திணை : நெய்தல்.

     துறை : இது, பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவற் குரைத்தது.

     (து - ம்.) என்பது, தலைவனாலே பிரிவுணர்த்தப்பட்ட தோழி அவனை நோக்கி ஐயனே! தலைவி தனியே யிருப்பதை யான் ஆற்றகிலேன் ஆயினும், தானே வந்தெய்தியதே யென்று வருந்துவளாதலின் இனி, நீ பிரியா துறைவாயாகவென அழிந்துகூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.

    
ஒன்றில் காலை அன்றில் போலப்  
    
புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை 
    
யானும்ஆற் றேனது தானும்வந் தன்று 
    
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை 
5
முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர் 
    
நௌவி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி  
    
உருக்குறு கொள்கலங் கடுப்ப விருப்புறத் 
    
தெண்ணீர்க் குமிழி இழிதருந் 
    
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. 

     (சொ - ள்.) ஒன்று இல் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை - ஒன்று பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற் பறவை ஆற்றாதிறந்தொழிதல்போலத் தனிமையுற்றுறையும் புன்கணமைந்த வாழ்க்கையை; யானும் ஆற்றேன் - யானும் ஆற்றாமல் இறந்துபடுவேன் ஆவேன்; ஈங்கை முகை அதிரல் வீ மோட்டு மணல் எக்கர் - அங்ஙனம் ஆற்றாமைக்குக் காரணமான ஈங்கையின் அரும்பும் புனமல்லிகை மலரும் மணலாலமைந்த உயர்ந்த திடரிலுதிர்ந்து; நௌவி நோன்குளம்பு அழுந்தென - மான்களின் வலிய குளம்பினால் மிதிபட் டழுந்துகையினாலே; வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்பு உறத்தெள் நீர்க் குமிழி இழிதரும் - வெள்ளியை மூசை (குகை)யிலிட்டு உருக்கிச் சாய்த்தாற் போல விருப்பமுறும்படி அவற்றினின்று தெளிந்த நீர்க் குமிழியாக வடியும்; தண்ணீர் ததைஇ நின்றபொழுது - தண்ணீரைப் பெற்றுநின்ற கூதிர்ப்பருவமாகிய; அதுதானும் வந்தன்று - அதுதானும் வந்திறுத்துவிட்டது; ஐய நீங்கல் வாழியர்-ஆதலின் ஐயனே என்னைக் கைவிட்டு நீங்காதுறைவாயாக! எ - று.

     (வி - ம்.) புலம்பு - தனிமை: வருத்தமுமாம். நௌவி - மான். நோன்மை - வலிமை. ததைஇ - பெற்று. அதிரல் - புனமல்லிகை. ஒன்றுதல் - சேர்தலெனக் கொண்டு சேராத காலத்து அன்றிற்பறவை இறந்துபடுதல் போலெனவுமாம். இது தலைவி கூற்றைத் தோழி கூற்றாகக் கூறுதற்கு முன்பு கூறிய விதியை யிங்குக் கொள்க; மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். யானும் ஆற்றேனென்றது துன்பத்துப் புலம்பல்.

    முயங்கி யுறையாதவழிக் கூதிர்வாடையா லெய்து நோயினுமிறப்பது கொடிதன்றென்பாள் ஆற்றாதிறந்துபடுவே னென்றாள். மெய்ப்பாடு - அவலத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவனைச் செலவழுங்குவித்தல்.

     (பெரு - ரை.) அன்றில் ஒன்று இல் காலை புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கையை ஆற்றாதிறந்துபடுதல் போன்று யானும் ஆற்றாம லிறந்துபடுவேன் என்பது கருத்து. அதிரல்வீ என மாறுக. பொழுதாகிய அதுதானும் வந்தன்று என இயைத்துக் கொள்க.

(124)