(து - ம்.) என்பது, களவொழுக்கத்திலே காணும்பொழுதினுங் காணாப்பொழுது பெரிதாகலாற் பிரிந்துறையுந் தலைவி ஆற்றாளாகித் துன்புறுவதையும் தலைவன் சிறைப்புறத்து வந்திருப்பதனையும் அறிந்த தோழி அவன் விரைய வரைந்து கொள்ளுமாற்றானே கூறுவாளாய்த் தலைவியை நோக்கி நீ அணிந்து, ஓடிப் பார்க்கும் விளையாடலு மில்லையாம்படி நினக்குற்ற நோயை எனக்குரையாயென ஆராய்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் முற்செய்யுட்கோதிய விதியே அமையும்.
| உரையாய் வாழி தோழி இருங்கழி |
| இரையார் குருகின் நிரைப்பறைத் தொழுதி |
| வாங்குமடற் குடம்பைத் தூங்கிருள் துவன்றும் |
| பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக் |
5 | கானல் ஆயமொடு காலைக் குற்ற |
| கட்கமழ் அலர தண்ணறுங் காவி |
| அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ |
| வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடிப் |
| புலவுத்திரை உதைத்த கொடுந்தாள் கண்டல் |
10 | 1 செம்பேர் இரணை அலவற் பார்க்குஞ் |
| சிறுவிளை ஆடலும் அழுங்க |
| 2 நினக்குப் பெருந்துயரம் ஆகிய நோயே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ வாழி!; இருங் கழி இரை ஆர் குருகின் நிரைப் பறைத் தொழுது - கரிய கழியின் கணுள்ள மீனாகிய இரைகளைத் தின்ற குருகுகளின் நிரையாகிய பறவைக் கூட்டம்; வாங்கு மடல் குடம்பைத் தூங்கு இருள் துவன்றும்-வளைந்த பனை மடலின் கண்ணே கட்டிய குடம்பைகளில் நிறைந்த இருட்பொழுது நெருங்கியுறையாநிற்கும்; பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை - பனை மரங்கள் உயர்ந்த வெளிய மணற்கொல்லையைச் சூழ்ந்த; கானல் ஆயமொடு காலை குற்ற கள்கமழ் அலர தண் நறுங் காவி அம்பகை நெறித்தழை அணி பெறத் தைஇ - கானலிடத்து நின் ஆயத்தாரோடு காலையிலே சென்று கொய்து கொணர்ந்த தேன்மணம் வீசும் மலரையுடைய ஈரிய நறிய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபட்ட நெறிப்பையுடைய தழையை அழகு பொருந்த உடுத்து; வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடி - கோல மிடுதலையுற்ற சிற்றில் புனைந்து சிறப்ப விரைந்தோடி விளையாடி; புலவுத் திரை உதைத்த கொடுந்தாள் கண்டல் செம் பேர் இரணை அலவன் பார்க்கும் சிறுவிளையாடலும் - புலவு நாற்றத்தையுடைய அலைமோதிய வளைந்த அடியையுடைய கண்டல் மரத்து வேரின் கீழாகச் செல்லுகின்ற சிவந்த பெரிய இரட்டையாக நெருங்கியிருக்கின்ற ஞெண்டுகளை நோக்கி மகிழாநிற்குஞ் சிறிய விளையாட்டும்; அழுங்க நினக்குப் பெருந்துயரம் ஆகிய நோய் உரையாய் - இல்லையாம்படி வருத்தம் எய்துமாறு நினக்குத் தானுற்ற பெரிய துயரமாகிய நோயை நீ கூறாய்! எ - று.
(வி - ம்.) நிரைப்பறைக் குருகின் தொழுதியென மாறி நிரையாகப் பறத்தலையுடைய குருகின் தொழுதியெனவுமாம். நெறிசுருள். தைஇ-உடுத்து. வரி - வரித்தல்; கோலமிடுதல். இரணை - இரண்டு; ஈண்டு ஆணும் பெண்ணுமாகிய இரண்டு ஞெண்டுகள்.சிற்றில்புனைந்து பரிசிறந்தோடி யென்றது தலைவி சிற்றில் புனைந்த அறியாப் பருவத்தே தலைவன் விருந்தாய் வந்தேனென ஆங்கே பூழிப் போனகமளித்த காலந்தொட்டு அவனை மணமகனாகக் கருதியிருந்தமை யறிவுறுத்தியதாம். கானலிலே தழையுடுத்ததைக் கூறியது தலைமகன் கொடுத்த தழையுடுத்துப் பகற்குறியிற் களவொழுக்கத்துப் பயின்றமை அறிவுறுத்தியதாம். இரணையலவற் பார்க்குமென்றது களவொழுக்கத்தை விட்டுக் கற்பிற்பட்டுத் தலைவனுந் தலைவியுங் கூடியின்புறுமாட்சியைப் பெறவில்லையே யென்றதாம். பெருந்துயரமாகிய நோயென்றது தலைவியின் துன்பமிகுதி யறிவுறுத்தியதாம். இவற்றைக் கேட்டிருந்த தலைமகன் நம் பிரிவால் தலைவி துன்பெய்தினள் போலாமெனப் பிற்றைஞான்றே வரைவொடு புகுவானாவது. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-வரைவுடன்படுத்தல்.
(பெரு - ரை.) செம்பு ஏர் - செம்பு போன்ற நிறத்தையுடைய எனினுமாம்.
(123)
(பாடம்) 1. | சேர்ப்பேர் ஈரளை. 2. | நினைக்குறு. | |