(து - ம்,) என்பது, செய்தவினை முடித்து மீண்டுவந்து தலைவியுடனிருந்த தலைவன் கார்ப்பருவத்திலே பெய்த மழையை நோக்கி மேகமே, உதவியை உடையாய், நீ உலகத்துக்கு ஆதாரமாக யாவருந்தொழுமாறு கொடுமுடிகளிலே பொருந்தி உலாவுவாயாக வென வாழ்த்தாநிற்பது.
(இ - ம்.) இதனை, "கரணத்தி னமைந்து முடிந்த காலை" (தொல். கற். 5) எனவரும் நூற்பாவின்கண் "பண்ணமை பகுதி" என்பதன் கண் அமைத்துக் கொள்க.
| உலகிற்கு ஆணி யாகப் பலர்தொழப் |
| பலவயின் நிலைஇய குன்றிற் கோடுதோறு |
| ஏயினை உரைஇயரோ பெருங்கலி எழிலி |
| படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு |
5 | எழீஇ அன்ன உறையினை முழவின் |
| மண்ணார் கண்ணின் இம்மென இமிரும் |
| வணர்ந்தொலி கூந்தல் மாஅ யோளொடு |
| புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்லூர் |
| விரவுமலர் உதிர வீசி |
10 | இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே. |
(சொ - ள்.) பெருங் கலி எழிலி - பெரிய ஓசையையுடைய மேகமே!; முழவின் மண் ஆர் கண்ணின் இம் என இமிரும் - மத்தளத்தின் மார்ச்சனை வைத்த கண்போல இம்மென முழங்குகின்ற இடிகளுடனே; வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் - கடைகுழன்று தாழ்ந்த கூந்தலையுடைய மாமைநிறத்தையுடைய காதலியுடனே முயங்கி அவளது நலனை இனிதாக நுகர்ந்து யான் உறைகின்ற சாரலிலுள்ள நல்ல ஊரின்கண்ணே; விரவு மலர் உதிர வீசி இரவுப் பெயல் பொழிந்த உதவியோய் - கலந்த மலர்கள் உதிரும்படி மோதி இரவில் மழை பொழிந்த உதவியையுடையாய்; நின்ற நல் யாழ் வடி நரம்பு படுமலை எழீஇ அன்ன உறையினை - நீ நிலைபெறுதலையுடைய நல்ல யாழின் முறுக்கிய நரம்பினின்று 'படுமலை' என்னும் பண்ணினை எழுப்பினாற் போன்ற ஒலியொடு பெய்யும் மழையினை உடையையாகி; உலகிற்கு ஆணி ஆகப் பலர் தொழப் பலவயின் நிலைஇய குன்றின் கோடுதோறும் - இவ்வுலகத்துக்கோர் ஆதாரமாக யாவருந் தொழுமாறு ஆங்காங்குள்ள நிலைநின்ற பலவாகிய குன்றின் கொடுமுடிகள் தோறும்; ஏயினை உரை இயர் - பொருந்தி உலாவுவாயாக; எ - று.
(வி - ம்.) வணர்தல் - நுனி சுருண்டிருத்தல். உரைஇயர் : வியங்கோள்; உலாவுக என்னும் பொருளது. படுமலைப்பாலை - பெரும்பாலை ஏழனுள் ஒரு பண்; அது செம்பாலையுட்பட்ட குரலிற் பாகத்தையும் இளியிற் பாகத்தையும் வாங்கிக் "கைக்கிளை, உழை, விளரி், தாரம்" இவைகளுக்கு ஒரோவொன்றைக்கொண்டு சேர்க்கத் துத்தங்குரலாய்ப் படுமலைப் பாலையாகும்; இக்காலத்து அருகிய வழக்காதலின் வல்லார்வாய்க் கேட்டுணர்க.
மழையாலே குளிர்ப்புள் ளூறுதலானே அணைத்துக்கிடந்தனன் ஆதலின், மழைபொழிந்த வுதவியோ யென்றான்; உதவிபெற்றார் வாழ்த்துதல் இயல்பு. உயர்ந்த தவிசினிருந்தாலே பலரும் காண இயையு மாதலின் யாவரும் யாண்டையும் நின்னை நோக்கித் தொழுமாறு குன்றின் கண்ணுள்ள கோடுதோறும் உலாவுதி யென்றான். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவியி னின்பந்துய்த்து மகிழ்ந்திருத்தல்.
(பெரு - ரை.) "உரைஇயர்" என்பது இப்பொருட்டாதல் "கடுங்காற்றெடுப்பக் கல்பொருது உரைஇ” எனவரும் மதுரைக் காஞ்சியினுங் (378) காண்க. உலகிற்கு ஆணியாக என்பதனைக் குன்றிற்கே அடையாக்கினுமாம். என்னை? மலைகளாலேயே உலகு நிலைபெறுகின்றது என்பவாகலின். இக்காரணத்தால் மலைகட்கு வடமொழியில் பூதரம் என்னும் பெயருண்மையும் உணர்க. எழிலி! உறையினையாய் இமிரும் உதவியோய் என இசைப்பினுமாம்.
(139)