(து - ம்,) என்பது, பொருள்தேடும்படி ஒருப்படுத்திய நெஞ்சினைத் தலைமகன் நோக்கி, "நினக்கு அருஞ்சுரம் மிக எளியவாயிருக்கும்; யான் இவளுடைய கூந்தலிலே துயிலுவதை யொழிய விடுகலேன்; ஆதலின் வேண்டுமாயின் நீயே சென்றுகா"ணென்று அழுங்கி்க் கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| இருஞ்செம் முடிய கொடுங்கவுள் கயவாய் |
| மாரி யானையின் மருங்குல் தீண்டிப் |
| பொரியாரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை |
| நீடிய சடையோடு ஆடா மேனிக் |
5 | குன்றுறை தவசியர் போலப் பலவுடன் |
| என்றூழ் நீளிடைப் பொற்பத் தோன்றும் |
| அருஞ்சுரம் எளியமன் நினக்கே பருந்துபடப் |
| பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை |
| ஏந்துகோட்டு யானை இசைவெம் கிள்ளி |
10 | வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த |
| அரிசிலந் தெள்ளறல் அன்ன இவள் |
| விரியொலி கூந்தல் விட்டமை கலனே. |
(சொ - ள்.) இருஞ் செம் முடிய கொடுங் கவுள் கயவாய் மாரி யானையின் - நெஞ்சமே! பெரிய செவ்விய மத்தகத்தையுடைய வளைந்த கவுளையும் அகன்ற வாயையுமுடைய கரிய மேகம் போன்ற யானையின்; மருங்குல் தீண்டிப் பொரி அரைஞெமிர்ந்த புழல் காய்க் கொன்றை - விலா வுரிஞ்சுதலானே பொரிந்துள்ள அடிபரந்த உள்ளே துளைபொருந்திய காய்களையுடைய கொன்றை மரங்கள்; குன்றுஉறை நீடிய சடையோடு ஆடா மேனி தவசியர் போலப் பலவுடன் என்றூழ் நீள் இடைபொற்பத் தோன்றும் - குன்றின்கண்ணே யுறைகின்ற நீண்ட சடையையும் அசையாத மெய்யையுமுடைய தவஞ்செய்பவர் போலே பலவும் வெயில் நிலைபெற்ற இடங்களில் அழகுபெறத் தோன்றாநிற்கும்; அருஞ்சுரம் நினக்கு எளியமன் - செல்லுதற்கரிய சுரம் நினக்கு மிக எளிய ஆகும் ஆதலின் நீயே சென்றுகாண்; பருந்துபடப் பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி - கொல்லும் பிணங்களிலே பருந்து விழுந்து அலைக்குமாறு பகைவருடைய தேர்ப்படையோடு போர் செய்து வென்ற பலவாய சருச்சரையுடைய நீண்ட கையையும் தலையேந்திய கோட்டினையுமுடைய யானைப்படையையுடைய புகழ்விரும்பிய கிள்ளி வயளவனது; வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த அரிசில் அம் தெள் அறல் அன்ன - புதுவதாக அலங்கரித்த உயர்ந்த கொடி கட்டிய அம்பர் நகரைச் சூழ்ந்த அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்ற; இவள் விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலன் - இவளுடைய விரிந்த தழைந்த கூந்தலின்கண்ணே துயிலுவதனைக் கைவிட்டுச் சிறிது பொழுதேனும் அமைகுவேன் அல்லேன்; எ - று.
(வி - ம்.) பாண்டில் - குதிரைப்பூட்டிய தேர். வம்பு - கொடியை வரிந்துகட்டும் கச்சுமாம். ஞெமிர்தல் - பரத்தல். ஆடாமேனி - அசையாது தியான நிலையிலிருக்கு முடம்பு. தீண்டி: தீண்டவெனத்திரிக்க. கொடுங்கவுள் கயவாய் இருஞ்செம் முடியவென மாறிக்கூட்டினுமமையும். பிணர் - சருச்சரை. ஆடவர் நெஞ்சைநோக்கிக் கூறுமிடமெல்லாம் அந்நெஞ்சினை ஆண் பாலாகக்கொண்டு கூறப்பெறுபவென்பது மரபாதலின் ஈண்டு நெஞ்சினை ஆண்பாலாகக் கூறிக்கொள்க. இது மறுத்துரைப்பதுபோல நெஞ்சொடு புணர்த்திக் கூறியது.
மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை.) 'இருஞ் சேறாடிய கொடுங்கவுள் . . . . . யானை' என்றும் பாடம். இப் பாடமே ஓதுதற்கினிதாதல் உணர்க. 'அரிசலந்தண் அறல்' என்றும் பாடம். அரிசிலாறு காவிரியின் கிளையாற்றில் ஒன்று. அதனை அரசலாறு என்று இக்காலத்தார் வழங்குப.
(141)