(து - ம்.) என்பது , அறத்தொடு நிற்றலின்கண் முதலிலே தலைவன் பிரிந்தமை காரணமாகத் தலைவி தன்னைத் தலைவன் இகந்தானென வருந்திப் புலம்பக் கேட்ட தோழி, அவளை ஆற்றுவிக்க வேண்டித் தலைவன் நம்மைக் கைவிட்டனனாதலின் அவனியல்பு தவறுடைத்தென்று பழித்துக் கூறலும் அதுகேட்ட தலைவி அவர் நம்மைக் கைவிட்டுக் காட்டகத்துச் சென்றிருந்தனராயினும் குறித்த பருவத்து வந்து கூடித் தலையளி செய்வரென்று அவனது நல்ல இயல்புகளைப் பொருந்தக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மறைந்தவற் காண்டல்" (தொல்-கள- 20) என்னும் நூற்பாவின்கண் "வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்" என்னும் விதிகொள்க.
| தொல்கவின்1 தொலையத் தோள்நலஞ் சாஅய் |
| நல்கார் நீத்தன ராயினு நல்குவர் |
| நட்டனர் வாழி தோழி குட்டுவன் |
| அகப்பா அழிய2 நூறிச் செம்பியன் |
5 | பகல்தீ வேட்ட ஞாட்பினு மிகப்பெரி |
| தலரெழச் சென்றனராயினு மலர்கவிழ்ந்து |
| மாமட லவிழ்ந்த காந்தளஞ் சாரலின் |
| ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத் |
| துஞ்சாத் துயரத் தஞ்சுபிடிப் பூசல் |
10 | நெடுவரை விடரகத் தியம்புங் |
| கடுமான் புல்லிய காடிறந் தோரே. |
(சொ - ள்.) தோழி மலர் கவிழ்ந்து மா மடல் அவிழ்ந்த காந்தளம் சாரலின் - தோழீ! மலர் தலைகவிழ்ந்து பெரிய இதழ் விரிந்த காந்தளையுடைய சாரலின் கண்ணே; ஞால் வாய்க் களிறு பாந்தள் பட்டு என - தொங்குகின்ற வாயையுடைய களிற்றியானை பெரும் பாம்பின்வாய்ப் பட்டதாக; துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் - சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிறும் பேரொலியானது; நெடுவரை விடர் அகத்து இயம்பும் கடுமான் புல்லிய காடு இறந்தோர் - நீண்ட மலையிடத்துள்ள விடரகத்தே சென்று எதிரொலி யெடாநிற்குங் கடிய குதிரையையுடைய கள்வர் கோமான். "புல்லி" என்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின்கண்ணே சென்ற நங் காதலர்; தோள் நலம் சா அய் தொல் கவின் தொலைய நல்கார் நீத்தனர் - என் தோளின் அழகு கெட்டு வாடிப் பழைய நலனெல்லாந் தொலையுமாறு என்னைக் கூடி இன்பங் கொடாராய்க் கைவிட்டொழிந்தாரெனக் கூறாநின்றனை!; ஆயினும்-அங்ஙனம் கைவிட்டொழிந்தாராயினும்; குட்டுவன் அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகல் தீ வேட்டஞாட்பினும் - அவர் சேரலனது கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்துக் கிள்ளிவளவன் அற்றைப் பகலே அவ்வூரைத் தீயின்வாய்ப் பெய்த போரினுங்காட்டில்; மிகப்பெரிது அலர் எழச் சென்றனராயினும் - மிகப் பெரிதாகிய பழிச்சொல்லுண்டாம்படி சென்றனரெனினும்; நட்டனர் நல்குவர் வாழி - என்பால் மிக்க நட்பு வைத்தனர்; ஆதலால், குறித்த பருவத்து வந்து தலையளி செய்வர், ஆதலின் அவர் நீடு வாழ்வாராக!; எ - று.
(வி - ம்.) சாய்தல்-நுணுகல், சாய்த்தொலையவென மாறிக் கூட்டுக. அகப்பா - மதில், ஞாட்பு - போர். விடர் - மலைப்பிளப்பு. நல்குவர் என்றது பாராட்டெடுத்தல், தொல்கவின் தொலையவென்றது, பசலைபாய்தல், தோணலஞ்சா யென்றது, உடம்புநனி சுருங்கல்.
இறைச்சி :- :- களிறு பாந்தளின்வாய்ப் பட்டதாகப் பிடி பிளிறும் பூசல் சென்று விடரகத்து ஒலிக்குமென்றது, தலைவன் பிரிவால் யான் வருந்திய வருத்தம் நோக்கி ஊராரெடுத்த அலர் சேரிசென்று பரவினும் பரவுக என்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - இயற்படமொழிதல்.
(பெரு - ரை.) சாரல் இனம்சால் வயக்களிறு என்றும் பாடம். இனம் சால் வயக்களிறு - தன் இனமாகிய யானைத்திரள் மிக்க வலியுடைய களிற்றுயானை என்க.
(14)
(பாடம்) 1. | தொலைந்து. 2. | நூறியருமிளை. | |