திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இயற்கைப் புணர்ச்சியின் பிற்றைஞான்று தலைவியின் வேறுபாடுகண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த மறுநாள் தலைவியின் கண் சிவப்பு முதலாய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு ஏற்றினான் ஆயிற்றென்று வினாவிய தோழிக்கு மறைத்துக் கூறுதலானே அவள் தினைக்கதிரைக் கிளிகள் கொய்துகொண்டு போகவும் அவற்றை ஓட்ட நீ எழுந்தாயுமில்லை. இனி அழாதேனு மிருவெனக் கூறுவாள் போன்று இறைச்சியால் அவளது களவொழுக்கத்தைத் தான் அறிந்து வைத்தேனெனப் பொருள் கொள்ளுமாறு தானுமறைத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.

    
எழா அ யாகலி னெழில்நலந் தொலைய 
    
அழா அ தீமோ நொதுமலர் தலையே 
    
ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த 
    
பகழி யன்ன சேயரி மழைக்கண் 
5
இன்கடுங்1நல்ல பெருந்தோ ளோயே கொல்லன் 
    
எறிபொற்1 பிதிரிற் சிறுபல் காய 
    
வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி 
    
மயிலறி பறியா மன்னோ 
    
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே 

    (சொ - ள்.) ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சே அரி மழைக்கண் நல்ல பெருந்தோளோயே - தினைப் புனங்காவலையுடைய மழவர் ஆண்டுத் தின்றழிக்க வந்த பன்றி முதலாய விலங்குகளை யெய்து கொன்று மீட்டும் அவற்றினின்று பறித்தெடுத்த அம்புபோன்ற செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்ணையும், நல்ல பெரிய தோளையும் உடையாய்!; கொல்லன் எறிபொன் பிதிரின் சிறுபல்காய வேங்கை வீ உகும் - கொல்லனது உலைக்களத்து அடிக்கும் இரும்பின் பொறி சிதறுமாறு போலச் சிறிய பலகாயையுடைய வேங்கையின் மலர்கள் உதிர்கின்ற; ஓங்கு மலைக்கட்சி - உயர்ந்த மலையினுள்ள கூட்டிலிருக்கும்; மயில் அறிபு பைம்புறக் கிளி அறியா - மயில்கள் தாம் அறிதலைப் பசிய புறத்தினையுடைய கிளிகள் அறியாவாய்; பயில் குரல் கவரும் - நெருங்கிய தினைக் கதிர்களைக் கவர்ந்து போகா நின்றன. அதனால் அக்கதிர்களும் அழிந்துபோகின்றன காண்; எழா அய்! அவற்றை ஓட்டவேண்டிய நீ இவ்விடத்திருந்தும் எழுந்தாயல்லை! ஆகலின் எழில் நலந்தொலைய நொதுமலர் தலை அழா. அங்ஙனம் எழாதிருப்பினும் நின் அழகிய நலமெல்லாங் கெடும்படியாக அயலாரிருக்கும் இவ்விடத்து அழாதிருத்தலையேனுஞ் செய்வாயாக!; எ - று.

    (வி - ம்.) பிதிர் - பொறி. பிதிர்போல வீயுகுமெனக் கூட்டுக. கட்சி - கூடு. பயிலல் - நெருங்கல். மன் - கழிவு. அரத்தந் தோய்ந்த பகழி கண்ணுக் குவமை.

    அலரெழுமாதலின் அழாதி யென்றாள். இங்ஙனம் அழிவனவற்றைத் தமரறியின் நின்னைக் காவலுக்கு விடாரெனப் புணர்ச்சி முட்டுப்பாடு கூறுவாள் எழுந்தாயல்லை யென்பதாற் குறிப்பித்தாள். ஒரு சிலம்பனை மயக்கிப் பாய்ந்து மீண்ட கண்ணையுடையா யென்பாள் மாவீழ்த்துப் பறித்த பகழிபோன்ற கண்ணினையென உவமை முகத்தாற் கூறினாள்.

    இறைச்சி :- வேங்கைமலருதிரப் பெற்ற கூட்டிலிருக்கும் மயில் தினைக்கதிர்களைக் கிளிகள் கொண்டுபோவதனை யறிந்திருந்தும், 'நாம் கொய்துகொண்டுபோவதனை அம்மயில் அறியாவாகும்' என்று கிளிகள் கருதிக் கவர்ந்தேகுதல்போல அன்னை பலகாலுந் தூண்டியதனால் நின்னைக் காவல் செய்துறையும் யான் நின்களவொழுக்கத்தை யறிந்து வைத்தும் 'யான் அறிந்திலேன்' என நீ கருதி இதனை மறைத்தொழுகா நின்றாய் என்றதாம். மறைத்துக்கூறியொழுகுதல்; சுனையாடியதாலே பந்தாடியதாலே இவ்வேறுபாடுண்டாயதெனக் கூறுதல். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - தோழி ஆராய்ந்தறிதல். இது, தலைவி வேறுபாடு கண்டு ஆராயுந் தோழி தன் ஆராய்ச்சியை மறைத்துக் கூறியதென்பர் நச்சினார்க்கினியர்; (தொ-பொ- 114 உரை.)

    (பெரு - ரை.) சிறு பல தாஅய் என்றும் பாடம். இதனை, சிறு பலவேங்கை வீ தா அய் உகும் என்று இயைத்துப் பரந்து உதிர்கின்ற எனப் பொருள் கொள்க. மேல் விளக்கத்தின்கண் ஒரு சிலம்பனை..... கண்ணினை யென உவமைமுகத்தாற் கூறினாள் என்புழி - கண்ணினை என இறைச்சிவகையாற் கூறினார் என்றும், வேங்கைமலர்... என்ற தாம் என்னும் துணையும் வருவன உள்ளுறை யென்க. இவை இறைச்சியல்ல.

(13)
 (பாடம்) 1. 
பிதிர்வில்.