(து - ம்,) என்பது, இரவுக்குறிவந்து சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு அஞ்சி விரைய வரையுமாற்றானே தோழி, தலைவியை நோக்கி "அன்னை நமது களவொழுக்கத்தை யறிந்தவள்போல "அவன் யாங்குளன்", என்று கூறாநிற்பாள்; அன்றி நீ என்னாலுங் காப்பதற்குரியை; நமது சேரியின்கண்ணே இரவில் அவருடைய தேர்மணி யோசையு மொலிக்கும்; இதற்கு யாது செய்வே'னென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
| இருங்கழி பொருத ஈர வெண்மணல் |
| மாக்கொடி அடும்பின் மாயிதழ் அலரி |
| கூந்தன் மகளிர் கோதைக் கூட்டுங் |
| காமர் கொண்கன் நாமவெங் கேண்மை |
5 | அமைந்தே தில்லா ஊங்கு நம்மொடு |
| புணர்ந்தனன் போல உணரக் கூறித் |
| தான்யாங் கென்னும் அறனில் அன்னை |
| யானெழில் அறிதலும் உரியள் நீயும்நம் |
| பராரைப் புன்னைச் சேரி மெல்ல |
10 | நள்ளென் கங்குலும் வருமரோ |
| அம்ம வாழியவர் தேர்மணிக் குரலே. |
(சொ - ள்.) அம்ம வாழி - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக்கேள்!; இருங்கழி பொருத ஈர்வெள் மணல் மா கொடி அடும்பின் மா இதழ் அலரி - கரிய கழியின் கண்ணுள்ள நீர் அலையினால் மோதுதலானே ஈரமாகிய வெளிய மணலிலே படர்ந்த வலிய கொடி அடும்பின் பெரிய இதழையுடைய மலர்; மகளிர் கூந்தல் கோதைக் கூட்டும்-மகளிரின் கூந்தலிலிடுகின்ற மாலைக்குக் கூட்டாநிற்கும்; காமர் கொண்கன் - கண்டோர் விரும்புந் தன்மையுடைய கடல் நாடனாகிய நங்காதலனுடைய; நாம வெம் கேண்மை - அச்சந்தரும் வெய்ய நட்பானது; அமைந்து ஏது இல்லா ஊங்கும் - பண்டு பொருந்தியிருந்து இப்பொழுது யாதொரு தொடர்பும் நம்பால் இல்லாதிருந்தும்; அறன ் இல் அன்னை - நம் அறன் இல்லாத அன்னையானவள்; நம்மொடு புணர்ந்தனன் போல உணரக்கூறி - நம்மொடு அவன் புணர்ந்தனன் போல வெளிப்படையாகச் சொல்லி; தான் யாங்கு என்னும் - அவன் தான் இப்பொழுது யாங்குளன் என்று கூறாநிற்கும்; நீயும் எழில் யான் அறிதலும் உரியள் - அன்றி நீயும் நின் எழுச்சி முதலியன என்னால் அறிதற்கும் உரியள்; நம் பராரைப் புன்னைச் சேரி - நம்முடைய பருத்த அடியையுடைய புன்னை மரங்களையுடைய சேரியின்கண்; நள்ளென் கங்குலும் அவர் தேர் மணிக் குரல் மெல்ல வரும் - இரவில் நடுயாமத்திடையிருளிலும் அவர் தேரிலுள்ள மணியினோசை மெல்லவந்தொலியாநிற்கும்; இதற்கு யான் யாது செய்ய வல்லேன்? யாதாகி முடியுமோ; எ - று.
(வி - ம்.) மா - வன்மை, பெருமை. அலரி - பூ. நாமம் - அச்சம். எழில் - எழுச்சி.
கேட்டு அஞ்சிக் களவொழுக்கங் கைவிட்டு வரைவுடன்படுத்துவாள் அவனஞ்சியகலுமாறு அன்னை தேடித்திரிவது கூறினாள். தன் காவலொடு மாறுகொள்ளா திருக்கவேண்டுமென்பதை யறிவுறுத்துவாள் யானெழி லறிதலு முரியளென்றாள். மணியொலி கேட்டலானே தேடிய அன்னை தன் ஐயன்மார்க்குணர்த்த அவர்கண்டு ஏதம் இழைப்பாரென இன்னே அகன்று செல்க என்றாள். இது கேட்ட தலைமகன் இவள் நம்பால் அன்புடைமையினன்றே நம் ஏதத்துக்குக் கவன்று கூறினளென ஆற்றியகன்று பிற்றைஞான்று வரைவொடு புகுவானாவது. இஃதழிவில் கூட்டத் தவன்புணர்வு மறுத்தல்.
உள்ளுறை :- அடும்பின் அலரி மகளிர் கூந்தலிலே சேர்க்கப்படுமென்பது, நீ இவளைப் பலருமறிய மணந்து பூச்சூட்டிப் பெறுவாயென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) இதன் உரையில் நீயும் என்னும் சொல்லிற்கு உரையாசிரியர் கூறும் உரை விளக்கமின்றியுளது. அவர் அதனைப் பெயர்ச் சொல்லாகக் கருதுகின்றார் போலும். நீயும் என்பதனைப் பெயரெச்சமாகக் கோடல்கூடும். நீயும் - நீங்குகின்ற, இதனைச் சேரி என்னும் பெயர்கொண்டு முடித்திடுக. கங்குலும் என்புழி உம்மை பகல்வருதலே யன்றிக் கங்குலும் வரும் என்பதுபட நின்றது. அன்னை யான் எழுந்தால் அறிதலும உரியள் எனப் பொருள் கொள்க.
(145)