(து - ம்,) என்பது, பொருள்வயிற்சென்ற தலைவன், இடைச்சுரத்து ஆற்றானாகித் தலைவியின் உருவெளித்தோற்றம் நோக்கி "முன்பு நான் விடைபெறும் பொழுது கூந்தலை விரித்து அதனுண்மறைந்து அழிந்தேங்கித் துன்புற்று நின்ற நம் காதலியின் வருந்திய நோக்கம் இப்பெருங்காட்டினைக் கடந்தும் என்னெதிரி லெய்த வந்தனவே இஃதென்னே"யென்று அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு “மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்” (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| உழையணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப் |
| புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய் |
| கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம் |
| பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவால் |
5 | அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே |
| சேறும் மடந்தை என்றலின் தான்தன் |
| நெய்தல் உண்கண் பைதல் கூரப் |
| பின்னிருங் கூந்தல் மறையினள் பெரிதழிந்து |
| உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின் |
10 | இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் |
| ஆம்பலங் குழலின் ஏங்கிக் |
| கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே. |
(சொ - ள்.) மடந்தை அருஞ் செயல் பொருள் பிணி முன்னி யாம் சேறும் என்றலின் - மடந்தாய்! எம்முள்ளம் அருமையாக ஈட்டப்படும் பொருளவாவினாலே பிணிக்கப்பட்டதை எண்ணியாஞ் செல்லுகின்றோம் என்றவுடன்; தான் தன் நெய்தல் உண்கண் பைதல் கூரப் பின் இருங் கூந்தல் மறையினள் பெரிது அழிந்து - அவள் தான் தன்னுடைய நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்கள் வருத்தம் மிகப்பின்னுகின்ற (கரிய) கூந்தலை விரித்து அதனுள்ளே மறைந்து நின்று பெரிதும் கலக்கமடைந்து; உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் - உதியஞ் சேரல் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தின்கண்ணே; பெருங்களத்து இயவர் இம்மென் ஊதும் ஆம்பலம் குழலின் - களம்பாடுநருடன் வாச்சியம் வாசிப்போர் விரைவாக ஊதுகின்ற ஆம்பல் என்னும் பண்ணையுடைய இனிய புல்லாங்குழல் இசையெடுத்தாற் போல; ஏங்கிக் கலங்கு அஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கு - வாய்விட்டழுது கலங்கிய வருத்தமுறுகின்றவளினுடைய துன்பங்கொண்ட பார்வைகள் தாம்; உழை அணந்து உண்ட இறைவாங்கு உயர் சினை புல் அரை இரத்திப் பொதிப்புறம் பசுங் காய் - மானினம் நிமிர்ந்து தழையுண்ணுதலினாலே சிறிது வளைந்த உயர்ந்த கிளைகளையும் புல்லிய அடியையுமுடைய இலந்தை மரங்களின் மேலே களியையுடைய பசிய காய்; கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் - பரல் பொருந்திய சிறிய நெறியின்கண் உதிர்ந்து நிறையப் பரவாநிற்கும்; பெருங்காடு இறந்தும் எய்த வந்தன - பெரிய சுரத்தைக் கடந்தும் ஈங்கு எம்முன்னே அடைய வந்தன; இஃதென்ன வியப்பு !; எ - று.
(வி - ம்.) அணத்தல் - அண்ணாத்தல்; நிமிர்தல். இறை - சிறிது. இரத்தி - இலந்தை. இம்மெனல்: விரைவுக்குறிப்பு. ஆம்பல் - ஒரு பண்; இனி வெண்கலத்தால் ஆம்பற்பூ வடிவாக அணைசுபண்ணி நுனியில் வைக்கப்பட்ட புல்லாங்குழலெனவுமாம்.
நன்னிமித்த மன்மையின் அழுகையைப் புலப்படுத்தாது கூந்தலான் முகத்தை மறைத்தனளாதலின், கூந்தலின் மறையினளென்றான். புலம்பு முந்துறுத்தலின் மொழிபகர நாவெழாது கலங்கிநின்றமை கருதியே பெரிதழிந்தென்றான். கைகடத்தலின் அழுகையும் கூறினான். அழும்பொழுதேயும் ஆம்பலங்குழலோ டொத்தலின் மகிழ்ந்து நுவல்வாளாயின் அவளது மொழி அளவில் சுவையுடையதென்பது போதராநின்றது. இஃது எதிர்பெய்து பரிதல்.
இறைச்சி :- இலந்தை மானினத்தால் இலையுண்ணப்பட்டதாயினும் நிரம்பிய கனிகளை நெறியிடை யுதிர்க்குமென்றது, தலைவி பசலையால் நலனுண்ணப்பட்டவளாயினும் யாம் இன்னே செல்லின் மிக்க இன்பம் பயவாநிற்பளாதலி னியைந்தவாறு செய்வேமென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - இடைச்சுரத்தழுங்கல்.
(பெரு - ரை.) நோக்குக் காடு இறந்தும் எய்தவந்தன என இயைக்க. ஞாட்பு - போர்க்களம். இயவர் ஊதும் இம்மென் ஆம்பலங் குழல் என இயைத்து இம்மென் என்பது ஒலிக்குறிப்பெனக் கோடலே நன்று. என்னை ? குழல் ஊதுவோர் விரைவாகவே ஊதவேண்டும். என்பது விதியன்று, அவர் மெல்லவும் இடைநிகராகவும் விரைந்தும் ஊதுவதே இயல்பாகலின் என்க. 'விரைவாங்கு' என்றும், 'இரத்திப் பசுங்காய் பொற்ப' என்றும் பாடவேற்றுமைகளும் உண்டு.
(113)