிய கோல் என்க. துவளும் இயல்புடையதும் புடைத்துழி நோகாமைப் பொருட்டுத் தலையிலே மலர் உளதாக ஒடித்துக் கொண்ட சிறிய பசிய பூங்கொம்பு என்பது கருத்து. பந்தர் - மல்லிகை முல்லை முதலிய படர்ந்த பூம்பந்தர். சிறுமியாகலின் முது செவிலியர் புகவியலாத பூம்பந்தரின் கீழ்ப் புகுந்து கொண்டு அவர் ஏவலை மறுத்தாள் என்பது கருத்து. சிறு மதுகை - சிறு பருவத்திலேயே எய்திய பெருவன்மை என்றவாறு.
இனி இச்செய்யுளை நற்றாய் கூற்று என்பதினும் செவிலி கூற்றென்பதினும் காட்டில் அகம்புகன் மரபின் வாயில்களாகிய தோழி முதலியோர் தம்முட் கூறிக் கொண்டது என்று கோடலே மிகவும் பொருந்துவதாகும். இதற்கு "கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்துபுறந் தருதலும் சுற்ற மோம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்புகள், முகம்புகன் முறைமையிற் கிழவோற் குரைத்தல், அகம்புகன் மரபின் வாயில்கட்குரிய" (தொல். கற். 11) என்னும் விதி கொள்க.
இனி, இச்செய்யுள் இவ்விதி பற்றியும் செய்யுளியலுள் "வாயிலுசாவே தம்முளு முரிய என்பதனால் தலைமகற் குரைத்தலேயன்றித் தம் முட்டாமே" கூறியதாக ஆசிரியர் இளம்பூரணர் கூறுதலும் காண்க. (தொல். கற்பு. 11. உரை.).இனி, இச்செய்யுளின்கண் "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தாதை சோறுள்ளாள் பொழுது மறுத்துண்ணும் எனத் தலைவனும் தலைவியும் பெரிதும் நல்குரவுற்றனர்" என்பதுபட வருதல் வழுவேயாயினும்
| "சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு |
| அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே" |
என (தொல். பொருளியல். 51) வழுவமைத்தலின் அமையும் என்க. இதன்கண் "குடிவறனுற்றென நல்குரவு கூறியும் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது" என ஆசிரியர் நச்சினார்க்கினியர் இச்செய்யுளையே இந்நூற்பாவிற்குக் காட்டி விளக்கினர்.
(110)