(து - ம்,) என்பது, வினைவயிற் சென்ற காதலன் குறித்த பருவத்து வாராமையால் அதனை ஆற்றாத தலைவி, இவ் விளவேனிற்காலத்தை நோக்குந்தோறும் 'தலைவர் நம்மை மறந்தாரென நாம் வருந்துவதன்றி மெல்லிய பாதிரிமலர் விற்பவளை நோக்கியும் என்னெஞ்சு வருந்துகின்றதாதலின், யான் எங்ஙனம் ஆற்றுவே' னென் றழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 20) என்பதனகண் அமைத்துக் கொள்க.
| அடைகரை மாஅத்து அல்குசினை ஒலியத் |
| தளிர்கவின் எய்திய தண்ணறும் பொதும்பின் |
| சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் |
| புகன்றெதிர் ஆலும் பூமலி காலையும் |
5 | அகன்றோர் மன்றநம் மறந்திசி னோரென |
| இணருறுபு உடைவதன் தலையும் புணர்வினை |
| ஓவ மாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய |
| துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி |
| வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப் |
10 | புதுமலர் தெருவுதொறு நுவலும் |
| நொதும லாட்டிக்கு நோமென் நெஞ்சே. |
(சொ - ள்.) அடைகரை மாஅத்து அல்கு சினை ஒலியத்தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில் - யாற்றை அடுத்த கரையின்கணுள்ள மாமரங்கள் நெருங்கிய கிளையெல்லாம் தழையும்படி தளிர் ஈன்று அழகமைந்த தண்ணிய நறிய சோலையின்கண்ணே; சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் புகன்று எதிர் ஆலும் - சேவலுடனே பொருந்திய சிவந்த கண்ணையுடைய கரிய குயில் ஒன்றனை ஒன்று விரும்பி எதிரெதிரிருந்து ஆரவாரிக்கும்; இணர் உறுபு பூ மலி காலையும் - பூங்கொத்தினையுற்று மலர்கள் மலரும் இளவேனிற்காலத்தும்; அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என உடைவதன் தலையும் - முன்பு பிரிந்தகன்ற காதலர் திண்ணமாக நம்மை மறந்தனர் என வருத்தமுறுவதன் மேலும்; புணர் வினை ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி வால் இதழ் அலரி - தம் தொழிலில் வல்ல ஓவியர் ஒள்ளிய அரக்கினையூட்டிய எழுதுகோல்போன்ற தலையில் நுண்ணிய பஞ்சினையுடைய பாதிரியின் வெளிய இதழையுடைய மலர்களை; வண்டுபட ஏந்திப் புதுமலர் தெருவு தொறும் நுவலும் நொதுமலாட்டிக்கு என் நெஞ்சுநோம் - வண்டுகள் மொய்க்கும்படி வட்டியிலேந்தி அப்புதிய மலரைத் தெருவுகள் தோறும் விலைகூறிச் செல்லாநின்ற ஏதிலாட்டியாகிய பூவிலைமடந்தையை நோக்குந்தோறும் என்னெஞ்சு நோவாநின்றது; ஆதலின் யான் இனி எவ்வண்ணம் ஆற்றியுளேனாவேன் ? எ - று.
(வி - ம்.) மா அத்து, அத்து; அல்வழிச்சாரியை. அல்கல் - நெருங்கல். ஒவமாக்கள் - சித்திரவேலை செய்வோர். இணருறுபு பூமலி காலையுமென மாறிக்கூட்டுக. அலரியாகிய புதியமலரென இயைத்து இருபெயரொட்டாக்கினும் அமையும். பாதிரிமலரைக் கூறுதலானே பாலைத்திணையும் வேனிற் பருவமுமாமெனக் கொள்க. பாதிரியின் நறுமணம் இன்பம் விளைத்துப் பிரிந்தாரைத் துன்புறத்தலின், பூவிலைமடந்தைக்குத் தன் நெஞ்சு நோமென்றாள்.
சேவலொடு குயில் கெழீஇ ஆலுமென்றது, யான் அங்ஙனம் தலைவனொடு கெழீஇ ஆலப்பெற்றிலேனே யென்றிரங்கியதாம். உடைந்ததும் நெஞ்சுநோதலும் அழிவில்கூட்டத்துப் பிரிவாற்றாமை. ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) தெருவுதோறும் மலர் விற்கும் தொழில் வேனிற் பருவம் வந்து முதிராநிற்பதனையும் அப்புதுமலர் சூடிக் கொண்கனொடு விளையாடற் கியலாமையும் நினைவூட்டுதலின் என் நெஞ்சுநோம் என்றவாறு.
(118)