திணை : நெய்தல்.

     துறை : இது, காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, இற்செறிக்கப்பட்ட தலைமகள் காவன் மிகுதியாலே தலைவனை அடையமுடியாமையைக் கருதிய தோழி, தலைவி கூறியதுபோலக் கூறுவாளாய்த் தலைவியை நோக்கி 'ஊருந் துயிலா நின்றது; யாருமில்லை; இக்காலத்து அவரை அடையப்பெறாதபடி இற்செறிப்புற்று அயலிலுங் காவலுடையதாகியதன்றி ஊர்க்காவலர் மணியும் ஒலியாநிற்குமாதலின், யான் பொன்றுநாள் இன்றுதானோ' வென அழுங்கிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்குக், "காப்பின் கடுமை கையுற வரினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
பேரூர் துஞ்சும் யாரும் இல்லைத் 
    
திருந்துவாய்ச் சுறவம் நீர்கான்று ஒய்யெனப் 
    
பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண்வளி 
    
போரமை கதவப் புரைதொறும் தூவக் 
5
கூரெயிற்று எகினம் நடுங்கும் நன்னகர்ப 
    
பயில்பட நிவந்த பல்பூஞ் சேக்கை 
    
அயலும் மாண்சிறை யதுவே அதன்றலைக 
    
காப்புடை வாயில் போற்றோ என்னும் 
    
யாமங் கொள்பவர் நெடுநா ஒண்மணி 
10
ஒன்றெறி பாணியின் இரட்டும் 
    
இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளே. 

     (சொ - ள்.) பேர் ஊர் துஞ்சும் யாரும் இல்லை - பெரிய இவ்வூரின்கணுள்ளார் யாருந் துயிலாநிற்பர், விழித்தியங்குபவர் ஒருவரும் இல்லை; திருந்துவாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப் பெருந்தெரு உதிர் தரும் - இக்காலத்து நாம் அவரை யடையப் பெறாதபடி திருந்திய வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குதலால் அந் நீர் விரைவிலே பெரிய தெருவின்கண் உதிர்கின்ற; பெயல் உறு தண் வளி போர் அமை கதவப் புரைதொறும் தூவ - மழையாக அம் மழையோடு பொருந்திய தண்ணிய காற்று தம்மின் ஒன்றோடொன்று பொருந்துதலமைந்த வாயிற்கதவிலுள்ள துளைகள்தோறும் அந் நீரைக் கொணர்ந்து தூவாநிற்ப; கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர் - அத் தூவலாலே கூரிய பற்களையுடைய நாய்கள் நடுங்குகின்ற இவ்விராப்பொழுதில் நல்ல மாளிகையின்கண்ணே; பயில் பட நிவந்த பல் பூஞ்சேக்கை அயலும் - துயிலுமாறு உயர்ந்த பலவாய மலர்களாலமைந்த படுக்கையின் பக்கத்திலும்; மாண் சிறையது - மாட்சிமைப்பட்ட சிறைப்படுத்திய காவலையுடைத்தாயிராநின்றது; அதன்தலை காப்பு உடைவாயில் போற்று 'ஓ' என்னும் - அதன் மேலும் 'காவலையுடைய தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ!' என்று கூறாநின்ற; யாமம் கொள்பவர் நெடுநா ஒள்மணி ஒன்று எறி பாணியின் இரட்டும் - யாமந்தோறும் காவல் செய்தலை மேற்கொள்ளும் காவலரின் நெடிய நா அமைந்த ஒள்ளிய மணி ஒன்றுகின்ற தாளத்தில் மோதி எழுப்பும் ஒலி போல ஒலியாநிற்கும்; அளியேன் பொன்றும் நாள் இன்றுகொல் - ஆதலின் யாவராலும் இரங்கத்தகுந்த யான் இறந்தொழியும் நாள் இன்று தானோ? எ - று.

     (வி - ம்.) காலுதல் - கக்குதல். எகினம் - நாய். நகர் - வீடு. பாணி - தாளம்.

     புரைதொறுந் தூவுகின்ற நீர்த்துளி தன் சேக்கையில் வீசுவது கண்டு அதனால் நடுங்குவதனை முதலிலே கூறினாள். அதனினின் றுய்யுமாறு முயங்கவரும் காதலனைத் தடுக்குமேயென்பாள், நாய் நடுங்கி விழித்திருப்பதனைக் குறிப்பித்தாள். அவன் வரினும் தான் புறம்போகாவாறு தன்னைக் காக்கும் உட்காவலி னிலைமை கூறுவாள், அயலும் சிறையதுவே யென்றாள். உட்காவலுறங்கும்வழிப் புறஞ்செல்ல நினைப்பினும் அதற்கியலாதவாறு மணியிரட்டி ஊரெழுப்புவதனைக் கூறினாள். வேறு தோன்றாமையின் இனித் தானிறந்துபடுநாள் இதுவேயாமென் றிரங்கிக் கூறினாள். இது - துன்பத்துப் புலம்பல். மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாதுரைத்தல்.

     (பெரு - ரை.) கடலின்கண் திருந்துவாய்ச் சுறவம் நீர் காலுதலாலே அவ்வொலி ஒய்யென முழங்காநிற்பவும் பெருந்தெரு உதிர்தரு பெயலுறு வளி தூவாநிற்பவும் எனத் தனித்தனியே கோடல் நேரிதாம். பயில் படை நிவந்த என்றும் பாடம். படை ஒன்றன்மேல் ஒன்றாகப் படுத்த மெத்தைகள் என்க. இச் செய்யுளைத் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்குக் கூறுவாளாய்க் கூறி வரைவு கடாவியது எனக் கோடலுமாம்.

(132)