திணை : நெய்தல்.

    துறை :(1) இது, வரைவுநீட ஆற்றாளாய தலைவி வன்பொறை யெதிரழிந்து சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைமகன் மணஞ்செய்துகொள்ள நீட்டித்தலாலே தலைமகள் வருந்துவதை அறிந்த தோழி அவர் விரைவில் வருவராதலின், அதுகாறும் நீ வருந்தாதே யென்றலும் அவள், பொறாளாகி 'இவ்வண்ணமாய் வருகின்ற மாலைப்பொழுதையும் கருதாதுநீங்கினராதலின், அதனால் யான் அடைந்தநோய் முருகணங்கியதால் வந்ததென ஊரார் கூறுவர; அவ்வலர்மொழியை எய்தியும் வாழ்தல் பண்பன்றாதலின் யான் உயிர் வாழலே'னென் றழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.)இதற்கு "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    துறை : (2) சிறைப்புறமுமாம்.

    (து - ம்,) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்டு விரைவிலே வரையும் வண்ணம் முன்னே கூறியபடி கூறாநிற்பது. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

    (இ - ம்.)இதற்கும் அவ்விதியே அமையும்.

    
பெருங்கடல் முழங்கக் கானல் மலர 
    
இருங்கழி ஓதம் இல்லிறந்து மலிர 
    
வள்ளிதழ் நெய்தல் கூம்பப் புள்ளுடன் 
    
கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேரச் 
5
செல்சுடர் மழுங்கச் சிவந்துவாங்கு மண்டிலம் 
    
கல்சேர்பு நண்ணிப் படரடைபு நடுங்கப் 
    
புலம்பொடு வந்த புன்கண் மாலை 
    
அன்னர் உன்னார் கழியிற் பன்னாள் 
    
வாழலேன் வாழி தோழி யென்கண் 
10
பிணிபிறிது ஆகக் கூறுவர் 
    
பழிபிறிது ஆகல் பண்புமார் அன்றே, 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ ! நீ வாழி; பெருங்கடல் முழங்கக் கானல் மலர இருங்கழி ஓதம் இல் இறந்து மலிர - பெரிய கடல் முழங்காநிற்கவும் கடல் அருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும், கரிய கழியின் நீர்வெள்ளம் நமது மனையெல்லை கடந்து நிறைந்து வாராநிற்பவும்; வள் இதழ் நெய்தல் கூம்ப - பெரிய இதழையுடைய நெய்தல் மலர் குவியவும்; புள் உடன் கமழ் பூ பொதும்பர்க் கட்சி சேர - காக்கைகள் ஒருசேர மணம்வீசும் பூஞ்சோலையிலுள்ள தம்தம் கூடுகளிலே சென்று தங்கா நிற்பவும்; வாங்கு மண்டிலம் சிவந்து கல்சேர்பு நண்ணி செல்சுடர் மழுங்க - வளைந்த ஆதித்த மண்டிலம் சிவந்து தோன்றி அத்தமனக் குன்றைச் சென்றடைந்து எங்கும் முன்பு பரவிய சுடர் மழுக்கமடையவும்; படர் அடைபு நடுங்கப் புலம்பொடு வந்த புன்கண் மாலை - அவற்றை நோக்கித் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே யான் அடைந்து நடுங்கும்படி அதனையுடன் கொண்டுவந்த புன்கண் செய்யும் மாலைப்பொழுதில்; அன்னர் உன்னார் கழியின் - அத்தலைவர் தாம் என்னை நினையாராகி அகன்றொழிந்தால்; என்கண் பிணிபிறிது ஆகக் கூறுவர் பழிபிறிது ஆகல் பண்பும் அன்று - அதனா லென்பாலுண்டாய காமநோயாலாய வேறுபாடு முருகு அணங்கியதால் வந்ததாகுமென்று ஊரிலுள்ளார் கூறுவர், யான் எய்திய நோயை வேறொன்றன் மேலிட்டு் அங்ஙனம் பழி பிறிதொன்றாக அயலார் கூறுதல் பண்புடையதன்றாதலின்; பல் நாள் வாழலேன் - இனி யான் நெடுநாள்காறும் உயிரேடு வாழ்ந்திரேன் காண் ! எ - று.

    (வி - ம்.) மலிர்தல் - நிறைதல். புள் - காக்கை. கட்சி - பறவைக்கூடு. ஆர்: அசைநிலை.

    புணர்ந்தார்க்கன்றி இன்பஞ் செய்யாமையாலே தனக்குத் துன்புறுத்துங் கடலை முன்னே கூறினாள். சேக்கையிலே சேவலும் பெடையும் புகுதக் காண்டலின் அங்ஙனம் யானும் ஆயினேனில்லையேயென்பாள், புள்ளுடன் கட்சிசேர வென்றாள். புல்லியுறையுமாறு வெப்பநீங்கித் தட்பஞ் செய்தற்கேதுவாயிருத்தலிற் சுடர் மழுங்கினமையுடன் கூறினாள். ஆற்றாமை மீதூர்தலின் இம்மாலையில் இனி வாழலேனென இறந்துபடுதல் கூறினாள். இவையனைத்தும் துன்பத்துப் புலம்பல். உன்னாரென்றது ஐயஞ்செய்தல். ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) தலைவனுடைய அயன்மை தோன்றக் காதலர் என்னாது அன்னர் என்றாள். பன்னாள் வாழலேன், வாழாது யான் உயிர் நீத்துழி யான் இறந்தமைக்குரிய பிணி பிறிதாகக் கூறுவர். அங்ஙனம் பழி பிறிது ஆதல் பண்பும் அன்று என்றாள் எனினுமாம்.

(117)