(து - ம்,) என்பது, பகற்குறியின்கண்ணே தலைவன் பிரிந்து நீடித்தலால் அது பொறாது வேறுபட்ட தலைவி நமது வேறுபாட்டையறிந்து இல்வயிற் செறிப்பார்போலுமென் றஞ்சியவிடத்து அதனையறிந்த தோழி, அன்னை தினைப்புனங் காவலுக்கேகென என்னை ஏவினாள்; நுந்தையும் ஏவினமையானே யான் உடன்படேன்போல வுரையாடி வந்தேன்; ஆதலின், மீண்டு தினைப்புனங்காவலுக்கு நாம் போதலுமமையும்; தலைவனைக் கூடுதலுமாகுமென்று அவளாற்றும்படி கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| இனிதின் இனிது தலைப்படுதும் என்பது |
| இதுகொல் வாழி தோழி காதலர் |
| வருகுறி செய்த வரையகச் சிறுதினைச் |
| செவ்வாய்ப் பாசினங் கடீஇயர் கொடிச்சி |
5 | அவ்வாய்த் தட்டையொடு அவணை யாகென |
| ஏயள்மன் யாயும் நுந்தை வாழியர் |
| அம்மா மேனி நிரைதொடிக் குறுமகள் |
| செல்லா யோநின் முள்ளெயிறு உண்கென |
| மெல்லிய இனிய கூறலின் 1 இனியானஃது |
10 | ஒல்லேன் போல உரையா டுவலே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; காதலர் வரு குறி செய்த வரை அகச் சிறுதினைச் செவ்வாய்ப் பாசு இனம் கடீஇயர் - நம் காதலர் வருதற்குக் குறி செய்த மலையிடத்துள்ள சிறிய தினைப்புனத்தே விழுகின்ற சிவந்த வாயையுடைய பசுங்கிளியின் கூட்டங்களை ஓட்டும் பொருட்டு; கொடிச்சி அவாய்த் தட்டையொடு அவனை ஆகு என யாயும் ஏயள் மன் - என்னை நோக்கிக் "கொடிச்சீ! நீ அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையைக் கைக்கொண்டு அத் தினைப் புனத்துக்குச் செல்வாயாக!" என்று அன்னையும் பல முறை மிகுதியாக ஏவினள்; நுந்தை அம் மாமேனி நிரைதொடி குறுமகள் - அன்றியம் நுந்தை என்னைக் கூவி 'அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் நிரைத்த வளையையும் உடைய இளமடந்தாய்!; செல்லாயோ நின் முள் எயிறு உண்கு என - 'நீ புனத்தின்கண்ணே சென்றிலையோ? விரைவிலே சென்று காண்! நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல்', என்று; மெல்லிய இனிய கூறலின் - மெல்லியவாகிய இனிய வார்த்தை கூறுதலினால்; இனி யான் அஃது ஒல்லேன் போல உரையாடுவல் - யான் இன்னும் பலகால் நம்மை வேண்டி அவர்களே புனத்தின்கண்ணே கொண்டு சென்று காவலின் உய்க்குமாறு கருதி அங்ஙனம் காவலுக்குச் செல்லமாட்டேன் போலச் சில வார்த்தையாடுவே னாயினேன்; தலைப்படுதும் என்பது இது கொல் இனிதின் இனிது - ஆதலின் இனித் தினைக்கொல்லையிலே சென்று காதலனைக் கூடியிருப்பாம் என்பதற்கு அறிகுறி இதுதானோ! இங்ஙனம் நிகழ்ந்த இஃது இனிய வொரு பொருளினுங்காட்டில் இனியதாயிராநின்றது; எ - று.
(வி - ம்.) தலைப்படுதல் - சென்று அடைதல். வாழியர்: அசை - பாசு. கிளி: பண்பாகுபெயர். தட்டை மூங்கிற் பிளாச்சைச் சிறிது பிளந்து அப் பிளப்பிலே சிறு கல்லைவைத்துச் சுழற்றிவீசுங் கருவி: ஒலி படப் புடைக்குங் கருவியுமாம். புனத்திலே சென்று அடைதுமெனவே அங்குக் காதலரைக் கூடுதல் திண்ணமென்பதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) இனி இச் செய்யுள், தன்னை இற்செறிப்பர் என அஞ்சி வருந்திய தலைவியைத் தோழி பெருமகளே வருந்தற்க: யாம் இன்னும் அவனை இனிதின் இனிது தலைப்படுவங்காண் என்று ஆற்றினாளைத் தலைவி அங்ஙனம் நீ கூறுதற்கு ஏது என்னை என வினவினளாக அதற்குக் காரணம் கூறும் தோழி யாயும் அவணையாகென ஏயள்மன்; நுந்தையும் செல்லாயோ உண்கு என இனிய கூறினன், யான் ஒல்லேன் போல உரையாடுவல், இது யான் இனிதின் இனிது தலைப்படுதும் என்பதற்குக் காரணம் என்று ஆற்றினள் என்று நுண்ணிதின் உரை காண்டல் நன்று. இதுகொல் என்புழி, கொல் அசைச் சொல் என்க. இங்ஙனம் கூறாது தோழி "காதலனைக் கூடியிருப்பாமென்பதற்கு அறிகுறி இதுதானோ?" என்று வினவினாளாகக் கோடல் பொருந்தாமையும் உணர்க.
(134)