திணை : முல்லை.

    துறை : இது, வினைமுற்றிமீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, சென்று வினைமுடித்துமீளுந் தலைமகன், உடனே தலைவியைக் காணுமாசையாலே தேரை விரைவிலே செலுத்த வேண்டுமென்னுங் குறிப்புடனே தேர்ப்பாகன் கேட்குமாறு 'கற்பினையுடைய நம் காதலி உறையுமூர் ஈண்டுள்ள காட்டகத்ததா யிராநின்ற' தென உவந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
வானிகுபு சொரிந்த வயங்குபெயல் கடைநாள் 
    
பாணி கொண்ட பல்கால் மெல்லுறி 
    
ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் 
    
பறிப்புறத்து இட்ட பால்நொடை இடையன் 
5
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத் 
    
தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி 
    
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் 
    
புறவி னதுவே பொய்யா யாணர் 
    
அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் 
10
முல்லை சான்ற கற்பின் 
    
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே. 

     (சொ - ள்.) அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் - இராப்பொழுதாயிருப்பினும் வந்த விருந்தைக் கண்டு மகிழா நிற்கும் யான் கூறிய சொற்பிழையாதபடி இல்லிலிருந்து நல்லறஞ் செய்யும் கற்பினையும்; மெல் இயல் குறுமகள் உறைவின் பொய்யா யாணர் ஊர் - மென்மையாகிய சாயலையும் உடைய இளைய மாறாத நங் காதலி உறைகின்ற பொய்யாத புது வருவாயினையுடைய ஊரானது; வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடைநாள் - மழை காலிறங்கிப் பொழிந்த விளங்கிய பெயலின் இறுதி நாளிலே; பாணிகொண்ட பல்கால் மெல் உறி ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கி - கையிற் கொண்ட பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே தீக்கடைகோல் முதலாய கருவிகளை இட்டு வைத்த தோற்பையை ஒருசேரச் சுருக்கிக்கட்டி; பறிபுறத்து இட்ட பால் நொடை இடையன் - பனையோலைப் பாயோடு முதுகிற் கட்டியிட்ட பால் விலைகூறி ஏகும் இடையன்; நுண் பல் துவலை ஒருதிறம் நனைப்பத் தண்டுகால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி - நுண்ணிய பலவாய மழைத்துளி தன்னுடம்பிலொருபுறம் நனைத்தலைச் செய்யக் கையின் சோலையின்றி அதன்மேல் ஒருகாலை வைத்த ஒடுங்கிய நிலையோடு நின்று வாயைக் குவித்து ஊதும் 'வீளை' எனப்படுகிற அழைத்தலாகிய குறிப்பொலியை அறிந்து; சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் புறவினது - சிறிய தலையையுடைய யாட்டின் தொகுதி பிறபுலம் புகுதாது மயங்கி அவ்வண்ணமே தங்காநிற்கும் ஈண்டுள்ள புறவின் கண்ணதாயிரா நின்றது; ஆதலின் நமது தேர் விரைந்து செல்லின் அவளை இன்னே மகிழ்ந்து முயங்கலாகும்; எ - று.

     (வி - ம்.) பாணி - கை. இகுதல் - விழுதல். ஞெலிகோல் - தீக்கடைகோல்; கலப்பை - உபகரணம். அதள் - தோற்பைக்கு ஆகு பெயர். பறி - பனையோலைப்பாய். நொடை - விலை. சிறுதலை : யாட்டுக்கு அடையடுத்த சினையாகு பெயர். ஏமார்த்தல் - மயங்குதல். யாணர் - புதுவருவாய். யாணரூர் புறவினதெனக் கூட்டுக.

    அறம்புரிவார் நாடு ஆக்கம் மேம்படூஉம் என்பான் விருந்துவரின் உவக்கு முகத்தானே பொய்யா யாணரதென்றான்.

     உள்ளுறை :- பிறபுலம்புகுதும் யாட்டினம் இடையன் நின்று விளித்தலானே மீண்டு தங்காநிற்குமென்றது, சோர்வடைந்தொழியும் எனதுள்ளம் பாகன் விரைவிலே தேர்விடுதலால் அங்ஙனஞ் சோராதபடி தங்கா நிற்குமென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - பாகன் தேர்கடாவல்.

     (பெரு - ரை.) "ஒடுங்குநிலை மடிவிளி" என்பதற்கு யாடுகள் புறம்போகாமல் ஒடுங்கி நிற்கும் நிலையை அவற்றிற்கு உணர்த்த உதடுமடித்து எழுப்பும் குறிப்பொலியாகிய சீழ்க்கை எனினுமாம். தலைப்பெயல் தொடங்குமுன்னர் மீண்டு வருகுவல் என்று தேற்றிச் சென்றேன். இப்பொழுது அப் பருவம் கடந்து அப் பருவத்தின் கடைநாளும் வந்தெய்தியதுமன்! என்றிரங்குவான் 'பெயல் கடைநாள்' என்றான்.

    இனி மழைதுளிப்பவும், அதற்குப் பெரிதும் வருந்துமியல்புடைய யாடு இடையன் மடிவிளியை அறிந்து அதனைக் கடவாது அல்கினாற் போன்று எங் காதலியும் யான் ஆற்றியிருந்திடுக! என்று கூறிய என் கூற்றைக் கடவாது ஒருவாறு ஆற்றியிருப்பள்காண் என்பான், இடையன் விளியால் தொழுதி அல்கும் புறவு என்றான் என உள்ளுறை கோடலும் ஆம்.

(142)