திணை : குறிஞ்சி.

    துறை : இது, சிறைப்புறமாகத் தோழி செறிப்பறி வுறீஇயது.

    (து - ம்,) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியின் இற்செறிப்பும் உள்ளுறையால் வேற்றுவரைவு நேர்ந்தமையும் தோழி அறிவுறுத்தி வரைவுடன் படுத்துவாளாய் 'மலைநாடன் யார்தரவரினும் மாலையனாகி வாராநிற்பன்; வந்தும் யாது பயன்; முயங்கப் பெறுபவனல்லன்; புலந்து போயினும் போவானாக' வென்று வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "களனும் பொழுதும் . . . . . .அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
திணையுண் கேழல் இரியப் புனவன் 
    
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் 
    
ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன் 
    
ஆர்தர வந்தனன் ஆயினும் படப்பை 
5
இன்முசுப் பெருங்கலை நன்மேயல் ஆரும் 
    
பன்மலர்க் கான்யாற்று உம்பர்க் கருங்கலை 
    
கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும் 
    
பெருவரை நீழல் வருகுவன் குளவியொடு 
    
கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும் 
10
முயங்கல் பெறுகுவன் அல்லன் 
    
புலவி கொளீஇயர்தன் மலையினும் பெரிதே. 

    (சொ - ள்.) தினை உண் கேழல் இரிய புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் - தினைப்புனத்து வந்து மேயும் பன்றி பட்டொழியுமாறு அகத்தினைப்புனத்துக்குத் தலைவன் சிறிய இயந்திரமாக அமைத்து வைத்த பெரிய கல்லின் கீழால்; ஒள் கேழ் வய புலி படூஉம் நாடன் ஆர்தர வந்தனன் ஆயினும் - ஒள்ளிய நிறத்தையும் வலியையுமுடைய புலி புகுந்துபடுகின்ற மலைநாடன் யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்; படப்பை இன்முசுப் பெருங்கலை நல்மேயல் ஆரும் பல் மலர்க் கான்யாற்று உம்பர் - கொல்லையின்கண் இனிய முசுவின் பெரியகலை நல்ல உணவை உண்ணாநிற்கும் பலவாய மலரையுடைய கான்யாற்றின் மேலுள்ள; கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் பெருவரை நிழல் - கரையின்கண்ணே பெரிய கலை மான், கூட்டமாகிய மலையாட்டினத்துடனே தாவித் துள்ளிக் குதியாநிற்கும் பெரிய மூங்கிற்புதர் நிழலில்; குளவியொடு கூவிளம் ததைந்த கண்ணியன் வருகுவன் - அவன் குளவியுடனே கூவிளமலரிடையிட்டுக் கட்டிய நெருங்கிய மாலையுடைவனாகி வாராநிற்பன்; யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன் - வந்தும் யாது பயன்? தலைவியின் முயக்கத்தை இனி எவ்வளவேனும் அடைபவனல்லன்; தன் மலையினும் பெரிது புலவி கொளீஇயர் - அது காரணமாகத் தன் மலையினுங்காட்டிற் பெரிதாகப் புலந்து கொள்ளினும் புலந்துகொள்வானாக!;எ - று.

     (வி - ம்.) அடார் - கருங்கற்பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்திக் கீழே முட்டுக்கொடுத்து உள்ளால் உணவு வைப்ப அவ்வுணவை விலங்கு சென்று தொடுதலுங் கல்வீழ்ந்துகொல்லும் பொறி. முசுப்பெருங்கலை - ஆண் குரங்கு. கடும்பு - சுற்றம். குளவி - மலைப்பச்சை; காட்டுமல்லிகையுமாம். கூவிளம் - வில்வம். முயங்கல் பெறுகுவனல்லன் என்றது அவன் புணர்வுமறுத்தல்.

    உள்ளுறை :- கேழல் அகப்படுமாறு வைத்த பொறியுள்ளே புலிபடு மென்றது, இத்தலைவன் ஏற்றுக்கொள்ள விரும்பியும் இவன் பாணித்தமையின் இவனினுஞ் சிறந்த தோன்றலொருவன் வரையக்கருதி வந்துளனென வேற்றுவரைவு கூறி அறிவுறுத்தியதாம்.

    இறைச்சி :- (1) மலைமான் யாட்டினத்தொடு தாவியுகளுமென்றது, வேற்றுவரைவு நேரினும் அது கலையொடு யாடுசேர்ந்தாற் போலன்றிப் பிறிதில்லையெனத் தலைவனாற்றுமாறு கூறியதாம்.

    (2) முசுக்கலை நன்மேயலாருமென்றது வரைந்து கொள்ளி்ன் இடையீடின்றித் தலைவிபால் இன்பந் துய்க்கலாகு மென்றதாம். முயங்கல் பெறுகுவனல்லனென்றது இற்செறிப்பு அறிவுறுத்தியதாயிற்று. மெய்ப்பாடு - வெகுளி பற்றிய பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

    (பெரு - ரை.) ஆர்தரவந்தனன் என்றதற்கு இன்பம் நுகர்தற்கு வந்தனன் என்று பொருள்கோடல் நேரிதாம். இன்பம் நுகர்தற்கு வந்தனன் ஆயினும் அதற்கியன்ற வரைவொடு வாரானாய் வரைவு நீடற்கே வருகுவன். அவள்தானும் இற்செறிக்கப்பட்டுவிட்டமையான் முயங்கல் பெறுகுவானும் அல்லன். அவன் புலப்பினும் புலந்திடுக என்பது கருத்தென்க. 'கூதளம் ததைந்த கண்ணியன்' என்றும் பாடம்.

(119)