128. நற்சேந்தனார
     திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, குறைநேர்ந்த தோழி தலைவி குறைநயப்பக் கூறியது.

     (து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்தின்கண்ணே தலைமகனது குறைதீர்க்க உடன்பட்ட தோழி தலைமகளை நோக்கி, "நின்மேனி வாடவும், நெற்றியினொளி கரப்பவும் எனக்கு உரைத்தாயல்லை, நான் அவற்றின் காரணத்தை யறிவேன்" என்று கூறி என்மீது தவறேற்றி வருந்தாதே கொள்: தினைப்புனத்தில் ஒரு தோன்றல்வந்து என் முதுகை யணைத்துக் கொண்டனன், அதனை நினைந்து இங்ஙனமாயிற்றென்று, தான் கூறுவதனாலே தலைவி ஆராய்ந்து தலைவனது குறையைக் கூறவந்தாள்' என்றறியும்படி கூறாநிற்பது,

     (இ - ம்.) இதற்கு, "மறைந்தவள் அருகத் தன்னொடும் அவளொடும் முதன்மூன்று அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

     துறை : (2) தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉமாம்.

     (து - ம்.) என்பது தலைவி இக் களவொழுக்கத்தினைத் தமர்க்கு அறிவுறுத்தி வேற்றுவரைவுக் குடன்படாதபடி செய்யவேண்டுங் கருத்தினளாகி அதனைத் தன் தோழியிடத்துக் கூறிப் புலப்படுத்தச் செய்ததூஉமாகும்.

     (இ - ம்.) இதற்கு, "விட்டுயிர்த்து அழுங்கினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.

    
பகலெரி சுடரின் மேனி சாயவும்  
    
பாம்பூர் மதியின் நுதலொளி கரப்பவும்  
    
எனக்குநீ உரையா யாயினை நினக்கியான்  
    
உயிர்பகுத் தன்ன மாண்பினேன் ஆகலின்  
5
அதுகண் டிசினால் யானே என்றுநனி  
    
அழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலிகுரல்  
    
ஏனல் காதலின் இடையுற் றொருவன்  
    
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச்  
    
சிறுபுறங் கவையினன் ஆக அதற்கொண்டு  
10
அஃதே நினைந்த நெஞ்சமொடு  
    
இஃதா கின்றியான் உற்ற நோயே.  

     (சொ - ள்.) ஆயிழை பகல் எரி சுடரின் மேனி சாயவும் பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் நீ எனக்கு உரையாய் ஆயினை -ஆயிழாய்! பகற் பொழுதில் எரிகின்ற விளக்கு ஒளி மழுங்கிக் காட்டுதல் போல நின் மேனி வாடவும், இராகுவினாலே கவர்ந்து கொள்ளப்பட்ட திங்களின் ஒளி கெடுதல் போல நெற்றியின் ஒளி மறைபடவும் அக்காரணத்தை நீ எனக்கு உரைத்தாயல்லை; நினக்கு யான் உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் அது கண்டிசின் என்று - நினக்கு யான் ஓருயிரை இரண்டுடம்பின் கண்ணே பகுத்துவைத்தாற் போன்ற நின்னோடு தொடர்ச்சியுற்ற மாட்சிமையுடையேனாதலால் நீ இப்பொழுது மறைத்தொழுகு மதனை யான் அறிந்துளேன் என்று நீ கருதி; யான் நனி அழுதல் ஆன்றிசின் - யான் நினக்கு அதனை உரையாததன் காரணமாக மிக அழுது வருந்தாநின்றனை; இனி இங்ஙனம் அழாதேகொள்!; ஒலிகுரல் ஏனல் காவலின் இடை கண்ணியன் கழலன் தாரன் ஒருவன் உற்றுத் தண் எனச் சிறு புறம் கவையினன் ஆக - தலை சாய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தே காவல் செய்யுமிடத்துக் கண்ணி சூடிக் கழல் அணிந்து மாலை வேய்ந்துளனாகி ஒருவன் வந்துற்று உள்ளங் குளிர்பூறும்படி என் முதுகை அணைத்துப் புல்லினனாக; அதன்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு யான் உற்ற நோய் இஃது ஆகின்று - அது முதற்கொண்டு அதனையே கருதிய உள்ளத்துடனே இப்பொழுது யான் உற்ற நோய் இத்தன்மையதாய் இராநின்றது; எ-று.

     (வி - ம்.) சாய்தல் - குறைதல். இசின்: தன்மைக்கண் வந்தது. பின்னையது ஏவலின் கண்ணது. ஒலிதல்-தழைதல். குரல்-கதிர். சிறுபுறம்-முதுகு. "பாம்பூர் மதியின் நுதலொளி கரப்ப" என்றது கிழக்கிடு பொருளே நிலைக்களனாக முதலுஞ் சினையும் மயங்கிவந்த வினையுவமம்.

     இப் பாட்டினுள் நிகழ்ந்ததை நினக்கு மறைத்தே ஒழகுகின்றேன் என்று வருந்தாதே கொள். ஒருவன் கண்ணி முதலியவற்றையுடையனாய்த் தினைக்கொல்லையுள் வந்து என்னை யணைத்துக் கொண்டான். அதனை நினைந்த நெஞ்சத்துடனே யானுற்ற காமநோய் இத்தன்மையதே யென்று தோழி கூறினாள். இங்ஙனம் என் காதலனைப் புறத்தொழுக்குடையானெனக் கொண்டாள் கொல்லெனவும், அவன் இவளைப் புல்லியது என் பொருட்டென்று கொள்ளாது தன் பொருட்டென்று கொண்டனள் கொல் லெனவும் தலைவி கருதும்படி கூறினாளாயினும், அதனுள்ளே இவள் என் உயிர்த்தோழி யென்பதைக் காதலன் உணர்த்தலால் அவன் தனது வருத்தந் தீர்க்கின்றிலையே யென்று அதற்கு முகமகனாக இவளைத் தழுவிக்கொண்டதன்றி இவள் பிறழக் கொண்ட தன்மை அவனிடத்துளதாயின் இவளைக் குறிப்பறியாது புல்லானெனவும், நமது களவொழுக்கம் இவளுஞ் சிறிதுணர்ந்தன ளாதலின், இக்குறை முடித்தற்கு மனம் நெகிழ்ந்ததனால் அவன் தழுவ வாளா இருந்தன ளெனவும் தலைவி கருதுவதனால் அவளது நாணம் நீங்காதிருத்தற்குக் காரணமாகிய பொருளை உள்ளடக்கிப் புணர்த்துக் கூறியவாறறிக. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - குறைநயப்பித்தல்.

    உரை:- நிகழ்ந்ததை நினக்கு மறைத்தேனென்று வருந்தாதே; ஒருவன்வந்து என்னைப் புனத்தின்கண்ணே முயங்கலாலே யான் காம நோயால் வருந்துகின்றே னென்றவாறு, மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - அறத்தொடு நிற்றல்.

     (பெரு - ரை.) இதன்கண் தோழி "ஏனல் காவலின் இடையுற்று ஒருவன் தண்ணெனச் சிறுபுறங் கவையினன்" என்றது படைத்து மொழிந்தது. இங்ஙனம் கூறுதல் வழுவாயினும், பொருட்பயம்பட வந்தமையின் அமைவதாயிற்று. இதனை,

  
"அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் 
  
 வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப"     (தொல். பொருளியல். 24) 

என்னும் நூற்பாவா னுணர்க.

(128)