திணை : பாலை.

    துறை : இது, மனைமருட்சி.

     (து - ம்,) என்பது, தலைவி தலைவனுடன்கூடி உடன்போயினளென்று செவிலிகூற அதனையறிந்த ஈன்ற தாய், "அஃது அறநெறிதானென்று கருதினளாயினும் அவளது ஆயமும், பயிலிடமும், கிளிகூவுதலுங் கண்டு துயர் தாங்ககில்லாளாய் என்மகள் வழுவிலள், அவள் கொண்ட காமம் வியப்புடையதே, அவள்காரணமாக முன்னமே அயலார்கூறும் பழிமொழியை அறிந்திருந்தும் அறியாதேன்போல இருந்தொழிந்தேனாதலால், யானே வழுவுடையே"னென வருந்தி மனையின்கணிருந்து மருண்டு கூறாநிற்பது,

    (இ - ம்.) இதனை, “தன்னும் அவனும் அவளும்.................நற்றாய் புலம்பலும் அவ்வழி யுரிய” (தொல், அகத். 36) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
ஐதே காமம் யானே ஒய்யெனத் 
    
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து 
    
ஓரை ஆயமும் நொச்சியுங் காண்தொறும் 
    
நீர்வார் கண்ணேன் கலுமும் என்னினும் 
5
கிள்ளையுங் கிளையெனக் கூஉம் இளையோள் 
    
வழுவிலள் அம்ம தானே குழீஇ 
    
அம்பன் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் 
    
இன்னா இன்னுரை கேட்ட சின்னாள் 
    
அறியேன் போல உயிரேன் 
10
நறிய நாறுநின் கதுப்பென் றேனே. 

     (சொ - ள்.) தரு மணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து - உழையர் கொணர்ந்த மணல் பரப்பிய அழகிய மாளிகையின் முன்றிலின்கண்; ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும் - ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும் ஆடிடமாகிய நொச்சி வேலியையும் காணுந்தோறும்; யான் ஒய்யென நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் - யான் விரைய நீர் வடிகின்ற கண்ணையுடையேனாகி அழுகின்ற என்னினுங்காட்டில்; கிள்ளையும் கிளை எனக் கூஉம் - அவள் வளர்த்த கிளியும் "அன்னாய்! துயிலுணர்தி" எனக் கூவா நிற்கும்; இளையோள் வழுவு இலள் - இவை நிற்ப என் இளம் புதல்விதானும் குற்றமே உடையள் அல்லள்; காமம் ஐது - அவள் கொண்ட காமம் மிகவியப்புடையதாய் இராநின்றது; அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் குழீஇ இன்னா இன்உரை கேட்ட சில் நாள் - அம்பல் மிக்க இப் பழைய ஊரின்கணுள்ள அலர்தூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியர் பலரும் ஒருசேரக்கூடிக் கூறுகின்ற கொடிய இனிய உரைகேட்ட சில நாளளவும்; அறியேன் போல உயிரேன் - யாதொன்றனையும் அறியாதேன் போல மூச்சுவிட்டேனுமில்லேன்; நின் கதுப்பு நறிய நாறும் என்றேன் - பின்னும் மிக அலர் எழுதலாலே ஒரோவொருகால் என்மகளை நோக்கி நின் கூந்தல் பண்டைமணமின்றி வேறு புதுமணம் கமழாநின்றதே அஃதென்ன காரணமென்று வினாவினேன்; தகுதியான விடை கூறினாளுமல்லள்; முன்னரே அவளது இயல்பை அறிந்து வைத்தும் பாதுகாவாமையின் யானே வழுவுடையேன் ஆயினேன்மன்; எ - று.

     (வி - ம்.) ஓரை - மகளிர் பாவைகொண்டு விளையாடுவது. ஞெமிர்தல்-பரவுதல். கிளைத்தல் - விளித்தல். ஐது - வியப்புடையது.

    கூழைக்கற்றைக் குழவிப்பிராயத்திலே பூத்தந்தானைத் தொடர்ந்து 'உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்' எனக்கொண்டு இவ்விளம் பிராயத்தே சென்றமை கருதி இவள்கொண்ட காமம் வியப்புடையதென்றாள். இன்னானுடன் இவள் களவொழுக்கமுடையாளெனப் பிறர் கூறுதலைக் கேட்டலால் இன்னாவுரை யென்றாள். பூவே புனலே களிறேயென்றிவை யேதுவாகத் தலைப்பெய்து போகிய அஃது அறத்தாறாதலின் இனியவுரையென்றாள். தலைமகன் வேற்றுநிலத்து மலரைக் கொணர்ந்து முடித்தலின் நின்கதுப்புப் புதுமணம் நாறுமென்றேனென்றாள். மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

     (பெரு - ரை.) கிளைஎன - அழைத்தாற் போன்று என்க. இதன் கண் நற்றாய் "அலர்வாய்ப் பெண்டிர் இன்னா இன்னுரை கேட்டும் தன் மகள் வழுவிலள் என்று உண்மகிழ்ந்து அறியேன் போல உயிரேன்" என்பது ஆற்றவும் இன்பந்தருதல் உணர்க. ஒரு செய்தியைப்பற்றிப் பேசாதிருப்போர் "யான் அதுபற்றி மூச்சுவிடாதிருந்தேன்" என்று கூறும்உலகியலும் உணர்க. பழிதூற்றுவோர் பேசுங்கால் நலங்கூறுவார் போன்று தாம்கூறும் பழியை இனிய மொழிகளிலே கரந்துவைத்துக்கூறுவர் ஆகலின் அலர்வாய்ப் பெண்டிர் இன்னா இன்னுரை என்றாள். கேட்டற்கினியவும் பயனால் இன்னாவுடையனவும் ஆகிய உரை என்றவாறு.

(143)