திணை : நெய்தல்.

     துறை : இது, வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவுகடாயது.

     (து - ம்.) என்பது, களவின்வழி யொழுகிய தலைவன் மணஞ் செய்துகொள்ளாது காலந்தாழ்த்தலும், தோழி அவனை நோக்கிச் சேர்ப்பனே ! நீ தலைவியின் நலத்தை யுண்டுணர்ந்தனையாய் இப்பொழுது அத்தன்மையை இன்மையா லுண்டாகிய அலரால் யாம் நாணழியா நின்றேமென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும்........வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் வகை என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
முழங்குதிரை கொழீஇய மூரி யெக்கர் 
    
நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள 
    
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப! 
    
பூவின் அன்ன நலம்புதி துண்டு 
5
நீயுணர்ந் தனையே அன்மையின் யாமே 
    
நேர்புடை நெஞ்சந் தாங்கத் தாங்கி 
    
மாசில் கற்பின் மடவோள் குழவி 
    
ஒய்ய வாங்கக் கைவிட் டாங்குச் 
    
சேணும் எம்மொடு வந்த  
10
நாணும் விட்டேம் அலர்கவிவ் வூரே. 

     (சொ - ள்.) முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம்போல - முழங்குகின்ற அலைகொணர்ந்து கொழித்த பெரிய எக்கர் மணலை நுணங்கிய துகிலின் நுடக்கத்தைப் போலாக; கணம் கொள ஊதை தூற்றும்-மிகுதி படக் காற்றுத் தூற்றாநிற்கும்; உரவு நீர்ச்சேர்ப்ப - நீர்மிக்க வலிய கடற்கரைத் தலைவனே! ; பூவின் அன்ன நலம் புதிது உண்டும் நீ உணர்ந்தனை அன்மையின் - பூப்போன்ற எமது தலைவியின் நலத்தைப் புதுவதாக நுகர்ந்து வைத்தும் நீ அறிந்தனையல்லையாகலின்; யாம் நேர்பு உடை நெஞ்சம் தாங்கத் தாங்கி - யாம் நினக்கு உடம்படுதலையுடைய எம்முள்ளத்தில் வருத்தமுற அதனையேற்று; மாசு இல் கற்பின் மடவோள் - குற்றமற்ற கற்பினையுடைய மடவாளொருத்தி; குழவி ஒய்ய வாங்கக் கைவிட்டாங்கு - தன் குழவியைப் பலிகொடுப்ப வாங்குதலும் அவள் அதனைக் கைவிட்டாற்போல; சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம்-முன்னாளின் முதற்கொண்டு எம்முடன் வளர்ந்துவந்த நாணும் விட்டேம். இவ்வூர் அலர்க - இனி இவ்வூர் அலர் எழுவதாக; எ - று.

     (வி - ம்.) ஒய்யுதல் - செலுத்துதல், ஈண்டுப் பலிக்கடன் செலுத்துதல். மூரி - பெருமை. உரவு - வலிமை. நெஞ்சந்தாங்கியென்றது ஆங்கு நெஞ்சழிதல். நலனுண்டு உணராமையாலே நன்றி மறந்தனை; இங்ஙனம் நன்றிமறந்த நின்னை அணுகியதன் பயன் உடனிருந்த நாண் ஒழியலாயதன்றி ஊரும் பழி கூறலாகியதென்றாள்.

     உள்ளுறை :- :- கடல்கொழித்து ஒதுக்கிய எக்கர் மணலிற் சிலவற்றைக் காற்று அள்ளித் தூற்றுதல்போல நின்னால் நீக்கப்பட்ட எம்மை ஊரார் அலர் தூற்றா நிற்பர் - அங்ஙனமே அலர்க என்றதாம். இவ்வுள்ளுறையில் நுடக்கம்போல என்ற ஏனையுவமம் 'கொழித்த எக்கர், ஊதை தூற்றும்' என்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது. அலரொழித்தல் வரைந்தன்றி யின்மையின் இது வரைவுகடாதலாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) நீ புணர்ந்தனையேம் அன்மையின் என்றும் பாடம். இதற்கு நின்னாற் புணரப்பட்டேம் போல்கின்றிலேம் என்க. நின்னாற் புணரப்பட்டேம் ஆயின் இன்புற்றிருப்பேம் அல்லமோ அங்ஙனம் இன்புறாமற்றுன்புறுகின்றோமாகலின் நீ புணர்ந்தனையேம் அன்மையின் என்றவாறு பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு என்றும் பாடம். இப் பாடமே சிறப்புடையது. நெஞ்சந்தாங்கத் தாங்கி என்பதற்கு, நெஞ்சந் தாங்குமளவிற்குத் தாங்கி என்பது பொருந்தும்.

(15)