(து - ம்,) என்பது, தோழியை இரந்து குறைபெறாது வருந்தி மடலே பொருளென மதித்த தலைமகன் மீட்டும் தோழிகேட் டிரங்கிக் குறைமுடிக்கு மாற்றானே தன் நெஞ்சை நோக்கி 'மாயோளால் வருந்திய நெஞ்சே, மடற்பரியுடையாய், கதிர்வெயில் எறியொழியுமளவும் இம்மரத்தின் கீழே சிறிதுபொழுது இரங்கியிருந்து பின்பு செல்வாயாக' வென்று வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "மெய்தொட்டுப் பயிறல்" (தொல். கள. 11) என்னும் நூற்பாவின்கண் வரும் "தோழியைக் குறையுறும் பகுதியும்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| வில்லாப் பூவின் கண்ணி சூடி |
| நல்லே முறுவலெனப் பல்லூர் திரிதரும் |
| நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே |
| கடனறி மன்னர் குடைநிழல் போலப் |
5 | பெருந்தண் என்ற மரன்நிழல் சிறிதிழிந்து |
| இருந்தனை சென்மோ வழங்குக சுடரென |
| அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் |
| நல்லேம் என்னுங் கிளவி வல்லோன் |
| எழுதி யன்ன காண்டகு வனப்பின் |
10 | ஐயள் மாயோள் அணங்கிய |
| மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே. |
(சொ - ள்.) அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் நல்லேம் என்னும் கிளவி வல்லோன் - அன்போடு நெருங்கிய மகிழ்ச்சியையுடைய மாந்தர் நெருங்கிக்கூறு மீக்கூற்றால் யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரந்தீட்டுவதில் வல்ல ஓவியன்; எழுதி அன்ன காண் தகு வனப்பின் ஐயள் மாயோள் அணங்கிய - எழுதிவைத்தாலொத்த காட்சி தக்க அழகினையுடைய மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவளால் வருத்தம் ஏறட்டுக்கொண்ட; மையல் நெஞ்சம் - மயக்கத்தையுடைய நெஞ்சமே!; வில்லாப்பூவின் கண்ணி சூடி - விலைக்கு விற்றற்கியலாத பூளைமலரையும் உழிஞைப்பூவையும் எருக்கம்பூவையும் ஆவிரம்பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி; நல் ஏம் உறுவல் எனப் பல் ஊர் திரிதரும் - யான் நல்ல பித்தேறினேன் என்னும் படி பல ஊர்களிலுஞ் சென்று திரிகின்ற; நெடு மா பெண்ணை மடல் மானோயே - நெடிய கரிய பனைமடலாலே கட்டிய குதிரையையுடையாய்; என் மொழி கொளின் - நீ என் வார்த்தையை ஏற்றுக்கொள்ள விரும்புவையாயின்; சுடர் வழங்குக என - ஞாயிறுதான் வெயில் வீசி ஒடுங்குவதாக என்று அவ்வெயிலின் வெம்மை அடங்குமளவும்; கடன் அறி மன்னர் குடைநிழல் போலப் பெருந் தண் மரன் நிழல் - முறை தெரிந்து உலகைப் பாதுகாக்கும் அரசரின் குடைநிழல் குளிர்ச்சியுறுமாறுபோலே பெரிய தண்ணென்ற மரத்தின் நிழலின்கண்ணே; இழிந்து சிறிது இருந்தனை செல் - குதிரையினின்றிழிந்து சிறிது பொழுது தங்கியிருந்து பின்பு செல்வாயாக! எ - று.
(வி - ம்.) வில்லாப்பூ - விலைப்படுத்தற்காகாத பயனற்ற பூ; அவை பூளை, ஆவிரை, உழிஞை, எருக்கம் என்பன. "அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின், பிணையலங் கண்ணி மிலைந்து" (கலி 138) எனவும், "பூளை பொலமலர் ஆவிரை வேய்வென்ற, தோளா ளெமக் கீத்தபூ" (கலி 138) எனவும், "பூவல்ல பூளை யுழிஞையொ டியாத்த" (கலி 140) எனவும் வருவனவற்றாலறிக.
மடலேறியவழி தோழியாலும் பிறராலும் அறிவுறுத்தப்பட்ட தமர் மகட் கொடை நேரவேண்டுதல் மரபாதலின் தான் மடலேறிவந்ததனைத் தோழிக்கு அறிவுறுத்தினான். மாயோளால் அணங்கப்பட்டமையால் அவளையின்றித் தீராதென்னுங் குறிப்பால் மாயோள் அணங்கிய நெஞ்சமென்றான், "அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து" ஆதலின், நெஞ்சம் தன்மொழிக்கடங்காது ஒருபொழுது வரைபாயவுந் துணியுமென்னுங் குறிப்பால் என்மொழி கொளினெனத் துணியாது ஐயுற்றுக் கூறினான். இப்பாட்டுக் கந்தருவத்துட்பட்டு வழீஇய பெருந்திணை. மெய்ப்பாடு - அசைவுபற்றிய அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) நல் ஏமுறுவலனென எனற்பாலது நல் ஏமுறுவலெனக் கெடுதல் விகாரமெய்தி நின்றது. நல்ல பித்தேறியவன் என்று கண்டோர் கூறும்படி எனப் பொருள்கூறுக இங்ஙனமின்றி, நல்ல பித்தேறினே னென்னும்படி எனின் எழுவாய் பிழைபாடுறுதல் நுண்ணிதின் உணர்க.
இனி, ஆர்வ மாக்கட்கெல்லாம் யாம் நல்லேம் ஆயினேம் என்னும் தற்பெருமையைத் தன்னுட் கொள்ளுமளவிற்குப் புகழ்படைத்த ஓவியம் வல்லோன் என விரித்துப் பொருள் கூறுக; இங்ஙனம் அன்றி யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப் பெற்ற எனின், யாம் நல்லேம் என்னும் சொல் புகழ்ச்சொல் ஆகாமையும் உணர்க.
இனி, இதன்கண் "கடனறிமன்னர் குடைநிழல் போலப் பெருந்தண் மரநிழல் சிறிது இழிந்து இருந்தனை சென்மோ" என்ற பொருட்புறத்தே அவ்வாறிருந்துழி நம்நிலையை அருளுடைய இத் தோழி அறிகுவள்; அறிந்துழி அவள் தன் கடமையைச் செய்து தலைவியை நம்மோடு கூட்டுவள்காண்; ஆதலின் அவள் அறியும் பொருட்டுஞ் சிறிது இழிந்து இருந்தனை சென்மோ என்னும் இறைச்சிப் பொருளும் தோன்றுதல் அறிக.
(146)