திணை : குறிஞ்சி.

    துறை : இது, சிறைப்புறமாகத் தலைவி தோழிக்குரைத்தது.

     (து - ம்,) என்பது, களவொழுக்கம் மேற்கொண்ட தலைமகன் பிரிவுக்காலத்துத் தலைமகள் தான் வேறுபடுவதைச் சிறைப்புறத்தானாய அவனறிந்து இனிப் பிரியாது வரைந்துறையுமாற்றானே தோழியை நோக்கி, யான் தோள்வளை வேண்டிக் கேட்டலும் என் காதலன் பிரிவால் என்னுடம்பு நனிசுருங்கினுங் கழலாவாறு எந்தை சிறிய வளை செய்தணிந்து விடுத்தனன். ஆதலின் அவன் வாழ்கவென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் மேலைச் செய்யுட்கோதிய விதியே அமையும்.

    
திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும் 
    
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது 
    
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல 
    
என்ஐ வாழிய பலவே பன்னிய 
5
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய 
    
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல 
    
நீப்பநீங் காது வரின்வரை அமைந்து 
    
தோட்பழி மறைக்கும் உதவிப் 
    
போக்கில் பொலந்தொடி செறீஇ யோனே. 

     (சொ - ள்.) திருந்து கோல் எல்வளை வேண்டி யான் அழவும் - திருந்திய கோற்றெழில் அமைந்த ஒளி பொருந்திய தோள்வளையை விரும்பி அது பெறாமையாலே யான் அழுதலும்; என் ஐ அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது ஆய்ந்து மருந்து கொடுத்த அறவோன் போல - என் தந்தை தீர்த்தற்கரிய நோயை அடைந்தவர்க்கு அவர் விரும்பியதைக் கொடாது ஆராய்ந்து அந் நோய்க்குத் தக்க மருந்துகொடுத்த அறவாளன் போல; பன்னிய மலைகெழு நாடனொடு தலைப்பிரிவு உண்மை அறிவான் போல - யாவராலும் புகழப்படுகின்ற மலையையுடைய நாட்டையுடைய நங் காதலனும் நாமும் ஒருவரையொருவர் இடையிடை விட்டுப் பிரிகின்றதன் உண்மை சிறிதளவுதானும் அறிந்தவன் போல; நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து தோட்பழி மறைக்கும் - யான் வேண்டாமென்று கழற்றினாலும் கழன்று நீங்காது ஒருபொழுது கழன்றாலும் தன்னெல்லை கடவாமே தங்கி எனக்குண்டாகிய தோளின் பழியை மறைக்கின்ற; உதவிப் போக்கு இல் பொலம் தொடி செறீஇயோன் - உதவியையுடைய கெடாத பொன்னாலாகிய தோள்வளை செய்து தந்து செறிக்கச் செய்தனன்;பல வாழிய - ஆதலின் அவன் நெடுநாள்காறும் வாழ்வானாக; எ - று.

     (வி - ம்.) ஐ - தலைவன். என் ஐ - என் தந்தை. தலைப்பிரிவு - விட்டுப்பிரிவு. அறவோன் - மருத்துவன். சிறிய தலைப்பிரிவென்பதை நேராகக் கொண்டு சிலகாலம் விட்டுப் பிரிந்ததை என்றலுமாம்.

    பிரிதலாலே தோற்மெலிந்தும், வளைமறைத்தலால் அலர்தூற்றும் நொதுமலாட்டியர்க்குப் புலனாயிற்றில்லையென்றதாம். இஃது உடம்பு நனிசுருங்கல். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.

     (பெரு - ரை.) தலைப்பிரிவு உண்மை அறிவான்போல - பிரிவு உளதாதலை அறிவான் போல எனலே அமையும்; இனி நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து என்பதற்கு நந்தலைவர் நம்மை நீத்துழிக் கழன்று வீழந்துவிடாமலும் அவர் நம்மைத் தலைப்பட்டுழி கைக்கு அளவாக அமைந்தும் என்று பொருள் கோடலே நேரிது. எனவே உடல்மெலியும்பொழுது கழன்று வீழ்ந்தொழியாமலும் உடல்பூரிக்கும்பொழுது போதாதாகி விடாமலும் இடைநிகர்த்த அளவுடையதாய்ச் செய்து செறீஇயினன் என்பது கருத்தென்க.

(136)