(து - ம்,) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாதலையறிந்த தோழி, அவன் கேட்டு உடன்கொண்டுசெல்லவாவது வரைந்துகொள்ளவாவது கருதும்படியாகத் தலைவியை நோக்கி ஊரார் அலர் தூற்றலாலே அதனையறிந்த அன்னை ஒறுப்ப யான் வருந்துகின்றேனாதலால் கொண்கனோடு நீ செல்லுமாறு கருதுகின்றேன். அங்ஙனம் சென்றபிறகு இவ்வூர் யாது செயற்பாலது? வேண்டுமேல் அலர்கொண்டொழிகவென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "அனைநிலைவகை" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க. இனி முற்கூறிய விதியும் அமையும் எனக் கோடலுமாம். முன்னைவிதி தலைவன் தலைவியை உடன்கொண்டு செல்லுதற்பொருட்டுக் கூறியதெனற்கும், இவ் விதி வரைந்து கோடற்குக் கூறியதெனற்கும் ஆமென்க. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)
| சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி |
| மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி |
| மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் |
| சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப |
5 | அலந்தனென் வாழி தோழி கானல் |
| புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல் |
| கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ |
| நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு |
| செலவயர்ந் திசினால் யானே |
10 | அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே. |
(சொ - ள்.) தோழி வாழி மறுகின் பெண்டிர் சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி - தோழீ! வாழி! நம்மூர்த் தெருவிலுள்ள மாதர்களுள் ஓரோ வோரிடத்திற் சிற்சிலரும் ஒரோ வோரிடத்திற் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி; மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி அம்பல் தூற்ற - வியப்புடையார்போலத் தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றாநிற்கவும்; அன்னை சிறுகோல் வலந்தனள் அலைப்ப - அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து மெய்ம்மையாகுமெனக் கொண்டு சிறிய கோல் ஒன்றனை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; அலந்தனென் - இவையிற்றால் யான் மிக்க துன்பமுடையேன் ஆயினேன் காண்; கானல் புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் கடு மா பூண்ட நெடுந்தேர் கடைஇ - ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி கழியருகின் கண்ணதாகிய சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு - இரவு நடு யாமம் நள்ளிருளில் வருகின்ற இயன்ற தேரையுடைய கொண்கனொடு; யான் செலவு அயர்ந்திசின் - நீ செல்லுமாறு யான் உடன்படாநின்றேன் நீ எழுவாயாக!; இவ் அழுங்கல் ஊர் அலர் சுமந்து ஒழிக - அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் யாதுதான் செய்யற்பாலது? வேண்டுமேல் அலர் தூற்றிக் கொண்டு போகக் கடவதாக!; எ - று.
(வி - ம்.) இப்பாட்டுப் பலபடியாகப் பிறழ்ந்திருத்தலானே பாடபேதத்துக்குத் தக்கபடி உரை கூறிக்கொள்க.
வலந்தனள்-சுழற்றினளாகி: வினையெச்சமுற்று. அலந்தனென் - துன்புற்றேன். சுவல் - பிடரிமயிர். அம்பல் - சிலரறிந்த பழிச்சொல்.
தலைவி எட்டியுஞ்சுட்டியுங் காட்டப்படுங் குலத்தினளல்லளாதலால் வாயினாற்கூறலும் ஏறிட்டுப்பார்த்தலுங் குற்றமாகுமென்றஞ்சி்க் கடைக்கண்ணால் நோக்கிக் குறிப்பாகக் கூறுவது குறிப்பித்ததாம். அங்ஙனம் பெருங்குடியிலே பிறந்து பெருநாணமும் உடையளாயினாளொரு சிறுமி காமந் தலைக்கொண்டு உடன்போயினாளென்னையென வியப்பெய்தலின் மூக்கினுனியின்கண்ணே சுட்டுவிரல் சேர்த்தினமை கூறியதாம்; இதுவும் வாயினாலேகூற அஞ்சினமை குறிப்பித்ததாயிற்று. "அலரிற் றோன்றுங் காமத்திற்சிறப்பே" (தொல். பொ. 163) என்றபடி களவிடை யலராலே காமஞ்சிறக்குமாயினும் அன்னை அலைத்தலானஞ்சி உடன்போகப்படுதலின் ஊர் அலர்சுமந்தொழிகவென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - போக்கு உடன்படுத்தல். இரண்டாந் துறைக்கும் மெய்ப்பாடு - அது. பயன் - வரைவு உடன்படுத்தல்.
(பெரு - ரை.) 'சிறுகோல் வலத்தள் அன்னை' என்றும், 'கடுமான்பரிய கதழ்பரி கடைஇ' என்றும் பாடவேற்றுமையுண்டு.
இனி, இச் செய்யுளை ஆசிரியர் இளம்பூரணரும் ஆசிரியர் நச்சினார்க்கினியரும் தலைவி கூற்றாகவே கொண்டனர். இருவரும் "எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே" (தொல். அகத். 42) என்னும் நூற்பாவிற்குத் தலைவி கூற்றாகவே எடுத்துக்காட்டினர். இவருள் இளம்பூரணர் 'தலைவி உடன்போக்கு ஒருப்பட்டது' என்பர். நச்சினார்க்கினியர் 'அலரச்சம் நீங்கினமை கூறியது' என்பர்.
இனி, தலைவி தானே தலைவனொடு போவல் என்று கூறுதல் நாணழிவாய் வழுவாம் பிறவெனின் அற்றன்று. நாணினும் சிறந்த கற்பினைப் பாதுகாத்தலே அவள் கருத்தாதலின் வழுவன்றென்க. இதனை,
| “ ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் |
| பிரிதல் அச்சம் உண்மை யானும் |
| அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென்று |
| அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் |
| நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் |
| போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்" (தொல். பொருளியல். 29) |
எனவரும் நூற்பாவானும் அதற்கு ஆசிரியர் இளம்பூரணர் வகுத்த நல்லுரையானுந் தெளிக.
(149)