(து - ம்,) என்பது இரவுக்குறி வந்தொழுகுந்தலைமகனை நெறியினது குற்றங்கூறி மறுத்துவரைவொடு வருமாறு கருதிய தோழி சிறைப்புறத்தானாய அவன் கேட்குமாற்றானே தலைவியை நோக்கித் "தோழீ, மழை பெய்தலின் இடி தாக்கி ஒரு களிற்றைக் கொன்றது. அதன் கோட்டினை நமர் கொணர்வதாகவும் உகிரை யடக்குவதாகவும் பேசிய ஆரவாரங்கேட்டு வருந்தியிருப்பேன்முன் நம் காதலனும் வந்தனன்; அவன் வருநெறியிற் கான்யாற்றையும் அஞ்சுகிற்பே"னென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "களனும் பொழுதும் . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" என்னும் விதியின்கண் (தொல். கள. 23) அமைத்துக்கொள்க. "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" என்னும் விதிகொள்ளினுமாம். இதற்குப் பயன் தலைவனுக்கு ஏதம் நிகழாமே பாதுகாத்தல். முன்னதன் பயன் வரைவுகடாதல் என இவற்றின் வேற்றுமையும் நுண்ணிதின் உணர்க.
| வெண்கோடு கொண்டு வியலறை வைப்பவும் |
| பச்சூன் கெண்டி வள்ளுகிர் முணக்கவும் |
| மறுகுதொறு புலாவஞ் சிறுகுடி அரவம் |
| வைகிக் கேட்டுப் பையாந் திசினே |
5 | அளிதோ தானே தோழி அல்கல் |
| வந்தோன் மன்ற குன்ற நாடன் |
| துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரை |
| பொருதிரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல் |
| ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல்லேறு |
10 | பாம்புகவின் அழிக்கும் ஓங்குவரை பொத்தி |
| மையின் மடப்பிடி இனையக |
் | கையூன்றுபு இழிதரு களிறெறிந் தன்றே. |
(சொ - ள்.) தோழி ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல் ஏறு பாம்பு கவின் அழிக்கும் ஓங்குவரை பொத்தி - தோழீ! ஈரிய குரலின் மிக்க ஓசையையுடைய இடியேறு பாம்பின் அழகைக் கெடுக்கின்றதாகி உயர்ந்த மலைமேல் மோதி; மையின் மடப்பிடி இனையக் கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்று - கரிய நிறத்தையுடைய இளம்பிடி வருந்துமாறு தனது துதிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றின் மேலே பாய்ந்து அதனைக் கொன்றொழிந்தது; வெண்கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் பச்சூன் கெண்டி வள்உகிர் முணக்கவும் - அங்ஙனம் இறந்த யானையை நம் ஐயன்மார் பிளந்து அதன் வெளிய கோடுகளையெடுத்து அகன்ற பாறையின்கண்ணே ஊன்காயுமாறு போகடுவதாகவும் அதன் பசிய ஊனை அழித்து மிகப் பெரிய உகிர்களைப் புதைப்பதாகவும் பேசிக் கொள்ளுகின்ற இவற்றாலே; புலாவு அம் சிறுகுடி மறுகுதொறும் அரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசின் - புலவு மணங் கமழ்கின்ற சிறுகுடியிலுள்ள தெருவுதோறும் உண்டாகும் ஆரவாரத்தை இரவு முழுதும் துயிலாதிருந்து கேட்டு வருந்தினேன்; அல்கல் குன்றநாடன் மன்ற வந்தோன் - அத்தகைய இரவிலே குன்ற நாடனும் திண்ணமாக இரவுக்குறி கூடும்படி கருதி வந்தனன்காண் !; துளி பெயல் பொறித்த புள்ளித் தொல்கரை பொரு திரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல் - அவன் வருநெறியில் மழையின் துளி பெய்தலாலே பொறிக்கப்பட்ட புள்ளிகளையுடைய பழைமையாகிய கரையை மோதுகின்ற உயர்வையுடைய அலைகளோடு வருகின்ற கான்யாற்றினைக் கருதி யான் அஞ்சா நின்றேன்; அளிதோ தானே - ஆதலின் அவன் இரவுக்குறி வருதல் இரங்குவதற்குரிய தொன்றாயிரா நின்றது; எ - று.
(வி - ம்.) வைத்தல் - போக்குதல்; விடுத்தல். முணக்கல் - அடக்குதல். கெண்டுதல் - வெட்டுதல். பையாத்தல் - வருந்துதல். அல்கல் - இரவு. வந்தோன்: முற்று. இடியோசைகேட்ட பாம்பு நடுங்கியொடுங்கல் வெளிப்படை. பொத்தல் - மோதல்.
நாடன் வந்ததறிந்ததும் குறியிடத்து இறைவியைக் கொண்டு செல்லாதது ஊர் துஞ்சாமையானென அறிவுறுத்துவாள் அரவங்கேட்டுப் பையாந் திசினென்றாள். தலைமகன் வெறாதபடி அவன்பால் அன்புடைமை காட்டுவாள் அளிதோதானே யென்றாள். யாறஞ்சுவலெனவும் இடிகளெறிந்த தெனவும் ஆறுபார்த்துற்ற அச்சங்கூறினாள். இவற்றான் இரவுக்குறி இடையீடுபட்டமையின் வரைந்தெய்துக வென்றவாறு. மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - இரவுக்குறி விலக்கி வரைவுடம்படுத்தல்.
(பெரு - ரை.) இஃது ஆற்றது தீமை கூறி இரவுக்குறி விலக்கியது; புலாவும் சிறுகுடி என்றும் பாடம்.
(114)