(து - ம்,) என்பது, தலைமகன் பிரிந்தமையால் வேறுபட்டுக் காட்டிய தலைவியின் மெய்யை நோக்கி ஊரார் அலர்தூற்றுதலும் அதனை ஆற்றாளாயினாளைத் தோழி சிறைப்புறமாகக் கேட்டுநின்ற தலைவனுக்கு அறிவுறுத்துமாற்றானே 'முன்பு தலைவன் நினக்கு மாலை சூட்ட அதனைக் கண்ணாலே கண்டதல்லது இவ்வூரறிந்தது பிறிதொன்றன்று: அதற்கு நீ ஆற்றாதவாறு என்னை"யெனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின் பாற்படுத்துக.
| உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை |
| மலையுய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக் |
| கணங்கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த |
| பண்ணழி பழம்பார் வெண்குருகு ஈனும் |
5 | தண்ணந் துறைவன் முன்னாள் நம்மொடு |
| பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் |
| பூவுடன் நெறிதரு தொடலை தைஇக் |
| கண்ணறிவு உடைமை அல்லது நுண்வினை |
| இழையணி அல்குல் விழவாடு மகளிர் |
10 | முழங்குதிரை இன்சீர் தூங்கும் |
| அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. |
(சொ - ள்.) உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை மலை உய்த்துப் பகரும் - உவர் நிலத்து விளைகின்ற குன்றுபோலும் உப்பின் குவியலை மலைநாட்டகத்தே கொண்டுபோய் விலைகூறி விற்கின்ற; நிலையா வாழ்க்கைக் கணம் கொள் உமணர் - ஓரிடத்திலும் நிலைத்தலில்லாத வாழ்வினையுடைய கூட்டங்கொண்ட உப்பு வாணிகர்; உயங்குவயின் ஒழித்த பண் அழி பழம்பார் வெள் குருகு ஈனும் - தங்கள் பண்டி முறிந்த விடத்திலே போகட்டொழிந்த இயல்பு அழிந்த பழைய பாரின்கண் வெளிய நாரை தன் சினையை ஈனாநிற்கும்; தண் அம் துறைவன் - தண்ணிய கடலினது துறையையுடைய தலைமகன்; முன் நாள் நம்மொடு பாசு அடைக்கலித்த கணைக் கால் நெய்தல் பூவுடன் - முன்னை நாளிலே பசிய இலையிடைநின்றும் வெளியில் வந்த திரண்ட தண்டினையுடைய நெய்தன் மலருடன்; நெறிதரு தொடலை தைஇ - நெறிக்கின்ற இலையை இடையிடையிட்டுத் தொடுத்த மாலையை நினக்குச்சூட்ட; கண் அறிவு உடைமை அல்லது - அதனைக் கண்ணால் அறியக் கிடந்த தொன்றன்றி; நுண் வினை இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் - நுண்ணிய கம்மத் தொழிலான் ஆக்கிய கலனையணிந்த அல்குலையுடைய விழாக் களத்துத் துணங்கையாடு மகளிரினுடைய; இன் சீர் முழுங்குதிரை தூங்கும் - இனிய தாள அறுதி முழங்கும் கடல் ஓசை போலே பரவா நிற்கும்; அழுங்கல் மூதூர் அறிந்தன்று இன்று - ஒலியையுடைய இவ்வூர் பிறிது ஒன்றனையும் அறிந்ததில்லை; அங்ஙனமாக நீ ஆற்றாது வருந்துகின்ற தென்னையோ? எ - று.
(வி - ம்.) உமணர் - உப்புவாணிகர். கலித்தல் - முளைத்துத் தோன்றுதல். தொடலை - மாலை. சீர் - தாளவறுதி. போல்குப்பை: வினைத்தொகை. தண்ணந் துறைவன்: விரிக்கும்வழி விரித்தல். தைஇ என்னுஞ் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாத் திரிக்க. பார் - வண்டிப்பார்.
ஊர் கண்ணாலே நோக்கிய தென்றதனால், ஊரார் பார்த்தவளவே அலர் கூறுவாராயினாரென அலரறிவுறுத்தினாள். அழுங்கன்மூதூர் என்றது அலரெடுக்கும் பழிச்சொல்லாகிய ஒலியையுடைய மூதூரென்றதாம். பிறிதொன்றனையும் அறிந்ததில்லை யென்றது, இயற்கைப் புணர்ச்சி முதலாகிய நால்வகைப் புணர்ச்சியையும் இடையீடுகளையு மறிந்திலதென்றதாம். இதுகாறும் அவன் மணம்புரிந்து கொண்டனனில்லையே யென்பாள் "அறிந்தன்றோ இன்றோ என, ஊர்மேல்வைத்துக் கூறினாளாயிற்று.
உள்ளுறை :- உமணர் ஒழித்துப்போகட்ட பழம்பாரில் வெண்குருகு ஈனுமென்றது, தலைவனாலே கைவிடப்பட்ட தலைவிமேல் ஊரார் அலர் தூற்றாநிற்ப ரென்றதாம்.
இறைச்சி :- தாள அறுதி கடலோசைபோலப் பரவுமென்றது, பழிச்சொல் கடலோசைபோ லெழுந்ததென்றதாம்.
மெய்ப்பாடு - பெருமிதம்.
பயன் - வரைவுடன்படுத்தல்; தலைவியை ஆற்றுவித்தலுமாம்.
(பெரு - ரை.) இன்சீர் திரைபோல முழங்கும் என உவமவுருபு விரித்தோதுக. பண்அழி பழம்பார் என்பதற்குச் செயற்கை யழிந்துபோன பழம்பார் என்பது நேரிதாம். பண் - பண்ணுதல்; பார் - பண்டியின் ஓருறுப்பு.
(138)