116. கந்தரத்தனார்
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி, தோழிக்கு வன்பொறை எதிரழிந்து சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைவன் மணஞ்செய்துகொள்ளாது நீட்டித்ததனாலே தலைவியது ஆற்றாமையறிந்து அவர் வந்தெய்துவராதலின் நீ வருந்தாதே வலிந்து பொறுத்திருவென்ற தோழியை நோக்கி, 'அவள் நம் காதலன் நம்பால் வைத்த நட்பானது தொடர்பின்றி அறவொழிந்தபின்னும் அயன்மாதர் என்னை அலர் கூறுவ தொழிந்தாரிலர்; அதனை யெங்ஙன மாற்றுவே" னென்று எதிரழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "அருமை செய்து அயர்ப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் 
    
தாமறிந்து உணர்க என்ப மாதோ 
    
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று 
    
இருவெதிர் ஈன்ற ஏற்றிலைக் கொழுமுளை 
5
சூன்முதிர் மடப்பிடி நாண்மேயல் ஆரும் 
    
மலைகெழு நாடன் கேண்மை பலவின் 
    
மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம் 
    
விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச் 
    
சேணுஞ் சென்றுக் கன்றே அறியாது 
10
ஏகல் அடுக்கத்து இருண்முகை யிருந்த 
    
குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர் 
    
இன்னும் ஓவார் என்திறத்து அலரே. 

    (சொ - ள்.) தீமை கண்டோர் திறத்தும் தாம் அறிந்து உணர்க என்ப பெரியோர் - கொடிய தீத்தொழிலைச் செய்பவரிடத்து அச்செயலை நேரிலே கண்டு வைத்தும் உள்ளத்தாலாராய்ந்து அத்தொழில் செய்வோர் இனி அதனைச் செய்யா தொழிவாராக என்று பலபடியாக நுவன்று பெரியோர் பொறுத்திருப்பர்; சூல் முதிர் மடபிடி ஏமுற்று நாப்பண் பிண்டம் வழுவ இருவெதிர் ஈன்ற ஏற்று இலைக் கொழுமுளை நாள்மேயல் ஆரும் - அங்ஙனமுமாகாது சூல் முதிர்ந்த இளம்பிடியானை அறியாமையாலே தன் வயிற்றிலுள்ள சூல் அழிந்து புறம் போந்து விழுமாறு பெரிய மூங்கிலில் முளைத்தெழுந்த இலையில்லாத கொழுவிய முளையை விடியலிலே சென்று தின்னாநிற்கும்; மலைகெழு நாடன் கேண்மை - மலைவிளங்கிய நாடன் என்னைக் கை விட்டமை(யால)் அவனுடைய கேண்மையானது; பலவின் மா சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்குத் தொடர்பு அறச் சேணும் சென்று உக்கன்று -பலாவின் கரிய கிளையினின்று கனிந்து கீழே விழுகின்ற காய் முதிர்ந்த பெரிய பழம் பிறர் உண்ணாதபடி மலையின் பிளப்பாகிய அளையினுள் விழுந்தொழிந்தாற்போல தொடர்ச்சியறப் பன்னாளின் முன்னே சென்றொழிந்தது; ஏகல் அடுக்கத்து இருள்முகை இருந்த குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர் - அதனை அறியாது பெரிய மலைப் பக்கத்திலுள்ள இருள் செறிந்த குவட்டிலிருந்த குறிஞ்சியிலுள்ள நல்ல ஊரின்கணிருக்கும் பெண்டிர்தாம்; என்திறத்து அலர் இன்னும் ஓவார் - என்னிமித்தமாக இன்னும் பழிகூறுதலை ஒழிந்தாரிலர்; இனி யான் அதனை எவ்வண்ணம் ஆற்றுவேன் ? எ - று.

    (வி - ம்.) பிண்டம் - கருப்பம். வழுவல் - வெளிப்படல். ஏமுறல் - மயங்குதல்; ஈண்டு அறியாமை மேனின்றது. வெதிர் - மூங்கில். கோள் - காய். ஏ - பெருமை. கேண்மை பழம் வீழ்ந்துக்காங்குச் சென்றுக்கன்று எனக் கூட்டுக. முகை - துறுகல்: மரமிகுதியால் இருளடர்ந்த முகையென்றவாறு. கேண்மை பலவின்கனியாகவும், அக்கேண்மை தனக்குப் பயன்படாமை கனி அளையிலே விழுந்தழிந்தாற் போல்வதாகவும் உவமையோடு பொருத்திக்கொள்க; இது, சிறப்பு நிலைக்களமாகச் சினையோடு சினை வந்த பயவுவமம்.

    தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பவர் நம்மைத் துறத்தலின் நாம் அரியேமாகியது பற்றித் தாமும் அரியராயினார் போலுமெனத் தன் வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையுங் கூறினாள். அவர் ஓவார் என்றது துன்பத்துப் புலம்பல்.

    உள்ளுறை :- சூன்முற்றிய பிடியானை, மூங்கிலின் முளையைத் தின்றால் அதன் கொடுமையால் தனது சூல் பிண்டமாகி விழுந்தொழியுமென்பதை யறியாமல் அம்முளையைத் தின்று பின்பு தன் சூல் வழுவுதலால் வருந்துவதுபோல, நாண் முதலியவற்றால் மேம்பட்ட யான் இங்ஙனந் தொடர்பறுங் கேள்வனை நயந்தால் பின்பு ஏதிலாரெடுக்கும் அலர்காரணமாக நமது பண்புமுதலாயின அழியு மென்பதனை யறியாமல், உடன்பட்டு இப்பொழுது அலரா லெல்லா மிழந்தே னென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) வேற்றலைக் கொழுமுளை என்றும் பாடம். இதுவே சிறந்த பாடமாகும். வேல்போலும் கூரிய தலையையுடையமுளை என்க. சூன்முதிர் மடப்பிணை என்பதும் பாடம். இனி, பெரியோர் "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்னும் சீரிய கொள்கையுடையராகலின் தீமை செய்தலைக் கண்கூடாகக் காணப்பட்டோர் திறத்தும் அவரே அத்தீமையை அறிந்து உணர்ந்து திருந்துக என்று வாளாவிருப்பர். அங்ஙன மின்றி, இவ்வூர்ப் பெண்டிர் தீமையில்லாத என் திறத்து அலர் ஒழிந்திலர் என்பது கருத்தாகக்கொள்க.

    நாப்பண் ஏமுற்று என்பது இடையிலே கெட்டு என்றவாறு. நாப்பண் என்பதற்கு வயிறு என்று உரையாசிரியர் கொண்டனர். பிண்டம் நாப்பண் ஏமுற்றுவழுவ என மாறுக. இடை என்றது, கருப்பம் முதிர்ந்து பிறத்தற்கு இடையிலே என்றவாறு.

(116)