திணை : முல்லை.

    துறை : இது, வினைமுற்றி மறுத்தருந் தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.

    (து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீண்டு வரும்பொழுது காதலியை நினைந்து கவன்ற தலைமகனைத் தேர்ப்பாகன் நோக்கி 'மனைவியினுடைய தோளிலே துயிலுவதை விரும்பினோய், வருந்தாதே கொள்; நின் கண்ணி வாழ்க; நீ விரும்பிய காதலியினூர் இப்புறவத்து ளிருக்கின்றதாதலின், விரையச் சென்று காணுமாறு இன்னே தேரைச் செலுத்துகிற்பேன் கா'ணெனத் தெருட்டிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஆற்றது பண்பும் கருமத்து வினையும் . . . . தோற்றஞ்சான்ற அன்னவை பிறவும் இளையோர்க்குரிய கிளவி என்ப" (தொல். கற். 30) என்னும் நூற்பாவினால் அமைத்துக் கொள்க. என்னை ? தேர்ப்பாகனும் தலைவன் ஏவலிளையரில் ஒருவனே ஆகலின் என்க. இனி, பாகன் கூற்றிற்கு உரியவனாக ஆசிரியர் தொல்காப்பியனார் விதந்தெடுத்துக் கூறாராயினும், பேராசிரியர் செய்யுளியலுள் "பாணன் கூத்தன் விறலி பரத்தை . . . . தொன்னெறி மரபிற் கற்பிற்குரியர்" (செய்யுளியல். 190) எனவரும் நூற்பா வுரையின்கண் "தொன்னெறி மரபின் என்றதனாற் பாகனும் தூதனும் கூறவும் அமையும்" எனத் தழுவிக்கோடலும் காண்க. அவ்விடத்தே பாகன் கூற்றிற்கு இச்செய்யுளையே எடுத்துக்காட்டினர், அதனை ஆண்டுக் காண்க.

    
விதையர் கொன்ற முதையற் பூழி  
    
இடுமுறை நிரப்பிய ஈரிலை வரகின்  
    
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை  
    
அரலை அங்காட்டு இரலையொடு வதியும்  
5
புறவிற்று அம்மநீ நயந்தோள் ஊரே  
    
எல்லிவிட் டன்று வேந்தெனச் சொல்லுபு  
    
பரியல் வாழ்கநின் கண்ணி காண்வர  
    
விரியுளைப் பொலிந்த வீங்குசெலல் கலிமா  
    
வண்பரி தயங்க எழீஇத் தண்பெயல்  
10
கான்யாற் றிடுமணற் கரைபிறக் கொழிய  
    
1 வெவ்விருந் தயரும் மனைவி  
    
மெல்லிறைப் பணைத்தோள் 2 துயிலமர் போயே.  

    (சொ - ள்.) காண் வர விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி வண் பரி மா தயங்க - அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க; எழீஇத் தண் பெயல் கான் யாற்று இடு மணல் கரை பிறக்கு ஒழிய - எழுந்து தண்ணிய மழை பெய்தலாலே பெருகிய கான் யாற்றினருகில் இடப்பட்ட மணலானாகிய கரைபின்னே செல்லும்படி போந்து; வெவ் விருந்து அயரும் மனைவி மெல் இறை பணை தோள் துயில் அமர்போய்! - நின் புதிய வரவை விரும்பி ஏற்று மகிழும் மனைவியினுடைய மென்மையாயுயர்ந்து பருத்த தோளின் கண்ணவாகிய துயிலை விரும்புகின்ற இறைவனே !; வேந்து எல்லி விட்டன்று எனச் சொல்லுபு பரியல் - நம் அரசன் நேற்றிரவுதான் போரை முடித்து நின்னைச் செல்லுமாறு விடை கொடுத்தான் என்று கூறி வருந்தாதே கொள் !; நின் கண்ணி வாழ்க - நின் மாலை வாடாது நீடு வாழ்வதாக; நீ நயந்தோள் ஊர் - நீ விரும்பிச் செல்லும் காதலியின் ஊர்; விதையர் கொன்ற முதையல் பூழி இடுமுறை நிரப்பிய ஈர் இலை வரகின் கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை - விதை விதைக்கும் ஆயர் பலபடியாக உழுதுபுரட்டிய பழங்கொல்லைப் புழுதியில் நிறைவுற முறையே விதைக்கப்பட்டுள்ள ஈரிய இலை நிரம்பிய வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற கண்டார்க்கு விருப்பம் வருகின்ற இளைய பிணை மான்; அரலை அம் காட்டு இரலையொடு வதியும் புறவிற்று - மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின்கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாநிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது கண்டனையாதலின் விரையச் சென்று இன்னே காணுமாறு கதுமெனத் தேரைச் செலுத்துகிற்பேன் காண்!; எ - று.

    (வி - ம்.) முதையல்-பழங்கொல்லை. அரலை-மரல்விதை. பிறக்கு: அசை நிலை யிடைச்சொல். 'வேந்துவிட்டன்று' என்றதனாலே தலைவன் வினைவலபாங்க னாயினமையறிக. கண்டனையாதலினென்பது முதற்குறிப்பெச்சம்.

    இறைச்சி :- கவைக்கதிர்கறித்த பிணை காட்டின்கண் இரலையொடு வதியுமென்றது, நின் செல்வத்தைத் துய்க்குந் தலைவி நின்னொடுகலந்து மனையகத்து இனி இன்புற்று வதியாநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - பாகன் தேற்றத் தேறுதல்.

    (பெரு - ரை.) இது தலைவன் நிலையுணர்ந்து அவனும் மருளும்படி தேரினை நனி விரைந்து செலுத்தி வந்த பாகன் மிக விரைவில் தலைவி இருக்கின்ற புறவினை எய்திய பொழுது பெருமானே கவலற்க! இதுதான் நின் காதலி உறையும் புறவு என்று கூறி அவனை மகிழ்வித்தது என்க. பாகர் அவ்வாறு வியத்தகு முறையில் தேர் செலுத்துதல் உண்டென்பதை "புள்ளியற் கலிமா உடைமையான" என்னும் தொல்காப்பியர் மொழியானும், ஒரு தலைவன் தன் பாகன் தேர் செலுத்திய விரைவில் மருண்டு,

  
"புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் 
  
 ஏறிய தல்லது வந்த ஆறும் 
  
 நனியறிந் தன்றோ இலனே 
  
 இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே 
  
 வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ 
  
 மானுரு வாகநின் மனம்பூட் டினையோ 
  
 உரைமதி வாழியோ வலவ" 

என்று கூறும் வியப்புரையானும் உணர்க! (தொல். கற். 53 நச்-உரை மேற்கோள.்)எனவே இனி நீ இரங்கி எம்பெருமாட்டியைக் கண்டு மகிழ்ந்தருள்க! என்பது குறிப்பெச்சமாகக் கோடலே சிறப்பு என்க.

(121)
 (பாடம்) 1. 
கொடித்தேர்க்,
 2. 
துயிலமர்வோயே.